‘அப்பாவின் தியாகம் மறைக்கப்படுகிறது’ -கவிஞர் வைரமுத்து ‘நச்’!
Vairamuthu: ‘கலைஞரின் பேரனுக்கு பாட்டு எழுதுகிறோம் என்கிற போது, என் தமிழ் நொண்டியடித்துக் கொண்டிருந்த என் மொழி, இவருக்கு பாட்டு எழுதுகிறேன் என்றதும் முண்டியடித்து வந்தது’
திருவின் குரல் படம் தொடர்பான இணையதள பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
‘‘அப்பா பாடல் வெற்றி பெற்றது என்றால், அதற்கு அப்பா தான் காரணம். அப்பா என்ற உறவு பெரும்பாலும் கண்டிப்பானது. அம்மா என்ற உணர்வு கனிவானது. அம்மா அணைத்து அன்பு செலுத்துவாள். அப்பா அடித்து அன்பு செலுத்துவாள். அம்மா என்றால் கண்ணீர் வரும். அப்பா என்றால் பயம் வரும். அந்த பயம் தான் சமூக ஒழுக்கம். நம்முடைய மரபு, நம்முடைய நெறி. இந்த பயத்தின் காரணமாகவே அப்பாவின் தியாகம் மறக்கப்பட்டுவிடுகிறது.
அப்பாவின் வலி பெரிது. அப்பா என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை நான் அப்பா ஆன பிறகு தான் கண்டுகொண்டேன் என்று என் மகன் கூறினான். என் மகனை நான் தூக்கி நெறிப்படுத்துவது, அறிவூட்டுவதிலிருந்து எனக்கு தெரிந்தது, நீங்கள் எவ்வளவு வலியை சுமந்திருப்பீர்கள் என்று என் மகன் கூறினான்.
அப்பாவின் பெருமை தெரிய வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் அப்பா ஆக வேண்டும். திருவின் குரல் இயக்குனர் ஹரீஷ் பிரபு, அப்பா பாடலுக்கு தலையிடவில்லை. எனக்கு அவர் கொடுத்த சுதந்திரத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., க்கு முழு பெறுமையும் போய் சேரும். அருள்நிதியை நேசிக்கும் முன்பே அவரது தாத்தாவை நான் நேசித்தவன். கலைஞரின் பேரனுக்கு பாட்டு எழுதுகிறோம் என்கிற போது, என் தமிழ் நொண்டியடித்துக் கொண்டிருந்த என் மொழி, இவருக்கு பாட்டு எழுதுகிறேன் என்றதும் முண்டியடித்து வந்தது.
எல்லாருக்கும் திரையுலகில் ஒரு தடை என்னவென்றால், உழைக்கிற அளவிற்கு உயரத்திற்கு வருவதில்லை. இது ஒரு விதி. விதி என்றால் தலை விதி அல்ல. கலை விதி. இதெல்லாம் என் முதலீடு. இன்று நான் செய்வது நாளைய வெற்றியின் தொகுப்பு. தொடர்ச்சியாக முயற்சி செய்பவன் இமாலய வெற்றி பெறுகிறான். என் அருமை தம்பி அருள்நிதி, நாளைய இமாலய வெற்றிக்கு இன்று முதலீடு செய்து கொண்டிருக்கிறார். திருவின் குரல் அழகான முதலீடு. லைகா நிறுவனம் மீது எனக்கு மதிப்பு உண்டு. திரை உலகிற்கு வருவதற்கு முன்பே அவர் மீது எனக்கு பிரியம். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்ட இந்த காலத்தில், தமிழ் திரை துறைக்கு நிறுவனமா கிடைத்தவர். லைகா ஒரு கலை தொழிற்சாலை ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் லைகா நிறுவனம் மூலம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
எங்களை எல்லாம் ஆளாய்ச் செய்த தந்தை குலத்திற்கு திருவின் குரல் படத்தில் பெருமை சேர்த்திருக்கிறோம். பாட்டு என்பது வானத்தில் இருந்து வருவதல்ல, தமிழுக்குள் இருந்து வருவதல்ல, கற்பனைக்குள் இருந்து மட்டும் வருவதல்ல, ஒரு கதை சொல்லக்கூடிய இயக்குனரின் விதத்தில் இருந்து கூட பாட்டு வரும்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசினார்.
டாபிக்ஸ்