Manobala Death: ‘எமனான சரக்கு; வத்தக்குழம்பு அப்படி வைப்பாரு’; மனோபாலா அஞ்சலியில் எமோஷனல் ஆன மன்சூர்!
மனோபாலாவுக்கு குடியே எமனாக வந்து விட்டது என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கியவர் மனோபாலா. ஆகாய கங்கை, பிள்ளை நிலா உள்ளிட்ட பல படங்களை டைரக்ட் செய்துள்ள இவர் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்கவேட்டை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வந்த இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இவரது இறப்பு திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் அவரது உடலுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்றும் பல பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மன்சூர் அலிகான், “ மனோபாலா இன்று நம்முடன் இல்லை. மாபெரும் கலைஞன். அவர் இயக்கிய ‘மூன்றெழுத்திலே என் மூச்சு இருக்கும்’திரைப்படத்தில் விஜய்காந்துடன் நான் இணைந்து நடித்தேன். அற்புதமான மனிதர்.
சினிமாவில் இருக்கும் நடிகர், தயாரிப்பாளர் சங்க பிரச்சினைகளை தீர்த்து வைக்க இவரைத்தான் தூதுவராக அனுப்புவர். அவர் சைவ உணவு சாப்பிடுபவராக இருந்தாலும், நண்பர்களுக்கு நல்ல உணவுகளை படைத்து பறிமாறுவார். அவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர்.
அவர் மாதிரி யாராலையும் வத்தக்குழம்பு வைக்க முடியாது. ஏன் நம்முடைய மனைவிகளால் கூட அப்படி குழம்பு வைக்க முடியாது. அவர் விட்டுச் செல்கின்ற இடம் நீண்ட நாட்களுக்கு வெற்றிடமாகவே இருக்கும். திரையுலகில் பல பேருக்கு இந்த சரக்கு எமனாக இருந்து இருக்கிறது. சரக்கு அடித்தால் கணையம் கெட்டுப்போகிறது. சரக்கு சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் சைடிஸ்ட் சாப்பிட வேண்டும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்