Malavika Mohanan: ‘அமைதியா இருங்க.. நான் நயனை சொல்லல’ - மாளவிகா விளக்கம்!
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மாளவிகா மோகனன் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்
பிரபல ஒளிப்பதிவாளரான கே.யூ.மோகனின் மகள்தான் நடிகை மாளவிகா மோகனன். மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து பிரபலமான இவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து விஜயின் ‘மாஸ்டர்’, தனுஷூடன் ‘மாறன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் மலையாளத்தில் உருவாகியிருக்கும் ‘கிறிஸ்டி’ திரைப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் மாளவிகா ‘லேடி சூப்பர் ஸ்டார’ பட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்று மட்டும் அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவதின் அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் சூப்பர் ஸ்டார் என அழைத்தாலே போதும். தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ்தான். அதுமாதிரி அழைத்தால் போதும்'' என்று பேசினார்.
இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படக்கூடிய நயன்தாராவை குறி வைத்துதான் இவ்வாறு பேசுகிறார் என்றும் அவரின் வளர்ச்சி மேல் மாளவிகா மோகனனுக்கு பொறாமை என்று சமூகவலைதளங்களில் சர்ச்சை கிளம்பியது.
இந்த நிலையில் அதற்கு மாளவிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “ என்னுடைய கருத்தானது பெண் நடிகர்களை பயன்படுத்தும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற சொல்லை பற்றியது; அது எந்த ஒரு நடிகரையும் குறிப்பிடும் வகையில் சொல்லப்பட்டதல்ல.
நான் நயன்தாராவை மதிக்கிறேன்; ஒரு சீனியர் நடிகராக அவரின் அசாத்திய சினிமா பயணத்தை நான் பார்க்கிறேன். மக்களே தயவு செய்து அமைதியாக இருக்கமுடியுமா? குறிப்பாக சிறிய பத்திரிகைகள்.. நயன் தாராவிற்கு என் அன்பை மட்டுமே நான் கொடுக்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதொரு பேட்டியில் பேசிய மாளவிகாபெயரை குறிப்பிடாமல் , “மருத்துவனை காட்சியில் ஒரு நடிகை மேக்கப் போட்டு நடித்தார். மருத்துவமனையில் எப்படி மேக்கப் போட்டு இருக்க முடியும் என கூறி விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இவர் நயன் தாராவைத்தான் விமர்சனம் செய்கிறார் என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் நயன்தாரா, தான் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியான போது கொடுத்த பேட்டியில் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார். அதில், “ மருத்துவமனை காட்சியில் மிக அழகாக மேக்கப் போட்டு நடிக்க வேண்டியதில்லைதான். அதற்காக முடியெல்லாம் விரித்துப் போட்டு இருக்க முடியாது.
அது கமர்ஷியல் படம். யதார்த்தமான படத்துக்கும், கமர்ஷியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. யதார்த்த படங்களில் அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் போதும். அதில் என் இயக்குநர் இவ்வளவு சோகம் வேண்டாமே என்று சொல்லி என்னை அப்படி நடிக்க வைத்தார்” என்று பேசி இருந்தார்.
டாபிக்ஸ்