எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்கள்! ஒரு பார்வை!
சினிமாவில் இருந்து அரசியலுக்கு பல நடிகர்கள் வந்திருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே ஆட்சி எனும் அரியணையில் ஏற முடிந்தது. அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27 ) நண்பகல் தொடங்க உள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு பல நடிகர்கள் வந்திருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே ஆட்சி எனும் அரியணையில் ஏற முடிந்தது. அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
எம்ஜிஆர்
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்ஜிஆர் அவர்கள் 1953ல் திமுகவில் ஐக்கியம் கொண்டார். அறிஞர் அண்ணா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது படங்களில் அண்ணாவின் கருத்துகளையும் திமுகவின் கொடியையும் பயன்படுத்தி திமுகவின் கவர்ச்சி முகமாக அறியப்பட்டார். 1962ல் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1967 தேர்தலில் சட்டம் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் பொருளாளராக பொறுப்பேற்ற எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 1972 ல் திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். பின்பு தனது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1977-ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட அதிமுக முதல் தேர்தலிலே பெரும்பான்மை இடங்களைப் பெற்று எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 1987 எம்ஜிஆர் மறைவு வரை திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.