Mysskin: ‘என் மகளின் யோனிதான் இந்தப்படம்.. நிர்வாணமாக ஆடுவதற்கு நான் தயார்..’ - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்!-mysskin latest speech about soori sivakarthikeyan ps vinoth raj kottukkali audio launch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mysskin: ‘என் மகளின் யோனிதான் இந்தப்படம்.. நிர்வாணமாக ஆடுவதற்கு நான் தயார்..’ - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்!

Mysskin: ‘என் மகளின் யோனிதான் இந்தப்படம்.. நிர்வாணமாக ஆடுவதற்கு நான் தயார்..’ - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 13, 2024 04:45 PM IST

Mysskin: “தமிழில் இருக்கக்கூடிய பெண்கள் எல்லாம் நல்ல படங்களுக்கு நடிக்கவே வருவதில்லை. சார் எனக்கு இரண்டு பாடல்கள் இருக்கிறதா? மூன்று டான்ஸ் இருக்கிறதா சார்? என்று கேட்கிறார்கள்.” - கொந்தளித்த மிஷ்கின்!

Mysskin: ‘என் மகளின் யோனிதான் இந்தப்படம்.. நிர்வாணமாக ஆடுவதற்கு நான் தயார்..’ - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்!
Mysskin: ‘என் மகளின் யோனிதான் இந்தப்படம்.. நிர்வாணமாக ஆடுவதற்கு நான் தயார்..’ - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்!

உண்மை பேச வந்திருக்கிறேன்.

அவர் பேசும் போது, “மேடையில் பேசும் பொழுதாவது நாம் உண்மையை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால், வீட்டில் நாம் நிறைய பொய் பேசுகிறோம். இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். அவ்வளவு தைரியத்தையும், நெஞ்சுரத்தையும், ரத்தத்தில் கொதிப்பு நிலையையும் எனக்குள் கொண்டு வந்திருக்கிறது இந்த கொட்டுக்காளி திரைப்படம்.

நிறைய படங்களின் விழாக்களில் நான் மிகவும் கோபமாக பேசி இருக்கிறேன். குறிப்பாக, வழக்கு எண் 18/9 பட நிகழ்ச்சியின் போது, நான் மிகவும் கோபமாக பேசி இருந்தேன். சமூகத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதே என்ற ரீதியில் என்னுடைய பேச்சு அதில் அமைந்திருந்தது. அப்போது என்னை பலரும் கேலி செய்தார்கள். ஆனால், பாலாஜி சக்திவேல் எப்படிப்பட்ட கலைஞன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

வினோத் இந்தப் படத்திற்கு ஏன் கொட்டுக்காளி என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன் பட பூஜையின் போது தான் நான் வினோத்தை சந்தித்தேன். அப்போது அவன் தன்னுடைய கூழாங்கல் படம் குறித்து பேசும் போது நான், ஆமாம் எல்லோரும் அந்தப் படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறாய் என்று கேட்பதற்குள், அவன் அடுத்தப்படத்தை ஆரம்பித்து விட்டதாகச் சொன்னான். உண்மையில் அப்போது நான் கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டு படம் எடு என்று சொல்ல வந்தேன்.

படத்திற்கு இசையமைப்பாளர் இல்லையா?

இதையடுத்து, நான் படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று கேட்டேன். அதற்கு அவன் யாரும் கிடையாது என்று சொன்னான். அதை கேட்ட போது, இவன் என்ன பெரிய ஆள் போல பேசுகிறான் என்று தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி திரைப்படத்தை பார்த்த பொழுது, வினோத் என்னை செருப்புக் கழற்றி அடித்திருக்கிறான் என்பது தெரிய வந்தது.

நான் தற்போது இரண்டு படங்களை பார்த்திருக்கிறேன். ஒன்று மாரிசெல்வராஜ் இயக்கிய வாழை. அந்தப்படத்தை பார்த்த போது, கிட்டத்தட்ட ஒரு வாரம் எனக்கு தூக்கமே இல்லை. பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். கொட்டுக்காளி படத்தை பார்த்த பின்னர், எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்து விட்டது. அவன் தன்னுடைய படத்திற்கு இசையமைப்பாளர் வேண்டாம் என்று முடிவு எடுத்தது ஏதோ குருட்டாம்போக்கில் எடுத்தது அல்ல.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறேன். என்னுடைய குழந்தை பிறந்த பொழுது நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அதே மகிழ்ச்சியை இந்தப் படத்தை பார்த்த பின்னர் நான் அடைந்தேன். இந்தப் படத்தை மக்கள் வந்து பார்ப்பதற்காக நான் நிர்வாணமாக ஆடுவதற்கு கூட தயாராக இருக்கிறேன். சினிமா பார்க்க வருவதே நிர்வாணமாக ஆடுவதை பார்ப்பதற்காகத்தானே.

தாயின் கருவறை

என்னுடைய அம்மா ஒவ்வொரு காய்கறியையும் எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று சொல்லித் தந்திருக்கிறார். ஆனால், இன்று நம் சமூகம், கலைப்படைப்பை மட்டும், வெகுஜன சினிமாவாக மட்டுமே பார்க்க பழகிவிட்டது. இன்று 16 வயதினிலே போன்ற திரைப்படத்தை எடுத்தால் ஓடுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. இந்தத் திரைப்படம் என்னுடைய தாயின் கருவறை. இந்தத்திரைப்படம் என் மகளின் யோனி. நான் வினோத்தின் காலை தொட்டு முத்தமிடும் அளவுக்கு அவன் இந்த படத்தை எடுத்திருக்கிறான்.

ஒரு படமானது நல்ல கதையை கொண்டிருக்க வேண்டும். என்டர்டைனிங்காக இருக்க வேண்டும். தற்போது மூன்றாவதாக, ஒரு படமானது எக்சைட்டிங்காகவும் இருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இது மூன்றுமே, இந்த படத்தில் இருக்கிறது. நீங்கள் உங்கள் பார்வையை கொஞ்சம் வேறு மாதிரி வைத்து பார்க்க வேண்டும். இந்தத் திரைப்படத்தில் ஒரு சேவல் ஒன்று நடித்திருக்கிறது.

27 வருடத்தில் இரண்டு மொமெண்டுகளை தான் நான் உருவாக்கி இருக்கிறேன். ஆனால் வினோத் இந்த படத்தில் 60 சீன்களையுமே, 60 மொமென்டுகளாக மாற்றி இருக்கிறான். நல்ல கதை ஆசிரியர் தோற்கப்படுவதில்லை. சமூகத்தால் கொலை செய்யப்படுகிறான்.பெருஞ் செல்வத்திற்காக அல்லாமல், சமூகத்தின் இதயத்தை கொஞ்சம் தொட வேண்டும் என்பதற்காகவே, வினோத் இந்தப் படத்தை எடுத்திருக்கிறான். இந்த படத்திற்காக பத்திரிக்கையாளர்கள் வினோத்திற்கு கோயில் கட்டலாம். இந்த சமூகம் அவனை கொலை செய்திருக்கலாம். ஆனால் அதிலிருந்து அவனை தப்பிக்க வைத்தது நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனால் நடிக்க முடியாது.

சிவகார்த்திகேயன் ஒரு முதன்மையான நடிகர். கடுமையான உழைப்பாளி. அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. காரணம் என்னவென்றால், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் குவிந்து விட்டது. அதற்கான வேலைகளை அவர் பார்க்க வேண்டும். ஆனால் அவன் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்து கூழாங்கல் படத்தை பார்த்த பிறகு, இந்தப்படத்தை அவன் எடுத்திருக்கிறான். அதற்காக அவனுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும்.

 

தமிழில் இருக்கக்கூடிய பெண்கள் எல்லாம் நல்ல படங்களுக்கு நடிக்கவே வருவதில்லை. சார் எனக்கு இரண்டு பாடல்கள் இருக்கிறதா? மூன்று டான்ஸ் இருக்கிறதா சார்? என்று கேட்கிறார்கள். தமிழில் இப்படியான படைப்புகளுக்கு பெண்கள் இல்லாததால், பஸ் ஏறி போய் அன்னா பென் என்ற சிறுக்கியை அழைத்து வந்திருக்கிறான் வினோத். அவள் ஒரு பேய் அரக்கி. அவளுக்கு இந்தப்படத்திற்காக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று நான் அவளை ஆசீர்வதிக்கிறேன்.

சூரிக்கு அருள் ஏதும் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஒரு காமெடியனாக வந்து, அவன் தற்போது ஒரு மிகச்சிறந்த நடிகனாக மாறிவிட்டான். தமிழ் சினிமாவின் இரு முக்கியமான நடிகர்களாக சூரியையும், விஜய் சேதுபதியையும் நான் பார்க்கிறேன். 67 நாட்கள் நான் விஜயுடன் ட்ரெயின் படத்தில் பணியாற்றினேன். ஒரு நாள் கூட எனக்கும், அவனுக்கும் இடையே உரசல்கள் வரவில்லை. வினோத் மிகச்சிறந்த ஒரு அரசியல் திரைப்படத்தை எடுத்திருக்கிறான். தயவு செய்து வந்து படத்தை பாருங்கள்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.