தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Na. Muthukumar : அன்றும்.. இன்றும்.. என்றும் போற்றப்படுபவர்.. வரிகளில் வாழ்கிறார்.. நா.முத்துக்குமார் நினைவு நாள் இன்று!

Na. Muthukumar : அன்றும்.. இன்றும்.. என்றும் போற்றப்படுபவர்.. வரிகளில் வாழ்கிறார்.. நா.முத்துக்குமார் நினைவு நாள் இன்று!

Divya Sekar HT Tamil
Aug 14, 2023 05:00 AM IST

இவர் உயிர் பிரிந்தாலும் இவரின் உயிர் வரிகள் உலகம் உள்ள வரை வாழும். இன்று நா. முத்துக்குமார் நினைவு நாள். இன்றைய தினம் அவரை நினைவுக்கூறுவோம்.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நினைவு நாள்
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நினைவு நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார். தன்னுடைய 4வது வயதில் இவரது தாயை இழந்தார். அப்போதிலிருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். இயக்குனராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் உதவியாளராகவே பணியாற்றினார். அதன் பிறகு சீமான் இயக்கித்தில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

நா.முத்துக்குமார் வரிகளுக்கு மயங்காத, கலங்காத உள்ளங்கள் இல்லவே இல்வை. காதல், சோகம், ஏக்கம், கொண்டாட்டம், துரோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் தன் பாடல் வரிகளால் உணர்த்தி இருப்பார்.முத்துக்குமாரின் தந்தை ஒரு தமிழாசிரியர் என்பதால் வீடு முழுவதும். புத்தகங்களால் நிறைந்து கிடக்கும். சிறு வயதிலேயே அம்மாவும் இறந்துவிட புத்தகங்கள் தான் அவரை அரவணைத்தது.

போக்கிரி, அழகிய தமிழ் மகன், சந்திரமுகி, நந்தா, வாரணம் ஆயிரம் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் இவரது படைப்புகளுக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது உள்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை படைத்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த கிரீடம் படத்திற்கு வசன கர்த்தாவாகவும் இருந்துள்ளார். தங்கமீன்கள் படத்தின் ஆனந்த யாழை மீட்டுகிறாள் மற்றும் சைவம் படத்தின் அழகே அழகே என்ற பாடலுக்கு இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

மகளின் அன்பை ரசிக்கும் தந்தைக்கு

“ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்” என்ற வார்த்தைகளை கொடுத்து அதற்கு தேசிய விருதையும் வென்றார். இப்படி இவரின் பாடல்களை ஓவ்வொன்றையும் கூறி கொண்டே போகலாம். வார்த்தைகளால் அவ்வளவு மாயஜாலம் செய்து இருப்பார்.

அம்மா தொடர்பான எத்தனையோ பாடல்களை நான் கேட்டு இருப்போம். ஆனால் அப்பாவை போற்றும் பாடல்கள் அரிது. அப்படி ''ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு'' என தந்தையின் அருமையைப் பாடலில் சொன்னவர் இவர். மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு என மழையை கொண்டாடி தீர்த்தவர்கள் மத்தியில் 'வெயில்' அழகு என்றார்.

காதல் கொண்டேன் படத்தில் வினோத்தின் மொத்த உணர்வுகளையும் ''தேவதையை கண்டேன், காதலில் விழுந்தேன்'' பாடலில் கடத்தி இருப்பார்.

குறிப்பாக ‘தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் என் மனம் பாழாய் போகும் போகும்’என்ற வரிகளில் தவிக்கும் அந்த இளைஞனின் மனநிலையை மிகச் சிறப்பாக சொல்லி இருப்பார்.

தனக்குள் மெல்ல வரும் காதலை 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் ''கனா காணும் காலங்கள்'' பாடலில் உணர வைத்திருப்பார். அதில்,

“நனையாத

காலுக்கெல்லாம்

கடலோடு உறவில்லை

நான் வேறு நீ வேர் என்றால்

நட்பு என்று பேரில்லை

பறக்காத

பறவைக்கெல்லாம்

பறவை என்று பெயரில்லை

திறக்காத மனதில் எல்லாம்

களவு போக வழியில்லை” என காதலை சொல்லி இருப்பார்.

யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற” எங்கேயோ பார்த்த மயக்கம்

எப்போதோ வாழ்ந்த நெருக்கம்

தேவதை இந்த சாலை ஓரம்

வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

ஆதி அந்தமும் மறந்து

உன் அருகில் கரைந்து நான் போனேன்” இந்த பாடலில் பெண்ணின் ஒவ்வொரு அசையும் அவரின் வரிகளில் கேட்டும் போது அவ்வளவு அவருக்கு இணை அவரே என்பதை உணர்த்தும்.

பாபநாசம் படத்தில் வரும் ''ஏயா என் கோட்டிக்காரா'' பாடலில் எழுதி இருப்பார். அதைல் “காச போல காதலும் செலவுக்கில்லட்டி கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி” என்று மனம் உருக வைப்பார்.

பாடல் வரிகள் மூலம் மக்களின் உணர்வுகளோடு கலந்து, மனதில் நீங்கா இடம் பிடித்த கலைஞன் தான் நா.முத்துக்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டி உயிரிழந்தார். இவர் மறைந்தாலும் இவரின் பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன. இவர் உயிர் பிரிந்தாலும் இவரின் உயிர் வரிகள் உலகம் உள்ள வரை வாழும். இன்று நா. முத்துக்குமார் நினைவு நாள். இன்றைய தினம் அவரை நினைவுக்கூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்