Madurai Mani Iyer Memorial Day: 20-ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Madurai Mani Iyer Memorial Day: 20-ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர்!

Madurai Mani Iyer Memorial Day: 20-ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர்!

Manigandan K T HT Tamil
Oct 24, 2023 10:02 AM IST

Madurai Mani Iyer: தமிழிலக்கியத்தில் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நட்பு பாராட்டினார்.

பாடகர் மதுரை மணி ஐயர்
பாடகர் மதுரை மணி ஐயர்

இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் மணி என்றானது. மதுரையில் எம்.எஸ். ராமசுவாமி ஐயர், சுப்புலஷ்மி ஆகியோருக்கு 1912ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி மகனாகப் பிறந்தார். தகப்பனார் ராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர்.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மிகவும் பிரபலமான கர்நாடக சங்கீத பாடகர்களில் ஒருவராக இருந்தார்.

சிறு வயதிலேயே கர்நாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதருடைய மாணவர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன் தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார்.

மணி ஐயர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நட்பு பாராட்டினார்.

ஸ்வரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர்.

மணி ஐயரின் அசாத்திய திறமைகள் அவரது காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டன. ஏனெனில் அவர் அக்கால பிரமுகர்களிடமிருந்து பல்வேறு கவுரவங்களைப் பெற்றார்.

1944-ல் கனகலாதரர், 1959-ல் சங்கீத கலாநிதி, 1960-ல் குடியரசுத் தலைவர் விருது, 1962-ல் இசைப் பேரறிஞர் எனப் பல விருதுகள் அவருக்குக் கிடைத்தன.

ஆங்கில எழுத்தாளர் பெர்னார்டு ஷா புத்தகங்களை விரும்பிப் படிப்பார். சார்லி சாப்ளினின் தீவிர ரசிகர்.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான கோயில்களில் இசை நிகழ்ச்சி நடத்த மணி ஐயர் அழைக்கப்பட்டார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், 1925 ஆம் ஆண்டில் தேவகோட்டை கோயில் திருவிழாவில் காஞ்சி மகா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தும் பொன்னான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவரிடம் இருந்து ஆசி பெற்ற மணி ஐயர், அதன் பிறகு அவரை பின்தொடரும் தீவிர பக்தர்களில் ஒருவரானார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.