Director Nithilan Journey: முதல் கதை நிராகரிப்பு..வாய்ப்பை பெற்று தந்த குறும்படம் - நிதிலன் சுவாமிநாதன் சினிமா பயணம்
Director Nithilan Swaminathan Journey: முதல் கதை நிராகரிப்பு, வாய்ப்பை பெற்று தந்த குறும்படம் என தனது சினிமா பயண அனுபவத்தை விவரித்துள்ளார் மகாராஜா படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன்
குறும்படங்கள் மூலம் தங்களது திறமையை நிருபித்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆனவர்களில் நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் மோகன் உள்பட பலரும் இருக்கிறார்கள். இவர்களுக்கான களமாகவும், நுழை வாயிலாகவும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சி அமைந்தது.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தனது குறும்படங்களால் கவனத்தை ஈரத்து இயக்குநர் ஆனவர் நிதிலன் சுவாமிநாதன். இதையடுத்து பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநராக முதல் பட வாய்ப்பை பெற்றது பற்றி அவர் கூறியுள்ளார். இதுகுறித்து நிதிலன் சுவாமிநாதன் கூறியதாவது:
"விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து நண்பர்களுடன் இணைந்து விளம்பர ஏஜென்சியில் பணியாற்றினேன். அப்போது சில்லுன்னு ஒரு காதல் படத்தின் கிருஷ்ணாவின் தொடர்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான சிறு சிறு படங்களிலும் பணியாற்றினேன். இது ஒரு சிறந்த அனுபவமாகவே அமைந்தது. அத்துடன் ஒரு விதமான நம்பிக்கையும் கிடைத்தது.
உதவி இயக்குநர் முயற்சி
கே.வி. ஆனந்திடம் உதவி இயக்குநராக ஆக முயற்சித்தேன். அதன் பிறகு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதை பார்த்து நிகழ்ச்சி ஜட்ஜ் ஆக இருந்த சுந்தர் சி பாராட்டினார். அகிரோவ் குரோசோவா படம் போல் இருப்பதாக சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றேன். புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற படத்தை இயக்கினேன். இதற்காக வெற்றியாளர் விருதை இயக்குநர் சிகரம் பாலசந்தர், கமல்ஹாசன் கைகளில் இருந்து பெற்றேன். அவரை அப்போதுதான் முதலில் பார்த்தேன்.
முதல் கதை நிராகரிப்பு
ஜேவி மிடியா நிறுவனம் என்னை வைத்து படம் தயாரிப்பதாக இருந்தனர். அவர்களிடம் ஒரு கதை கூறினேன். அவர்கள் அதை படமாக்க தயங்கினார்கள். ஆனால் எனக்கு கதை மீது நம்பிக்கையாக இருந்ததால் விடாப்பிடியாக இருந்தேன்.
இதன் பின்னர் இந்த கதையை சாந்தனுவிடம் கூறினேன். ஆனால் அவருக்கும் கதை பிடிபடாமல் போனது. பின்னர் தான் குரங்கு பொம்மை கதையை உருவாக்கினேன். நான் முதலில் சொன்ன கதையின் முக்கிய விஷயத்தை வைத்து உருவாக்கியது தான் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா படம். பலரது நிராகரிப்பால் கிடைத்த அனுபவத்தால் மகாராஜா கதையை நன்கு மெருகேற்ற முடிந்தது.
நாளைய இயக்குநர் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றேன். எட்டு தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், மண்டேலா மடோன் அஸ்வின், சுல்தான் பாக்யராஜ் கண்ணன், ஓ மை கடவுளே அஸ்வத் நாரயணன், காளிதாஸ் படம் ஸ்ரீசெந்தில் போன்ற பலரின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.
குரங்கு பொம்மை கதை இன்ஸ்பிரேஷன்
மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு பொண்டாட்டி தலையை வைத்தவாறு ஒருவர் வந்து, கள்ள உறவில் இருந்த அவளை கொலை செய்து விட்டதாக கூறுவார். அதேபோல் ஒரு பையில் தலை இருக்க, அதை அந்த நபரின் உறவினரே வைத்திருப்பது போலும், ஏன் அப்படி நடந்தது என்பது விரிவாக சொல்லும் விதமாகும் குரங்கு பொம்மை கதையை உருவாக்கினேன். இதுதான் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.
இந்த படம் உருவாக முழு காரணமாக விதார்த் இருந்தார். எனது குறும்படம் பார்த்து எமோஷனல் ஆன விதார்த் என்னை அழைத்து பேசினார். பின்னர் என்னிடம் கதையை கேட்டு அவர்தான் தயாரிப்பாளரிடம் அழைத்து சென்று வாய்ப்பு பெற்று தந்தார்.
பாரதிராஜா நடிக்க வேண்டும் என முடிவு செய்து அவர் சந்தித்தேன். அவரை பார்த்தவுடன் எனது குறும்படங்களை காண்பித்தேன். என்னை வெகுவாக பாராட்டினார்.
பின் குரங்கு பொம்மை கதையை சொன்னேன். என் தோள் மீது கை போட்டு பதட்டத்தை குறைத்தார். அவர் மீது பணியாற்றியது சிறந்த அனுபவம். சினிமா தவிர தனிப்பட்ட விஷயங்களையும் பேசுவார்.
அதேபோல் புதிய முகமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து, கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என தயாரிப்பாளர் பி.எல். தேனப்பனை தேர்வு செய்தேன். இப்படிதான் படம் உருவாகியது" என்றார்.
சிறந்த த்ரில்லர்
நிதிலன் சுவாமிநாதன் முதல் படமான குரங்கு பொம்மை சிறந்த த்ரில்லர் படமாக அமைந்திருக்கும். படத்தில் பாரதிராஜா, விதார்த், தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், குமரவேல், டெல்னா டேவிஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
சாமி சிலை கடத்தல், பணத்துக்காக நடக்கும் கொலை, அதற்கான பழிவாங்கல் தான் குரங்கு பொம்மை படத்தின் ஒன்லைன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது.
இந்த படத்தை தொடர் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தனது இரண்டாவது படமாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் மகாராஜா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்