Prabhakaran: ‘வருகிறதா பிரபாகரன் வீடியோ?’ பழ.நெடுமாறன் முக்கிய பேட்டி!
Pazha Nedumaran: ‘நான் பிரபாகரன் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டு, அவர் உயிரோடு இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறவில்லை. அவருடைய குடும்பத்தினரிடமிருந்து வந்த தகவலை வெளியிடுகிறேன் என்று தான் சொன்னேன்’ பழ.நெடுமாறன்!
புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பரபரப்பான பேட்டியளித்து, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய உழகத் தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன், அதன் பின் எழுந்த விமர்சனங்கள் பற்றி மய்யம் ஸ்டூடியோஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘பிரபாகரன் நன்றாக உயிருடன் தான் இருக்கிறார். 2009ல் முள்ளிவாய்க்கலில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இது ஒன்றும் புதிதல்ல. 1984 ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட முறை சிங்கள அரசும், ராணுவமும் இது போல் அறிவித்திருக்கிறார்கள். எதற்காக இதை செய்கிறார்கள் என்பது தான் முக்கியமானது.
புலம் பெயர்ந்த அதே நேரத்தில் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் மனஉறுதியை தகர்க்கவே இப்படி செய்தார்கள். அவர்களை அச்சம் அடைய செய்ய வேண்டும், எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த பொய் செய்தியை பரப்புகிறார்கள்.
இன்று பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஆனால் இதுவரை ஆதாரம் காட்டவில்லை. இதை நான் அன்றே கூறினேன். நான் மட்டுமல்ல கூறவில்லை, இந்தியாவின் தலைசிறந்த தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகரன் முதற்கொண்டு அதை தான் கூறினார்.
11 மணிக்கு பிரபாகரன் உடலை கைப்பற்றியதாக கூறிய இலங்கை ராணுவம், 11:30 மணிக்கு டி.என்.ஏ., சோதனையில் உறுதி செய்ததாக கூறியது. அப்போது டாக்டர் சந்திரசேகர் ஒரு பேட்டியை அளித்தார். ‘டிஎன்ஏ சோதனை ஒரு மணி நேரத்தில் செய்வதல்ல, 4 நாட்கள் ஆகும். டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டுமென்றால், இறந்தவரின் குடும்பத்தார் ரத்த மாதிரியை வைத்து தான் செய்ய முடியும், அதை விட முக்கியம் இலங்கையில் அந்த வசதியே கிடையாது. எங்களுக்கு தான் அந்த சோதனைகள் சென்னைக்கு வழக்கமாக அனுப்பப்படும்’ என்று பேட்டியளித்தார்.
டி.என்.ஏ., பரிசோதனை செய்யும் வசதியே இலங்கையில் இல்லாத போது, எப்படி பிரபாகரன் உடலை பரிசோதனை செய்திருக்க முடியும்? முன்னாள் பிரதமர் ராஜூவ் கொலையில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயர் இருந்தது. ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு மரண சான்றிதழ் வழங்கி, வழக்கிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும். ஏன் இதுவரை பிரபாகரனுக்கு இலங்கை அரசு மரண சான்று வழங்கவில்லை? குற்றப்பத்திரிக்கையில் இன்றும் பிரபாகரன் பெயர் உள்ளது.
நான் பிரபாகரன் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டு, அவர் உயிரோடு இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறவில்லை. அவருடைய குடும்பத்தினரிடமிருந்து வந்த தகவலை வெளியிடுகிறேன் என்று தான் சொன்னேன். நான் இதுவரை அவரை நேரில் பார்க்கவில்லை.
இந்த நவீன யுகத்தில் விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது. இங்கு உட்கார்ந்துவிட்டு நான் பேசுவதை அமெரிக்காவில் இருந்து கண்டுபிடிக்க முடியும். இந்த யுகத்தில் பிரபாகரன் போட்டோவோ, வீடியோவோ வெளியிட்டால் அதை கண்டுபிடித்து விடுவார்கள். யாருக்கு தெரிய கூடாதோ, அவர்களுக்கும் தெரிந்து விடும். அறிவியலை பற்றி தெரியாமல் இது போன்று ஆதாரங்களை கேட்கிறார்கள்.
பிரபாகரன் நன்றாக இருக்கிறார் என்றால், அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவராக சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். பிரபாகரன் பற்றிய அறிவிப்பு, தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களர்கள், ராணுவத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது,’’
என்று அந்த பேட்டியில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்