Karthi Birthday: கார்த்தி பிறந்தநாள்; கரம்கோர்க்கப்போகும் ரசிகர்கள்;ரெடியாகும் ராஜீவ் காந்தி மருத்துவமனை- விபரம் உள்ளே!
Karthi Birthday: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன - கார்த்தி பிறந்தநாள் ஏற்பாடு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
உதவிகள் செய்யும் கார்த்தி
பிரபல நடிகர் சூர்யாவின் சகோதரரான இவர், அவரின் அகரம் அறக்கட்டளை வாயிலாக, குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். அத்துடன் உழவன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, அதன் வாயிலாக விவசாயத்திற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
இவரது ரசிகர்களும் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
கார்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்:
இந்த நிலையில், வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக இவரது ரசிகர்கள், தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.
முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து மே-19, மே-26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்துகள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
குறிப்பாக மே 25 ஆம் தேதி கார்த்தியின் ரசிகர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், இரத்த தானம் மற்றும் உடல் தானம் செய்ய இருக்கிறார்கள். நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் செயலை பொது மக்கள் பலரும் கார்த்தியையும், அவரது ரசிகர்களையும் வாழ்த்தி பாராட்டி வருகிறார்கள்.
முன்னதாக, ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான கார்த்தி, தொடர்ந்து ‘பையா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, 'சிறுத்தை’ , ‘நான் மகான் அல்ல’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ‘ கொம்பன்’ ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வளர்ந்தார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இவரது கைவசம் ‘சர்தார் 2’ ‘ கைதி 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கின்றன. இவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. அது குறித்து அந்தப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி அளித்த பேட்டி இங்கே!
இயக்குநர் N. லிங்குசாமி கூறுகையில், “18 நாட்களில் ‘பையா’ திரைப்படத்தின் கதையை தயார் செய்தேன். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் போய், இந்த கதையை கூறினேன். முதல் காட்சியில் சிரிக்க ஆரம்பித்தவர், முழு கதையையும் கேட்டு கலகலகவென்று சிரித்தபடி, இதை நாம் செய்வோம் என்று கூறினார். இந்த கதை உருவாகும்போதே ‘பையா’ என்கிற டைட்டிலும் கிடைத்து விட்டது.
பையா டைட்டில் யோசிக்கும்போது, ஏற்கனவே கார்த்திக்கு பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என கொஞ்சம் பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது. இது கொஞ்சம் சிறிதாக, கூலாக இருக்க வேண்டும் என நினைத்தோம். இது போன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த டைட்டிலை கூறினேன். என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.. எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது.
படம் முதல் முறை ரிலீஸ் ஆகும்போது அவ்வளவு சந்தேகங்கள். டென்ஷன் இருந்தது. இந்த முறை படம் பார்த்தபோது ரொம்பவே ரிலாக்ஸாக இருந்தது. ஒவ்வொரு பட ரிலீஸும், ரீ ரிலீஸ் போல இருந்து விட்டால் எப்படி இருக்கும் என நினைத்தேன்.
பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதிலும் “அடடா மழை டா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் போட சொன்னார்கள். கடைசியில் என்ட் கார்டில் போடப்படும் பாடலுக்கு கூட ஒன்ஸ்மோர் கேட்டு, பல பேர் அங்கேயே நின்று விட்டார்கள். தமன்னாவின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கை தட்டுகிறார்கள்.
அந்த பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது, அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால், கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால், இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்கச் சொல்லி, எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார் தமன்னா
இந்த படத்திற்கு இந்த இரண்டு நடிகர்களின் ஒத்துழைப்பும் ரொம்பவே முக்கியம். பையா படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான்.. அவருக்கு முதல் பெரிய ஹிட் பையா தான். பருத்திவீரன் பாடி லாங்குவேஜில் இருந்து மாறுவதற்கு கார்த்தி ரொம்பவே சிரமப்பட்டார்.
இந்த படத்திற்காக மூன்று கார்களை வாங்கினோம். ஒரு பெரிய ட்ரக் ஒன்றை மும்பையில் இருந்து வரவழைத்து கார்களை எங்கள் வசதிக்கேற்ற மாதிரி பிரித்து, அதில் காட்சிகளை படமாக்கினோம். படம் வெளியான பிறகு இயக்குநர் பிரியதர்ஷன் என்னிடம் ஒருமுறை பேசும்போது, இது போன்ற டிராவல் படங்களில் பல காட்சிகளை ஒரே இடத்தில் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு ஷாட் கூட நீ ஏமாற்றி எடுக்கவில்லை என்று கூறினார். அவ்வளவு பெரிய இயக்குநர் அப்படி கூறியபோது சந்தோசமாக இருந்தது. அந்த அளவுக்கு டெக்னிக்கலாக இந்த படத்தை எடுத்தோம்.
பையா 2 படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். 14 வருடங்கள் ஆகிவிட்டதே இப்போதுதான் தெரிகிறது. ஆனால் இந்த 14 வருடங்களில் கார்த்தியின் நடிப்பில், தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதாலும், ஒரு குழந்தைக்கு அப்பாவாக கூட நடித்து விட்டார் என்பதாலும் மீண்டும் பையா கதாபாத்திரத்தை திரும்பி பண்ண வேண்டுமா என யோசிக்கிறார். அதனால் இதற்கு பதிலாக வேறு ஏதாவது பண்ணலாமா என்று கேட்டுள்ளார்.
பையா 2 படத்தில் கார்த்தி சார் நடிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால் பையா 2விலும் கார் இருக்கும்.. ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்று கூறினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்