Mohanlal: மூச்சுத்திணறல்.. அதீத காய்ச்சல்.. மலையாள நடிகர் மோகன்லால் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி! - நிலவரம் என்ன?
Mohanlal: மோகன்லால் மூச்சுத்திணறல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் அதிகமான நிலையில், அவர் கொச்சினில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
பிரபல மலையாள நடிகரான மோகன்லால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மோகன்லாலுக்கு உடல்நலக்குறைவு
மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தீடீரென்று அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் அதிகமான நிலையில், அவர் கொச்சினில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சுவாச பாதை தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதிபடுத்தி இருக்கின்றனர். மேலும் அடுத்துவரும் 5 நாட்களுக்கு வெளியில் செல்வதை தவிர்த்து, மருத்துகளை எடுத்துக்கொண்டு, ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
நிலைமை மோசமாக மாறியிருக்கிறது.
எல்2: எம்புரான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் அவர் இயக்குநராக அறிமுகமாகும் பரோஸ் படத்தின் பின்னணி வேலைகளை முடித்த மோகன்லால் குஜராத்தில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போதுதான் அவரது நிலைமை மோசமாக மாறியிருக்கிறது. தற்போது மருத்துவர்கள் கவனிப்பில் இருக்கும் அவர், நோயில் இருந்து மீண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
பரோஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் கடந்த மார்ச் 28, 2024 அன்று வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் பின்னணி வேலைகள் காரணமாக, ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சிக்கலில் படம்
முன்னதாக, ஜெர்மனியில் வசிக்கும் மலையாள எழுத்தாளர் ஜார்ஜ் துண்டி பரம்பில் என்பவர் இந்தப்படத்தின் கதை தன்னுடைய ‘மாயா’நாவலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி மோகன்லால், தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், டி.கே. ராஜீவ்குமார், ஜிஜோ புன்னூஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இது குறித்து படக்குழு சார்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
லால் சினிமா துறைக்கு என்ட்ரி ஆன கதையை இங்கு பார்க்கலாம்.
அழகான மனைவிக்கு அடித்து துன்புறுத்தும் கணவன் வாய்த்து, தினமும் அவளை சித்ரவதை செய்கிறான். இதற்கிடையே அவள் கல்யாணம் ஆனவள் என்பது தெரியாமல், அவளின் அழகில் மயங்கி, ஒருவன் காதலிக்கிறான். இப்படி ஒரு கதையை திரையில் சொல்லி, மலையாள சினிமாவின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் இயக்குநர் பாசில்.
கூச்ச சுபாவம் கொண்டவனாக இருக்க வேண்டும்
இந்தப்படத்தில் காதலனாக ''ஒரு தலை ராகம்' ஷங்கர் தேர்வு செய்யப்படுகிறார். மனைவி கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜ் கமிட் செய்யப்படுகிறார். கணவனாக யாரை நடிக்க வைப்பது என்று டிஸ்கஷன் தொடங்கும் போதே, அந்த கதாபாத்திரம் சற்றே கூச்ச சுபாவியாக, வெட்கம் நிரம்பியவனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பாசில்.
இந்த நிலையில் ஆடிஷனுக்கு வந்த ஒரு இளைஞர் கூச்சமும், வெட்கமும், புன்னகையும், நிரம்பி இருப்பதை பார்க்கிறார் பாசில். அங்கு 5 பேர் கொண்ட நடுவர் குழு இருந்தது. அதில் இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர்தான் இன்று மலையாளத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால்.
முக்கிய முடிவு எடுத்த லால்
மாநில அளவிலான மல்யுத்த வீரராக இருந்த மோகன்லால், தேசிய அளவிலான போட்டி ஒன்றில் பங்கேற்பதற்கான நாளில்தான் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’ படத்திற்கான தேர்வும் நடக்கிறது. மல்யுத்தத்தை கைவிட்டு, நடிப்பைத் தேர்வு செய்தார் மோகன்லால். பயணம் தொடர்ந்தது.
சிவாஜியும் மோகன்லாலும் 'ஒரு யாத்ரமொழி' என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். சிவாஜி லாலை ''கடவுளின் சொந்தப் புதல்வன்' என்று குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்