Yogan Adhiyayam ondru: ‘வாய்ப்பு கொடுத்த விஜய்..இங்கிலீஷில் புளிப்புகாட்டிய கெளதம்’ -யோஹன் அத்தியாயம் ஒன்று நழுவிய கதை!
யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்து மனோஜ் பரமஹம்சா கலாட்டா யூடியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசியது இது!
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தை செட் பண்ணி கொடுத்ததே நான் தான். நண்பன் படத்திற்கு முன்னதாகவே கௌதம் மேனனும் விஜயும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று, பல முன்னெடுப்புகள் நடந்தன. ஆனால் வெவ்வேறு காரணங்களால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
நண்பன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அஸ்கு லஸ்கா’ பாடலை ஸ்பெயினில் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது வேறொரு இடத்திற்காக செல்வதற்காக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்போது என் பின்னால் இருந்து, கௌதம் மேனன், கௌதம் மேனன் என்று சொல்கிறார்களே? அவர் எப்படி என்று பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது. யார் என்று பார்த்தால் விஜய் சார்.
அதற்கு, நான் கௌதம் மிகவும் சூப்பரான டைரக்டர் சார். நாம் அவரை நம்பி அந்தப் படத்தை கொடுத்து விட வேண்டும். அவர் நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு செல்வார், கூடவே உங்களையும் அவர் நன்றாக ஆராய்ந்து பார்ப்பார் என்றேன்.
உடனே கௌதம் மேனனுக்கு போன் செய்து விஜய் சார் இப்படி கேட்டதை சொன்னேன். உடனே கௌதம் சார், நம்மைப் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே என்று என்னிடம் சொன்னார். அதற்கு நான் அவரிடம் விஜய் சார் நம்மிடம் ஒன்றே ஒன்று தான் கேட்கிறார். அவருக்கு முழு கதையையும் மட்டும் கொடுத்து விட்டால் போதும். நாம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லலாம் என்று சொன்னேன்.
இதனையடுத்து சென்னையில் அதற்கான வேலைகள் நடந்து, அந்த படம் தொடர்பான பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. இருவரும் இணைய போவதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள். அப்போது கௌதம் விஜய் சாரிடம் ஒரு லைனை சொல்ல, அந்த லைன் விஜய் சாருக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த லைனை டெவலப் செய்து வருமாறு விஜய் சொன்னார்.
நான்கு ஐந்து மாதங்கள் கழித்து அந்த படத்தின் கதையை ரெடி செய்து கௌதம், விஜய் சாருக்கு சொன்னார். அப்போது நான் பூவரசம்பிப்பீ திரைப்படத்திற்காக பொள்ளாச்சியில் இருந்தேன். அப்போது விஜய் சாரிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது அவர் என்னிடம், கௌதம் கதையை சொன்னார்.
முழு படத்தில் ஒரு இடத்தில் கூட தமிழ் வசனம் இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அவர் எழுதியிருக்கிறார். பின்னணியில் மட்டுமே தமிழில் வசனங்கள் வருகின்றன. ஆனால் அவர் சொல்வது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. இதை என்னால் தாங்க முடியுமா என்பது தெரியவில்லை. படத்திற்குள் வந்து, அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. மிகவும் பயமாக இருக்கிறது என்றார்.
இதனையடுத்து கௌதம் சாரிடம் போன் செய்து, நான் முதலிலேயே உங்களிடம் சொன்னேன் அல்லவா.. விஜய் சாருக்கு பிடித்தது போன்று ஒரு கதையை எழுதுங்கள் என்று என்றேன். அதற்கு கௌதம் மேனன் இல்லையடா..நான் எழுத ஆரம்பித்தேன்.. அது ஒரு ஃப்லோவில் அப்படி வந்துவிட்டது. இதை நான் அவருக்காக மாற்ற முடியாது. இது இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார். வேண்டும் என்றால், மீண்டும் அவருக்காக நான் ஒரு புதிய கதையை ரெடி செய்கிறேன் என்றார். அதன் பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது.
எனக்கு கௌதம் சாரிடம் என்ன கோபம் என்றால் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் சில காட்சிகள் துருவ நட்சத்திரத்தில் வருவது போல இருக்கும். ஆனால் துருவ நட்சத்திரத்தில் பக்காவாக கெட்ட வார்த்தைகளெல்லாம் போட்டு, பயங்கரமாக தமிழில் எழுதி எழுதியிருக்கிறார். இதை பார்த்த உடன், நான் அவரிடம் இதைத்தான், அப்போதே விஜய் சார் கேட்டார் என்று சொன்னேன்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்