34 Years of Anjali: குழந்தைகளின் மனநல பிரச்னையை பேசிய படம்! இந்தியாவின் ஆஸ்கர் என்டரி - பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்
குழந்தைகளின் மனநல பிரச்னையை பேசிய படம் பிறமொழிகளில் ஏராளமாக வெளிவந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும், அந்த படங்களுக்கெல்லாம் விதையாக இருந்தது மணிரத்னத்தின் அஞ்சலி படம்தான். இந்தியாவின் ஆஸ்கர் என்டரி ஆக அனுப்பப்பட்ட இந்த படம் பெரியவர்களுக்கான குழந்தைகள் படம் என்று விமர்சிக்கப்பட்டது.
ஆட்டிசம், டிஸ்லெக்சியா போன்ற குழந்தைகளின் மனநலம் சார்ந்த விஷயங்கள் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக அக்கறையுடன் அரவணைப்புகளும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் காணப்படுகிறது.
ஆனால் மனநலம் சார்ந்த பிரச்னை பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை மீது செலுத்தப்பட வேண்டிய அக்கறை குறித்த 90களில் பேசிய படம் தான் அஞ்சலி.
குழந்தைகள் பற்றி, குழந்தைகளுக்காக என பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்தே தமிழில் ஏராளமான படங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் இது குழந்தைகளின் சுட்டித்தனம், குறுப்புதனம் என குழந்தைகளுக்கான படம் என்கிற போர்வையில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை தந்த படமாக அமைந்திருந்தது.
தமிழில் குழந்தைகள் வாழ்வியல் பற்றி சொன்ன படங்களில் அஞ்சலி திரைப்படத்துக்கு தனியொரு இடமே உண்டு.
மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் ரகுவரன், ரேவதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்களை காட்டிலும் குழந்தை நட்சத்திரங்களாக தோன்றி தருண் (தற்போது தெலுங்கு சினிமாவின் ஹீரோ), மமதி, ஷாமிலி ஆகியோரை சுற்றிதான் படத்தின் கதையே அமைந்திருக்கும்.
படத்தின் டைட்டில் கதாபாத்திரமான அஞ்சலி பாப்பவாக மூன்று வயதே நிரம்பிய ஷாம்லி நடித்திருப்பார். வி.கே. ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், சாருஹாசன், ஜனகராஜ், சார்லி, தியாகு ஆனந்த் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
பிரபு, சரண்யா ஆகியோர் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமிக்க கனமான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்கள்.
சிறப்பு குழந்தை பற்றிய கதை
ரகுவரன் - ரேவதி தம்பியினருக்கு மூன்றாவது குழந்தையாக அஞ்சலி பாப்பா பிறக்கிறார். முதலில் இறந்ததாக கூறப்படும் நிலையில், சில திருப்பங்களுக்கு பிறகு அவர் சிறப்பு குழந்தை எனவும் விரைவில் இறந்துவிடுவார் எனவும் தெரியவருகிறது.
அஞ்சலியை தாங்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டுக்கு ரகுவரன் - ரேவதி அழைத்து வருகிறார்கள். இவர்களின் முதல் இரண்டு குழந்தைகளும் அஞ்சலி மீது காட்டும் வெறுப்பு, பின்னர் தீராத பாசம், அஞ்சலி பாப்பாவால் அப்பார்ட்மெண்டில் நிலவும் மாறுபட்ட சூழல் இறுதியில் அஞ்சலி பாப்பாவுக்கு என்ன ஆனது என்பதை காமெடி, எமோஷன் கலந்த திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
குழந்தைகள் படம், அப்பார்மாண்டில் நடக்கும் கதை என்பதால் ஏராளமான குழந்தைகள் படை சூழ படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகள் குறும்புத்தனம், சுட்டித்தனம் என படத்தில் இடம்பிடித்திருக்கும். அதே சமயம் பல உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் நம்மை அறியாமலேயே கண்ணீர் வரவழைக்கும்.
படத்தின் முதல் பகுதியில் ரகுவரன் நடிப்பில் ஜொலித்திருப்பார் என்றால், பிறபகுதியில் அஞ்சலி பாப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் ரேவியின் நடிப்பு, ஒரு தாயின் பரிதவிப்பை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.
மூன்று வயது குழந்தையான ஷாம்லியை கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப நடிக்க வைப்பதில் மணிரத்னம் ரொம்பவும் மெனக்கெட்டார். ஷாம்லியை பல்வேறு விதமாகப் படம்பிடித்து அதில் தேவையானவற்றை உபயோகித்துத் தான் நினைத்திருந்த உணர்வுகளைக் காட்சிகளாக மாற்றியமைத்தார்.
ஆஸ்கர் என்ட்ரி
தமிழ் சினிமாவில் வித்தியாச பாணியிலான கதையாகவும், சிறப்பு குழந்தைகள் பற்றி பேசிய படமாகவும் இருந்த அஞ்சலி ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. சிறந்த படம், சிறந்த ஆடியோகிராபி, சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று தேசிய விருதுகளை வென்ற அஞ்சலி படம் தமிழ்நாடு அரசின் இரண்டு விருதுகளையும் வென்றது.
இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் என்ட்ரிக்கும் அனுபப்பட்டது. பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் உலக அளவில் அஞ்சலி படத்துக்கு பெரும் அங்கீகாரமும் கிடைத்தது.
மணிரத்னம் - இளையராஜா காம்போ
மணிரத்னம் - இளையராஜா காம்போ படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அனைத்து பாடல்களையும் வாலி எழுத, ஹிட்டானதுடன், அதை காட்சிப்படுத்திய விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
முதல் முறையாக மணிரத்னம் படத்தில் பி.சி. ஸ்ரீராம் இல்லாமல், மது அம்பாட் ஒளிப்பதிவு பணியை இந்த படத்தில் மேற்கொண்டார்.
அஞ்சலி படத்துக்கு பின்னர் பிற மொழிகளிலும் குழந்தைகளின் மனநல பிரச்னை பேசும் விதமாக ஏராளமான படங்கள் வெளியாகி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தன. ஆனால் அந்த படங்களுக்கெல்லாம் விதையாக இருந்த மணிரத்னத்தின் அஞ்சலி வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்