Director Siddique: விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து வரும் சித்திக், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மலையாள சினிமாவில் மூத்த இயக்குநரான 69 வயதாகும் சித்திக், மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் விரைந்து குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மலையாள சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட இயக்குநராக இருந்து வருபவர் சித்திக். மலையாள டாப் இயக்குநர் ஃபாசில் உதவியாளரான இவர், 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விஜய் - சூர்யா இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, மீண்டும் விஜய்யை வைத்து காவலன் படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். கடைசியாக அரவிந்த் சாமி - அமலாபால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தை இயக்கினார்.
சண்டைக்கோழி, கர்ணன் படங்களில் நடித்த நடிகர் லாலுடன் இணைந்து ஆரம்பகாலத்தில் பல படங்களுக்கு திரைக்கதை எழுதியும், இயக்கியும் வந்தார் சித்திக். இதன் பின்னர் லால் நடிப்பு மீது கவனம் செலுத்த, சித்திக் தொடர்ந்து திரைக்கதை, இயக்கத்தில் கவனம் செலுத்தினார்.
இவர் இயக்குநராக அறிமுகமான ராமோஜி ராவ் ஸ்பீக்கங் என்ற படம்தான் தமிழில் அரங்கேற்ற வேளை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல் மலையாளத்தில் மெகா ஹிட் திகில் படமாக அமைந்த மணிசித்திரத்தாழ் படத்துக்கு சித்திக் - லால் ஆகியோர் இணைந்துதான் திரைக்கதை அமைத்தனர்.
மம்முட்டி நடிப்பில் இவரது சூப்பர் ஹிட் படமான ஹிட்லர், தமிழில் சத்யராஜ் நடிப்பில் மிலிட்டரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடைசியாக 2020இல் இவர் மோகன்லால் நடிப்பில் பிக் பிரதர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதன் பின்னர் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக படத்தை இயக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9