Pattukottai Kalyanasundaram: பாட்டாளிகளின் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pattukottai Kalyanasundaram: பாட்டாளிகளின் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்!

Pattukottai Kalyanasundaram: பாட்டாளிகளின் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 08, 2023 05:00 AM IST

காலப்போக்கில் கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்தார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

15 வயதில் ஏரிக்கரையில் விதை புனைந்தவர். விவசாயி, மாட்டு வியாபாரி, முறுக்கு வியாபாரி, மீன், நண்டு பிடித்தவர், நாடக நடிகன், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என தன்னை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எதற்கும் அலட்டிக்கொள்ளாத உழைப்புதான் வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பட்டுக்கோட்டையாரை இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் வைத்திருக்கிறது.

பிறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். துவக்க கல்வியை உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணை பள்ளியில் பயின்றார். ஆனால் அவருக்கு படிப்பில் பெரிதாக விருப்பம் இல்லாததால் படிப்பை நிறுத்தி விட்டார். தன் அண்ணனிடம் அடிப்படை கல்வி மட்டும் பயின்றார்.

காலப்போக்கில் கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது.

கவி பாடிய பட்டுக்கோட்டை

தன் 19 வயது முதல் கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டினார். இவரது பாடல்கள் கிராமத்து மக்களின் எளிய மொழியில் அவர்களது பாடுகளை உரத்து முழங்கின. பாட்டாளி மக்களின் ஆசைகளையும், கனவுகளையும் மிக நுட்பமாக திரைத்துறையில் புகுத்தியவர். அரசியலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களையும் தான் விரும்பிய அரசியலையும் ஜனங்களிடம் அவர்களது பாணியிலேயே எடுத்துரைத்தார். கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது.

திரைத்துறையில் பட்டுக்கோட்டை

1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி திரைத்துறையில் அழுத்தமாக கால் ஊன்றி முன்னேறினார். இன்றுவரை அழியாத ஆட்சியாளர்களை கேள்வி எழுப்புகிற ஏராளமான பாடல்களை இயற்றினார். அதைவிட தமிழகத்தில் திரை ஆளுமையாக பார்க்கப்பட்ட எம்ஜிஆர் ஆட்சிக்கட்டிலில் அமர ஒரு காரணம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் மிகையல்ல. தான் நம்பிய பொதுவுடைமை சிந்தாந்தைத்தை துணிச்சலாக திரையில் பேசிய கவிஞர் பட்டுக்கோட்டை.

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் என்று பாட்டாளி மக்களின் வியர்வையும் கண்ணீரையும் பாடி நிலப்பிரப்புகளின் தூக்கம் கலைத்த சத்தியக் கவிஞர்.

தூங்காதே தம்பி தூங்கதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே ...

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

திருடாதே பாப்பா திருடாதே.. எக்காலத்திற்குமான குழந்தைகளுக்கான அறிவுரையை வழங்கினார்.

புகையும் நெருப்பும் இல்லாமல் எரிவது எது? பசியில் வாடும் மக்கள் வயிறுதான் அது என பசியின் கொடுமையை பேசினார்.

இது போல எம்.ஜி.ஆர் - ன் திரை வாழ்க்கை வழி பட்டுக்கோட்டையின் பாடல்கள் ஒவ்வொன்றும் எம்.ஜி.ஆர் - ன் அரசியல் வெற்றிக்கான விதை என்றால் மிகையல்ல. அதைத்தான் எம்ஜிஆர் தன் முதல்வர் நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றார். இப்படி பட்டுக்கோட்டையின் பாடல்கள் திரையுலகில் வெற்றி நடை போட்டதற்கு காரணம் அவரது கற்பனை நயமோ, அதிசய வைக்கும் உவமைகளோ அல்ல.

பாமரர்களின் நெஞ்சங்களில் பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையின் பாடல் வழி பாமரன் புலம்பினான். ஒரு விவசாயி தன் வலியை பேசினான். தொழிலாளி போர் குரல் எழுப்பினான். ஏழை எளிய மக்களுக்கான நீதிக்காக வானத்தை நோக்கி கடவுளை தேடுவது போல திரை வழி பார்வையாளர்களை நோக்கி தன் வேண்டுதலை முன் வைத்தார் பட்டுக்கோட்டை. அதனால் தான் பட்டுக்கோட்டை பாடல்கள் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமானது. இந்த உலகில் ஏழை பணக்காரர் வித்தியாசம் உள்ள வரை, முதலாளி தொழிலாளி வர்க்கம் இருக்கும் வரை பட்டுக்கோட்டை என்ற அந்த மகத்தான கவிஞன் தன் படைத்திட்ட பாடல்கள் வழி உலகில் அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்புவான். அறம் பாடுவான் என்றால் மிகையல்ல.

பட்டுக்கோட்டையின் வரலாறு

ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவர் பட்டுக்கோட்டையிடம் கவிஞரே உங்கள் வாழ்க்கை வரலாற்று தொடரை எழுத வேண்டும் என்று தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது அந்த பத்திரிகையாளரையும் அழைத்து கொண்டு முதலில் நடந்து சென்றார், பின் சைக்கிள் ரிக்ஷாவில் சென்றார். பின்னர் பேருந்தில் ஏறி சென்றார். பின் காரில் ஏறி தன் பாடல் பதிவாகும் ரெக்காடிங் ஸ்டூடியோவிற்கு சென்றார். அப்போது அந்த பத்திரிகையாளர் சுய சரிதை என்று நியாபக படுத்திய போது முதலில் நடந்தேன்; ரிக்ஷாவில் சென்றேன்; பேருந்தில் சென்றேன்; இப்போது காரில் செல்கிறேன்; இதில் எங்கே இருக்கிறது வரலாறு என்றார். அவர் அப்படித்தான். மக்களின் எதார்த்தை எழுதியதால் தான் இன்றும் நிலைத்திருக்கிறார்.

மறைவு

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். அவரது நினைவு நாளான இன்று அவர் கடந்து வந்த பாதைகளை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.