நெடுநாள் காத்திருப்பு.. சர்ச்சை படைப்பு.. அவரும் இல்ல.. இவரும் வேண்டாம்..அடுத்த பட ஹீரோவை அறிவித்த பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் தன்னுடைய அடுத்தப்படைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரின் அடுத்தப்பட ஹீரோவை குறித்தும் பேசி இருக்கிறார்.
தினேஷ் நடித்த ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் இயக்குநராக திரைத்துறைக்கு அறிமுகமானவர் பா.ரஞ்சித். தொடர்ந்து, ‘மெட்ராஸ்’ ‘கபாலி’ ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ‘தங்கலான்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நட்சத்திர இயக்குநர் ஆனவர், ‘பரியேரும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘ஜே. பேபி’, ‘ ‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட திரைப்படங்களை நல்ல தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தன் படைப்பு வழியாகவும், பொது வெளியிலும் குரல் கொடுத்து வரும் இவர் ஏற்கனவே கமலுடன் ஒரு திரைப்படம், சார்பட்டா பரம்பரை 2, ரன்வீர் சிங்குடன் பிர்சா முண்டா ஆகிய திரைப்படங்களில் கமிட் ஆகியிருந்தார். இதில் எந்த திரைப்படத்தை முதலில் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாகி இருக்கும் நிலையில் பா.ரஞ்சித் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ரஞ்சித், தன்னுடைய அடுத்த திரைப்படம் ‘வேட்டுவம்’ என்றும் அதில் நடிகர் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவித்து இருக்கிறார். ‘அட்டக்கத்தி’ திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில், ‘கபாலி’ திரைப்படத்தில் மட்டும் தினேஷ் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா.ரஞ்சித்துடன் இணைந்து இருந்தார்.
அதன் பின்னர் இந்தக்கூட்டணி இணையாமலேயே இருந்தது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி தற்போது இணைந்து இருக்கிறது. அண்மையில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அந்தப்படத்தில் இவர் ஏற்று நடித்த ‘கெத்து தினேஷ்’ கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
முன்னதாக, வாழை படத்தின் இசை வெளியீட்டு விழா பேசிய பா.ரஞ்சித் உதவி இயக்குநராக இருக்கும் போது தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி பேசினார்.
அவர் பேசும் போது, “எனக்கு மாரி செல்வராஜ் மேலிருக்கும் பொறாமையை விட, ராம்சாரின் மேல் இருக்கும் பொறாமைதான் அதிகம். காரணம் என்னவென்றால், ஒரு உதவி இயக்குநராக நாம் இருக்கும் பொழுது, நாம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட முடியுமா என்ற கேள்வி இங்கு இருக்கிறது. நான் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கும் பொழுது, என்னுடைய படங்கள், என்னுடைய வாழ்க்கை பற்றித்தான் பேச வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
அப்படி இருக்கும் பொழுது இங்கிருக்கும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பது, இங்கிருக்கும் திரைப்பட மாஸ்டர்களை பற்றி பேசுவது உள்ளிட்ட இடங்களை, நான் தேடித்தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருந்தது. உலகத்திரைப்படங்களில் தலித் சினிமா உலக திரைப்படங்களில் இலக்கியங்களில் தலித் சினிமாக்கள் பற்றிய வாதங்கள், பேச்சுக்கள் இருந்தன. ஆனால், தமிழ் சினிமாவில் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதும் பொழுது அதில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவது போன்ற காட்சி ஒன்றை எழுதி இருந்தேன்.
அதை படித்தவர்கள் நீங்கள் அந்த பக்கத்தை மட்டும் கிழித்துப் போட்டு விடுங்கள். இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்று என்னிடம் கூறினார்கள். அதனால் தான் நான் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்கள் யாரிடமும் செல்லவே இல்லை. அதனால்தான் நான் எந்த ஒரு பிரபலமான ஹீரோவிடமும் செல்லவில்லை." என்று பேசினார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்