"நான் பாடுன பாட்ட கேட்டு மாமியாரோட ஓரே சண்ட.. என் பொண்டாட்டிக்கு அந்த அறிவு எல்லாம் இல்ல".. ரகசியம் சொன்ன தேவா
கோவில் திருவிழாவில் தேவா பாடிய பாடலைக் கேட்ட அவரது மாமியார், அவரிடமும் அவரது மகளிடமும் சண்டைக்கு வந்ததாக தேவா கூறியுள்ளார்.
தேனிசைத் தென்றலாகவும், கானாக் குரலாகும் தமிழ் மக்களை கவர்ந்து இழுத்து வரும் தேவா, தன் வாழ்வில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
எஸ் எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த அந்தப் பேட்டியில் தன் மனைவி குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் பேசியுள்ளார். சினிமாவில் தசாப்தங்களை கடந்து நிற்கும் இவரது இசை இன்றைய திரைப்படங்களிலும் எதிரொலிக்கிறது. மெலோடி பாட்டாக இருந்தாலும் சரி, குத்துப் பாட்டாகக இருந்தாலும் சரி காலங்கள் கடந்து நிற்கின்றன இவரது பாட்டுகள்.
ரெக்கார்டிங் பார்க்க வராத மனைவி
இவர் மக்களின் நாடியைத் தெரிந்து வைத்துக் கொண்டு, எப்படி இசையமைக்கிறார் என்பதைப் பார்க்க மக்கள் அனைவரும் அவ்வளவு ஆசையாக இருக்கின்றனர். ஆனால், இவரது மனைவி ஒருமுறை கூட இவர் இசையமைத்ததை பார்த்ததே இல்லை எனக் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய தேவா, என் மனைவி இதுநாள் வரையில் ஒருமுறை கூட என் ரெக்கார்டிங்கை பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட படத்தின் பூஜை எப்படி நடக்கிறது என்பதை பார்த்ததில்லை. அவருக்கு சினிமா பட பூஜை எப்படி இருக்கும் என்பதே தெரியாது. புரொஜெக்ஷனில் இருந்து சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது.
ஏவிஎம் ஸ்டூடியோ கோடம்பாக்கத்தில் இருக்கு. பிரசாத் ஸ்டூடியோ கோடம்பாக்கத்தில் இருக்கு. வீட்டுக்கு எதிர்க்கவே ஸ்டூடியோ கட்டிட்டேன். அப்படி இருந்தும் அவங்க ஸ்டூடியோ உள்ள வர மாட்டிங்குறாங்க. ரெக்கார்டிங் பாக்க மாட்டிங்குறாங்க.
பாட்டுல குறை மட்டும் சொல்லுவாங்க
ஆனா, நான் பாடுன பாட்டுல ஏதாவது தப்பு இருந்தா அதை எல்லாம் என்கிட்ட சொல்லுவாங்க. நா பாடுற எல்லா பாட்டையும் கேட்டு அதுல இருக்க குறை எல்லாம் கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. ஏங்க என்னங்க இப்படி பாடிருக்கிங்க. இதெல்லாம் தப்பு இல்லையான்னு எல்லாம் என்கிட்ட கேப்பாங்க.
குக்கருல எப்படி?
கானாங்கத்த மீனு வாங்கி.. மீனு வாங்கி.. பாட்டுல நான் கொதிக்குது அது கொதிக்குது... குக்கருல கொதிக்குதுன்னு பாடுறேன். இந்தப் பாட்டுக் கேட்ட என் மனைவி, எந்த மீன் கொழம்பு குக்கர்ல்ல கொதிக்குது. எல்லாரும் மீன் கொழம்ப சட்டியில தான வைப்பாங்கன்னு கேட்டாங்க. இப்படி பாயிண்ட்ட புடிச்சி கேள்வி எல்லாம் கேப்பாங்க என தன் மனைவி தன்னை எப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறார் எனக் கூறி இருக்கிறார்.
கோவில் திருவிழால பிரச்சனை
மேலும் பேசிய அவர், மயிலாப்பூர்ல இருக்க கோவில்ல ஒரு திருவிழா நடக்குது. அந்தத் திருவிழால நான் பாடுன பாட்டால, என் மனைவிக்கும் அவரோட அம்மாவுக்கும் பெரிய சண்டையே நடக்குது.
திருவிழா சமயத்துல நடந்த கச்சேரியில நான் பாடுன பாட்ட அவங்க தப்பா நெனச்சிட்டாங்க.. என்ன இப்படி எல்லாம் பாடுறாருன்னு அவங்க கோவிச்சிட்டு கெளம்பிட்டாங்க. எல்லாம் கிராமத்துல இருக்கவங்க தான. அதுனால நாம பாடுற பாட்டுல இருக்க வரி எல்லாம் அவங்களையே சொல்லுற மாதிரி எடுத்துக்கிட்டாங்க.
கச்சேரி பாட்டு
காப்பித் தண்ணி போடட்டுமா... டீ தண்ணி போடட்டுமா சொல்லுங்க மருமகன்னேன்னு ஒரு பாட்டு. மாமனார் மருமகன் கிட்ட கேக்குற மாதிரியான பாட்டு அது. நான் அவர் கேக்குறதுக்கு எல்லாம் வேணாம் வேணாம்ன்னு பதில் சொல்லனும்.
கடைசியில பெரிய பொன்னு நல்லாருக்கா சின்ன பொன்னு நல்லாருக்கான்னு அவரு கேப்பாரு. அப்போ நான் சின்ன பொன்னும் வேணாம் மாமா, பெரிய பொன்னும் வேணாம் மாமா.. அத்த மட்டும் போதும் மாமான்னு பாடுறேன்.
மாமியார் கோவிச்சிட்டு போயிட்டாங்க
இந்தக் கச்சேரியில தான் நான் முதல் முதலா பாடுறேன். அத எங்க வீட்ல இருக்க எல்லாரும், சொந்தகாரங்கன்னு சுத்தி நெறைய பேர் கேக்குறாங்க.
அந்த சமயத்துல நான் இப்படி பாடுனதும் எங்க அத்தைக்கு பயங்கர கோவம் வந்துடுச்சு. ஏய் வாங்கடி என்னா பாட்டு பாடுறான் அவன். அத்த மட்டும் போதுமான்னு சொல்லிட்டு கோவிச்சிட்டு போயிட்டாங்க.
அப்புறம் போயி, அவங்ககிட்ட இது சினிமா பாட்டு, நானா பாட போறேன், மணிவண்ணன் தான் பாடுவாறுன்னு சமாதானம் எல்லாம் செஞ்சேன்னு அவர் தன் பாட்டால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி பேசியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்