அறிமுகப் படத்திலேயே அதகளம் செய்த இயக்குநர்கள் லிஸ்ட்! இத்தன பேரா! மின்னலே முதல் லப்பர் பந்து வரை!
சினிமா துறையில் நுழைந்து தனது முதல் படங்களிலேயே அவர்களை நிரூபித்துக் காட்டிய பல தமிழ் பட இயக்குநர்கள் உள்ளனர்.அவர்களில் சிலரைக் குறித்து இந்த கட்டுரை வழியே தெரிந்துக் கொள்ளலாம்.
வெள்ளித்திரையில் சாதிக்க வேண்டும் என்பத பலரின் கனவாக இருக்கலாம். மற்ற துறைகளைக் காட்டிலும் இந்த திரைப்படத்துறையில் சாதிப்பது சற்று கடினம் தான். இதற்கான வாசல்கள் அனைத்தும் பல சமயங்களில் திறப்பதில்லை. அதனை பலர் போராடி அந்த வாசலை அடைகின்றனர். சிலர் அதில் சோர்வாகி திரும்புகின்றனர். இருப்பினும் சினிமா என்பது ஒரு மாயை, ஆசையை தூண்டி நம்மை பலியாக்கும் என்ற பொதுவான கருத்தும் நிலவி வருகிறது. இந்த நிலையில் சினிமாத் துறையில் நுழைந்து தனது முதல் படங்களிலேயே அவர்களை நிரூபித்துக் காட்டிய பல தமிழ் பட இயக்குநர்கள் உள்ளனர்.அவர்களில் சிலரைக் குறித்து இந்த கட்டுரை வழியே தெரிந்து கொள்ளலாம்.
பாரதிராஜா - 16 வயதினிலே
தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என பாராட்டப்படும் பாராதிராஜாவிற்கு1977 இல் வெளியான முதல் படமான 16 வயதினேலே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளான கமல், ரஜினி, ஸ்ரீதேவி என எல்லாரையும் இந்த படத்தில் ஒன்றாக நடித்த வைத்த பெருமையும் அவரையே சாரும். இப்படம் அந்த ஆண்டின் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை குவித்து இருந்தது.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் - புதிய பாதை
தமிழ் சினிமாவின் மாறுபட்ட புதிய கோணத்தில் வரும் படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் தான் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் இயக்கும் எல்லா படங்களிலும் ஏதோ ஒரு புதுமையை புகுத்தும் இவரது முதல் படமான புதிய பாதை 1989 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தேசிய விருதையும் பெற்றது.
ஆர்.கே. செல்வமணி - புலன் விசாரணை
திரைப்பட கல்லூரியில் இருந்த வந்த அறிமுக இயக்குநருக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தியவர் தான் இயக்குனர் ஆர். கே. செல்வமணி. இவரது அறிமுகப்படமான புலன் விசாரணை 1990 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக கேப்டனின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கும் வாய்ப்பும் ஆர். கே. செல்வமணிக்கு கொடுக்கப்பட்டது.
கௌதம் வாசுதேவ் மேனன் - மின்னலே
தமிழ் சினிமாவில் காதல் படங்கள் என்றால் இவரது படங்களுக்கு முக்கியமான இடம் கொடுக்கலாம். இயக்குநர் கௌதம் வாசுதேவின் முதல் படமான மின்னலே 2001 ஆம் ஆண்டு வெளியாகி, ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் பாடல்கள் காதலர்களை வசீயப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறிவிட்டார்.
அமீர் - மௌனம் பேசியதே
இயக்குநர் அமீர் அவர்களது முதலாவது படமான மௌனம் பேசியதே 2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை வென்றது. நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்தப் படம் முக்கியமான மைல்கல்லாக இருந்தது.
வெற்றிமாறன்- பொல்லாதவன்
ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று படம் இயக்கும் இயக்குனர்களில் முதன்மையானவரான இயக்குநர் வெற்றிமாரனின் முதல் படமான பொல்லாதவன் 2007 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ராம் - கற்றது தமிழ்
மக்களின் இயல்பு வாழ்க்கையை, மன உளவியலை படங்களின் வாயிலாக கூறும் இயக்குநர் ராமின் முதல் படமான கற்றது தமிழ் 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளியானது. வசூல் ரீதியாக சாதிக்க வில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை எடுத்தது.
சுப்ரமணியபுரம் - சசிகுமார்
இயக்குநர், நடிகர் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் சசிகுமார் முதன் முதலாக இயக்கி நடித்து 2008 இல் வெளியான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். முதலில் இப்படத்திற்கு திரையரங்குகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் பின் அணைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் ஆக ஓடியது.
கார்த்திக் சுப்புராஜ் - பீட்சா
கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த இயக்குநர் தான் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் முதல் படமாக பீட்சா 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளியாகி திரையரங்குகளை அதகளம் செய்தது.
மாரி செல்வராஜ் - பரியேறும் பெருமாள்
மனிதர்களுக்கு இடையே உள்ள பாகுபாடால் சக மனிதன் பாதிக்கப்படும் வலியை உயிரோட்டமாக படம்பிடித்து காட்டும் இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களின் முதல் படமான பரியேறும் பெருமாள் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பலரின் நெஞ்சை உலுக்கியது.
லப்பர் பந்து - தமிழரசன் பச்சைமுத்து
ஹரிஸ் கல்யாண் மற்றும் தினேஷ் நடித்து சமீபத்தில் வெளியான லப்பர் பந்து, இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவிற்கு முதல் படமாகும். இதுவும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
மேலும் பலர்
இதில் கூறபட்டவர்களை தாண்டி பல இயக்குனர்களின் முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு, நலன் குமாராசாமியின் சூது கவ்வும், சி. பிரேம்குமாரின் 96, அ. வினோத்தின் சதுரங்க வேட்டை , இயக்குனராக களமிறங்கிய தனுஷின் ப. பாண்டி என இந்த வரிசை நீண்டு கொண்டே உள்ளது.
டாபிக்ஸ்