Mari Selvaraj: சிறுநீரில் நனைத்த ஜாதிய வன்மம்.. மாரி பட்ட வேதனையின் வீரியம் தெரியுமா?
அந்த திரைப்படத்திலேயே கெஞ்சி கூத்தாடி மறுபடியும் ரீ ஷூட் செய்த காட்சி அந்த காட்சி தான்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்; தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்.
இந்த இரண்டு படங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அடக்குமுறையை அவர் காட்சிப்படுத்தி இருந்தார். இன்றைய தினம் அவரது இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக அவர் இயக்கிய இரண்டு படங்களில் இடம் பெற்ற பல காட்சிகள் பாராட்டப்பட்டாலும் பரியேறும் பெருமாள் படத்தில் பரியன் தன்னுடைய காதலியின் அப்பாவை சந்திக்கச் சென்று அவமானப்படுத்தப்படும் காட்சி மிகவும் உக்கிரமாக நெஞ்சை உலுக்கும் விதமாக இருக்கும். அந்தக்காட்சி குறித்து மாரிசெல்வராஜ் பேசியவை இங்கே!
“அந்த திரைப்படத்திலேயே கெஞ்சி கூத்தாடி மறுபடியும் ரீ ஷூட் செய்த காட்சி அந்த காட்சி தான். அந்த சீனை முதலில் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஆனால் அந்த காட்சியை போட்டு பார்க்கும் பொழுது அந்தக் காட்சியில் நிஜம் இல்லை என்பது எனக்குத் தெரிந்தது.
உடனே நான் தயாரிப்பாளர் பா ரஞ்சித்திடம் சென்று இந்த ஒரு காட்சி மட்டும் எப்படியாவது ரீ ஷூட் செய்ய வேண்டும் என்று சொல்லி கேட்டேன். பா ரஞ்சித் அண்ணனும் அதை பார்த்துவிட்டு இந்த காட்சி வீக்காக இருக்கிறது இதை மறுபடியும் ரீ ஷூட் செய் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்தக் காட்சியில் உள்ள உண்மையை நடிகர்களுக்கு சொல்லி புரிய வைத்தேன். அந்த உண்மை சம்பவத்திற்கு முன்னர் மற்றும் பின்னர் என்ன நடந்தது என்பதையும் அவர்களுக்கு உணர்வுபூர்வமாக சொன்னேன். காரணம் அடி வாங்குகிறவர்களுக்கும் அடி கொடுக்கிறவர்களுக்கும் அது உண்மை என்று புரிய வேண்டும்.
நான் அதனை ஒரு ஆக்ஷன் காட்சியாக பார்க்கவே இல்லை அதை ஒரு சம்பவமாக தான் பார்த்தேன். இது போன்று நிறைய நடந்து கொண்டிருக்கிறது. அந்த காட்சியில் அந்த ஊர்காரர்கள் நடித்திருந்தது அந்த காட்சிக்கு இன்னும் அதிகமான உண்மையை கொண்டு வந்திருந்தது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்