ARRahman: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக இறங்கி வந்த மெட்ரோ நிர்வாகம்.. குஷியில் ரசிகர்கள்!
ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக மெட்ரோ சேவையானது நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பத்து தல’, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் கமல்ஹாசனின் 234 ஆவது படத்திற்கும் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் லிஸ்டில் ஒரு பக்கம் பல படங்கள் இருந்தாலும், வெளிநாடுகளிலும் உள்ளூர்களிலும் இசைக்கச்சேரிகளை நடத்துவது அவரது வழக்கமாக இருக்கிறது. இந்த இசைக்கச்சேரிகளில் ஏராளமான அவரது ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்.
டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து விடும். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் வருகிற 19 ஆம் தேதி சென்னையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார். தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக இந்த கச்சேரியை நடத்துவதாக அவர் அறிவித்து இருந்தார்.
ஏன் திடீரென்று இந்த முயற்சி என்று பேட்டிகளில் கேட்ட போது சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்தது என்றும் அதன் காரணமாக அவர் போன்ற லைட்மேன்களுக்கு உதவும் நோக்கில் இந்த கச்சேரியை நடத்துவதாக அவர் அதில் சொல்லியிருந்தார்.
இந்த இசைக்கச்சேரியானது வருகிற மார்ச்-19 -2023 அன்று இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் வந்து செல்ல ஏதுவாக 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக நெட்டிசன் ஒருவர் ‘இங்கு சென்னை என்ற நகரம் ஒன்று இருக்கிறது.. உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா.. இங்கெல்லாம் இசைக்கச்சேரி நடத்தக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏ. ஆர்.ரஹமான் ‘அனுமதி, அனுமதி, அனுமதி... அனுமதி கிடைக்கவே மாத கால ஆகி விடுகிறது ” என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்