நீங்கள் கொலை செய்து கொண்டிருக்கிறீர்கள்! பகீர் குற்றச்சாட்டு வைத்த வைரமுத்து!
மக்கள் அனைவரும் திபாவளியைக் கொண்டாடுவதாக நினைத்து காற்றை கொலை செய்து வருவதாக பாடலாசிரியர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களில் பெரும்பாலானோர் ராமாயணம், மகாபாரதக் கதைகளை நம்பி அதனை பின்பற்றி நடப்பவர்கள். அவர்களின் பண்டிகைகளும் பெரும்பாலான சமயங்களில் புராணங்களை மையப்படுத்தியே வருகிறது.
பண்டிகை தரும் புராணக் கதை
அப்படி, புராணங்களில் உள்ள கதையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. தீமைகளையே தன் தொழிலாக செய்துவந்த நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளி என ஒருதரப்பினரும், வனவாசத்தில் இருந்த சீதையை கடத்திச் சென்ற ராவணனை அழித்து, சீதையை ராமன் மீட்ட நாளே தீபாவளி எனவும் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது.
மக்கள் விரும்பும் பண்டிகை
எது எப்படி இருப்பினும், இந்திய மக்களுக்கு தீபாவளி என்ற பண்டிகை அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக உள்ளது. புத்தாடை, பட்டாசுகள், இனிப்புகள், பரிசுகள் என அந்த நாளே விழாக்கோலமாக இருக்கும். இந்த நாளின் குதூகலத்திற்காக குழந்தைகளும், போனஸ், தள்ளுபடிகள், விடுமுறை, போன்றவற்றிற்காக பெரியவர்களும் இந்த நாளை விரும்புவர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சில தரப்பினர், தமிழ் வழி மரபைச் சேர்ந்த ராவணன் கொல்லப்பட்ட நாளை நாம் கொண்டாடக் கூடாது, இது நமது பண்டிகை அல்ல, வெறும் விடுமுறை தினம் எனக் கூறி வருவர். மேலும், பல சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி வருகின்றனர். இதனால், மனிதர்களும், விலங்குகளும் அதிகப்படியான பாதிப்பிற்கு உள்ளாவதாக கூறுவர்.
வைரமுத்து கருத்து
அப்படி இருக்க பாடலாசிரியர் வைரமுத்து, தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில்,
"விழாக்கள்
புதியவை அல்ல
தொழில் சார்ந்தும்
பருவங்கள் சார்ந்தும்
‘விழவு மலி மூதூர்’களைத்
தமிழகம் சங்ககாலத்திலேயே
கண்டிருக்கிறது
தீபாவளி
கொண்டாடுவது என்பது
அவரவர் அறிவு
அவரவர் தெளிவு
அவரவர் முடிவு
ஆனால்,
விழாக்கள் காற்றைக்
கொலைசெய்து விடக்கூடாது
சுற்றுச்சூழலின் சுத்தத்தில்
குப்பை எறியக் கூடாது
ஒவ்வொரு தீபாவளியிலும்
காற்று மாசு ஓசை மாசு
இரண்டினாலும்
சமூகத்தின் ஒருபகுதி நோயுறுகிறது
போகிக்கும் இது பொருந்தும்
அடர்த்தியான புகையினால்
காற்று கவலைக்கிடமாவதாய்
அறிக்கை சொல்கிறது
சென்னையில்
கடந்த 24 மணி நேரத்தில்
காற்று மாசுபாட்டின் அளவு
190 என்று தரக்குறியீட்டில்
பதிவாகியுள்ளது
சுவாசக் கோளாறு
உள்ளவர்களும்
மூச்சு முட்டும் முதியவர்களும்
பாதிக்கப்படுகிறார்கள்
ஒரு பண்டிகை என்பது
இறுகிக்கிடக்கும்
மனத் தாழ்களுக்கு
எண்ணெய் இடுவதாகவும்,
உடைந்த உறவுகளை
ஒட்ட வைப்பதாகவும்,
வறுமைக் கோட்டுக்குக்
கீழ் உள்ளவர்களுக்கு
நிர்ப்பந்த சந்தோஷமாகவும்
திகழ்வதாகக் கருதப்படுகிறது
அவற்றை மீறி
சுற்றுச் சூழலின்
சுவாசக் குழாய்களில்
அழுக்குச்சுவர் கட்டுவது
ஆபத்து
நிகழ்காலப் பெருமக்கள்
எதிர்காலத்தைச் சிந்திப்பார்களா?
கொண்டாட்டம்
ஒரு குற்றமாகாமல்
தடுப்பார்களா?
நான் உங்கள்
சுதந்திரத்திற்கு எதிரியல்ல;
சுவாசத்திற்கு நண்பன்" எனத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை மக்களின் சந்தோஷத்திற்காக இருக்க வேண்டும். ஆனால், அது சுற்றுச்சூழலை கெடுத்து எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது எனக் கூறிய வைரமுத்து, நான் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எதரி அல்ல. ஆனால், சுற்றுச் சூழலுக்கு நண்பன் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்