63 Years of Mannathi Mannan: “அச்சம் என்பது மடமையடா”! எம்ஜிஆரின் திராவிட சிந்தனை ஓங்கி ஒலித்த படம்
எம்ஜிஆர் நடனம், வசனம் உச்சரிப்பு பற்றி கிண்டல்களும் கேலிகளும் இன்றைய தலைமுறையினரிடம் இருக்கும் பார்வையை முற்றிலும் மாற்றியமைக்கும் விதமாக மன்னாதி மன்னன் படத்தில் அவரது நடிப்புத் திறமை அமைந்திருக்கும்.
சிவாஜி கணேசனின் வீராபாண்டிய கட்டபொம்மன் படம் பெற்ற சூப்பர் ஹிட் காரணமாக அதேபோன்றதொரு சரித்திர படத்தை உருவாக்க விரும்பி கற்பனை கதையம்சத்துடன் திரைக்கதை அமைத்த படம்தான் மன்னாதி மன்னன். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதுடன் எம்ஜிஆர் டாப் வசூல் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
எம்ஜிஆர் நடனம், வசன உச்சரிப்பு பற்றி கிண்டல்களும் கேலிகளும் இன்றைய தலைமுறையினரிடம் சற்று தூக்காலாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களின் எண்ணத்தை முற்றிலும் மாற்றி விடும் என்றே உறுதியாக கூறலாம்.
நடனத்தில் பத்மினிக்கு இணையாக கலக்கியிருக்கும் எம்ஜிஆர், வசன உச்சரிப்பிலும், டயலாக் டெலிவரியிலும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பின்னி பெடலெடுத்திருப்பார். படத்தில் கதாநாயகிகளாக பத்மினி, அஞ்சலி நடித்திருப்பார்கள். பிஎஸ் வீரப்பா, எம்ஜி சக்கரபாணி, விஆர் ராஜகோபால் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
மன்னாதி மன்னன் படத்துக்கு பாடலாசிரியர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு, படத்துக்காக 11 பாடல்களையும் எழுதியிருப்பார். இதற்கு முன்னர் பல படங்களுக்கு கண்ணதாசன் கதை, திரைக்கதை எழுதியிருந்தாலும் இந்த படத்தில் கதையுடன், திராவிட அரசியல் பிரச்சாரத்தை கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுத்தியிருப்பார்.
எம்ஜிஆரிடம் இருந்த திராவிட அரசியல் பற்றையும் வெளிக்காட்டிய படமாக மன்னாதி மன்னன் திகழ்ந்தது. நம்பியார் இல்லாத படத்தில் எம்ஜிஆருக்கு சரியான வில்லன் பிஎஸ் வீரப்பா என்பதை நிருபிக்கும் விதமாக அவரது நடிப்பும் அமைந்திருக்கும். வழக்கமாக எம்ஜிஆர் படங்கள் முழுவதும் பாஸிடிவான விஷயங்கள் அதிகமாகவே காணப்படும், குறிப்பாக கிளைமாக்ஸ் சுபம் என்றும் முடியும் விதமாகவே அமைந்திருக்கும்.
ஆனால் மன்னாதி மன்னன் படத்தில் இறுதிக்காட்சியில் எம்ஜிஆர் காதலியாக வரும் பத்மனி இறப்பது போல் முடித்திருப்பார்கள். படத்தின் கதைக்கு இந்த கிளைமாக்ஸ் நியத்தை அளிப்பதாகவே அமைந்தது.
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் தவிர 3 பாடல்களை மருதகாசி எழுதியிருப்பார். எம்எஸ் விஸ்வநாதன் இசையில்
அச்சம் என்பது மடமையடா, ஆடாத மனமும், கனிய கனிய, கண்கள் இரண்டும் போன்ற பாடல்கள் இன்றளவும் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்து வருகின்றன.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சி தொடர்பான எந்தவொரு கூட்டமானாலும், எம்ஜிஆர் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியானாலும் தவறாமல் ஒலிக்கும் பாடலாக அச்சம் என்பது மடமையடா பாடல் இருக்கும். படத்தின் முதல் காட்சியே எம்ஜிஆரின் அறிமுகத்துடன் இந்தப் பாடல் இடம்பிடித்து ரசிகர்களை மனதில் ஒருவித உணர்ச்சி பெருக்கை ஏற்றிய பாடலாக இருந்தது.
சிவாஜி கணேசனின் பாவை விளக்கு, பெற்ற மனம் ஆகிய படங்களுடன் வெளியான மன்னாதி மன்னன் ரேசில் வெற்றி பெற்றதுடன், சூப்பர் ஹிட்டாகி வசூலையும் குவித்தது. எம்ஜிஆரின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படங்களில் ஒன்றாக திகழும் மன்னாதி மன்னன் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்