Vijay fans: தமிழ்நாடு முழுக்க விஜய் பேரில் இலவச உணவு; சொன்னதை செய்த ரசிகர்கள்!
தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மதிய உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு வருடமும் மே 28 ஆம் தேதியான இன்றைய தினம் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழைகளின் பசியை போக்கிடும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்காக உணவு வழங்குமாறு நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில், “ மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மதிய உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி முதற்கட்டமாக திருச்சியில் இந்த திட்டத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களால் இன்று செயல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் சாலையோரம் உள்ள ஏழை எளிய மக்கள் உட்பட பலருக்கும் உணவு கிடைத்தது.
குறிப்பாக விருத்தாலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்வில் அஜித் ரசிகர்களும் பங்கேற்றனர்.
டாபிக்ஸ்