Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை தனது இசையால் தூக்கிவிட்ட டி.இமான் - என்னென்ன படங்களில் தெரியுமா?
சிவகார்த்திகேயனை தனது இசையால் தூக்கிவிட்ட இமான். அவர் இசையமைத்த படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் டி. இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டதாகவும், இனிமேல் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை எனவும், இதுகுறித்து ஒளிவுமறைவின்றி பேசினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்பது தெளிவாகிறது.
என்னதான் இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்தாலும் சிவகார்த்திகேயனை கோலிவுட் வட்டாரத்தில் தூக்கிவிட்டது, டி.இமானின் இசை தான். அவர் சிவகார்த்திகேயனுக்கு இசையமைத்த அத்தனை படங்களும் மியூசிக்கலி ஹிட். குறிப்பாக, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய சிவகார்த்திகேயனின் படங்களில் டி.இமான் இசையமைத்திருந்தார்.
மனம் கொத்திப்பறவை: இயக்குநர் எழில் இப்படத்தை எடுத்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனை இயக்குநரிடம் பரிந்துரைத்ததே டி.இமான் தானாம். காமெடி எனும் டிராக்கில் காதலை வைத்து படத்தை ஹிட் பாதையில் பயணிக்க வைத்திருப்பார், இயக்குநர் எழில். இப்படத்தில் வரும் ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல, ஜல் ஜல் ஓசை, டங் டங் டிக டிக டங் டங் ஆகியப் பாடல்கள் பெரியளவில் ஹிட்டடித்து படத்துக்கு மிகப்பெரிய புரோமோசனைப் பெற்றுத் தந்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்: இப்படத்தில் கமிட் ஆன இசையமைப்பாளர் டி.இமான் தான், நடிகர் சிவகார்த்திகேயனை முதன்முதலில் சினிமாவில் பாடவைத்தவர். அதாவது இப்படத்தில் ஓபனிங்கில் வரும் ஊரைக் காக்க உண்டான சங்கம் பாடலை பாடவைத்திருப்பார். மேலும், இப்படத்தில் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுப்போச்சுடா, பாக்காதே பாக்காதே, என்னடா என்னடா ஆகிய அனைத்து பாட்டுகளும் அனைத்து கிராமங்களில் உள்ள திருவிழாக்கள், திருமண வைபவங்களில் பரவலாக ஒலித்தன.
ரஜினி முருகன்: வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பொன்ராம்,சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் இணைந்த படம் தான், ரஜினி முருகன். இப்படத்தில் இடம்பெற்ற என்னம்மா இப்படி பண்றீங்களே மா, உன்மேல ஒரு கண்ணு நீதான் என் முறைப்பொண்ணு, ஆவி பறக்கும் டீக்கடை, ஜிகிரு ஜிகிரு ஆகியப் பாடல்கள் செம ஹிட்டடித்தன. குறிப்பாக, ரஜினி முருகன் ஓபனிங் பாடலை சிவகார்த்திகேயன் பாட மீண்டும் அவருக்கு அனுமதித்திருப்பார், டி. இமான்
சீம ராஜா: இயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் இணைந்த வெற்றிக்கூட்டணி மூன்றாவதாக இணைந்த படம் தான், சீம ராஜா. இப்படத்தில் இடம்பெற்ற ஒன்னவிட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு, வாரேன் வாரேன் சீம ராஜா, மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுப் பாரு என்னைப் பத்தி ஆகியப் பாடல்கள் ஹிட்டடித்தன. குறிப்பாக, இப்படத்தில் பீரியடிக்கல் போர்ஷனுக்காக டி.இமானின் இசை பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது எனலாம்.
நம்ம வீட்டுப்பிள்ளை: நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோவுக்குண்டான மாஸ் இசையினை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியிருப்பார், டி.இமான். குறிப்பாக அண்ணன் - தங்கை பாசத்தை பேசும் படமாக அமைந்த இப்படத்தில் செண்டிமெண்டான இசையினையும், அதிரடியான இசையினையும் கலந்துகட்டி கொடுத்திருப்பார்.
இப்படத்தில் மயிலாஞ்சி, கும்முரு டுப்பரு, உன் கூடவே பிறக்கணும் ஆகியப் பாடல்கள் ஹிட்டடித்தன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்