Thamarai:பாடல் எழுத கட்டளைகள் மூன்று;சமூகத்தை கெடுக்கக்கூடாது - தாமரை பளார்!
தொடக்க காலத்தில் என்னுடைய அனுமதியின்றி சேர்க்கப்பட்ட, மாற்றப்பட்ட பாடல் வரிகள் இருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் என்னை புரிந்து கொண்டவர்கள், அதற்கேற்ற பாடல் சூழ்நிலைகளோடுதான் என்னைத் தேடி வருகிறார்கள்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர் தாமரை. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தார். கவிதை மற்றும் இலக்கியத்தின் மீது கொண்ட காதல் காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்த அவர் தன்னுடைய கட்டுரைகள் மற்றும் கவிதைகள் வாயிலாக அறியப்பட்டார்.
இவருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதியவர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் இசையில் வெளியான மின்னலே திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வசீகரா’ பாடலை எழுதினார்.
இந்த பாடல் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் அந்த கூட்டணி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் என வரிசையாக இணைந்து பிளாக் பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுத்தது. இதனிடையே மற்ற திரைப்படங்களில் எழுதிய பாடல்களும் எகிடுதகிடு ஹிட் அடித்தன.
‘அழகிய அசுரா’,"மலர்களே மலர்களே" ‘ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா ’, ‘மன்னிப்பாயா’ ‘முன் தினம் பார்த்தேனே’ ‘யார் அழைத்தது’ உள்ளிட்ட பல பாடல்கள் இவரது ட்ரேடு மார்க்குகள்.
இந்த நிலையில் அண்மையில் தி இந்து தமிழ் இணையதளத்திற்கு இவர் கொடுத்த பேட்டியில் பாடல் எழுதுவதற்கு தான் வைத்திருக்கும் நிபந்தனைகள் பற்றியும் சமூகத்தை கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், “ பாடல்களில் தேவையில்லாத ஆங்கில வார்த்தைகளை சேர்க்க மாட்டேன். ஆபாச வார்த்தைகளை எழுத மாட்டேன். இரட்டை அர்த்தம் வரும் படியான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். இதுவே என்னுடைய நிலையான நிபந்தனைகள்.
தொடக்க காலத்தில் என்னுடைய அனுமதியின்றி சேர்க்கப்பட்ட, மாற்றப்பட்ட பாடல் வரிகள் இருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் என்னை புரிந்து கொண்டவர்கள், அதற்கேற்ற பாடல் சூழ்நிலைகளோடுதான் என்னைத் தேடி வருகிறார்கள்.
இந்த சமூகத்தைத் திருத்துகிறேனோ இல்லையோ, கெடுக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். போதைப்பொருள்களை தூக்கிப் பிடிக்கும் பாடல்களுக்கு என்னிடம் இடம் இல்லை. ” என்று பேசியிருக்கிறார்.
டாபிக்ஸ்