எவ்வளவு தான் பொறுமை காப்பது.. மானமுள்ளவன் தெருவில் இறங்குவான்.. பொங்கிய வைரமுத்து
தூர்தர்ஷன் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் குறித்த பாடல் வரி தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து காட்டமாக பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விடுபட்ட தமிழ்த்தாய் வாழ்த்து வரி
அங்கு இசைக்கப்பட்ட பாடலில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டது. இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி வேண்டுமென்றே திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்த விடாமல் தடுத்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்,
கருத்து தெரிவித்த வைரமுத்து
இதுகுறித்து பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மிகக் காட்டமான ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழையும்
தமிழ் நாட்டையும்
திராவிடக் கருத்தியலையும்
எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்
பல நிகழ்வுகளைக் கண்டும்
காணாமல் போயிருக்கிறோம்
ஆனால்,
தமிழ்த்தாய் வாழ்த்தில்
"தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்"
என்ற உயிர் வாக்கியத்தைத்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து
தவிர்த்ததைக்
காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்
கடந்துபோக மாட்டார்கள்
இருதயக் கூடு எரிகிறது
எவ்வளவுதான்
பொறுமை காப்பது?
இந்தச் செயலுக்குக்
காரணமானவர்கள்
யாராக இருந்தாலும்
தமிழர்கள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார்கள்
"திராவிட" என்ற
சொல்லை நீக்கிவிட்டு
தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?
தமிழ்த்தாய் வாழ்த்தில்
தவிர்ப்பதற்கு மட்டும்
யார் தைரியம் கொடுத்தது?
திராவிடம் என்பது நாடல்ல;
இந்தியாவின்
ஆதி நாகரிகத்தின் குறியீடு
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
இதுபோன்ற இழிவுகள்
தொடர்ந்தால்
மானமுள்ள தமிழர்கள்
தெருவில் இறங்குவார்கள்;
தீமைக்குத் தீயிடுவார்கள்
மறக்க வேண்டாம்
தாய்மொழி காக்கத் தங்கள்
உடலுக்கும் உயிருக்குமே
தீவைத்துக் கொண்டவர்கள்
தமிழர்கள்
அந்த நெருப்பின் மிச்சம்
இன்னும் இருக்கிறது எங்களிடம்
எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தித் திணிப்பை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து காட்டம்
திராவிட எனும் சொல்லை நீக்கிவிட்டு தேசிய கீதத்தை பாடமுடியுமா? எனக் கேள்வி எழுப்பிய வைரமுத்து, தமிழ்த்தாய் வாழ்த்தில் மட்டும் தவிர்ப்பதற்கு யார் தைரியம் கொடுத்து எனவும் வினவியுள்ளார்.
திராவிடம் என்பது நாடு அல்ல. அது ஆதி நாகரிகத்தின் குறியீடு எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்த்தாய் வாழ்த்தில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள். என் நெஞ்சுக்கூடு எரிகிறது எனவும் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்கி தீமைக்கு தீயிடுவார்கள். அதனை மறக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
விளக்கமளித்த டிடி
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சம்மந்தப்பட்ட டிடி தொலைக்காட்சி விளக்கமளித்துள்ளது.
அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என விளக்கம் அளித்துள்ளது.
டாபிக்ஸ்