Mani Ratnam:PS2 1000 கோடி வசூலிக்குமா? - கேள்விக்கு கடுப்பான மணிரத்னம்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யுமா என்ற கேள்விக்கு மணிரத்னம் பதிலளித்து இருக்கிறார்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் பொன்னியின் செல்வன் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பான் இந்தியா படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து வருகின்றன. அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் 1000 கோடி வசூலிக்குமா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மணிரத்னம், “நமக்கு ஏன் இந்த கணக்கு. எனக்கு படம் முக்கியம். எனக்கு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் படம் பாக்கிறீர்கள். நீங்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அது எனக்கு போதுமானது. அதுதான் முக்கியம். அதைத்தாண்டி படம் எவ்வளவு வசூல் செய்தாலும் நன்றுதான்.” என்றார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு படம் தொடர்பான புரோமோக்களை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘அகநக’பாடலானது கடந்த மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
வந்தியத்தேவனுக்கும், குந்தவை பிராட்டிக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து வரைபடமாக வெளியான அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு அரங்கில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், பாரதிராஜா, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வெளியான வீர ராஜ வீரா, சிவஹோகம், PS2 ஆந்தம் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
டாபிக்ஸ்