Leo FDFS Review: ‘விருந்தா? மருந்தா?’ லியோ முதல் காட்சி விமர்சனம் கேரளாவில் இருந்து!
Leo Review: தமிழகத்தில் தாமதம் என்றாலும், தமிழக ரசிகர்களுக்காக கேரளாவில் அதிகாலை காட்சியை பார்த்த உடன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வழங்கும் லியோ படத்தின் முதல் விமர்சனம் இதோ:
Leo Movie Review: ஹைனா, ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ், எல்.சி.யூ, விஜய் என இந்திய சினிமாவில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த திரைப்படம் லியோ. பல்வேறு கட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
படத்தின் டைட்டில் கார்டு போடும் முன்னரே, லியோ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவல் தான் என உறுதிப்படுத்தி விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கதையின் கரு:
ஒரு பக்கம் விலங்குகளை காப்பாற்றுவது, இன்னொரு பக்கம் காபி ஷாப், மனைவி, குழந்தைகள் என சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில் ஒரு நாள், தன் குழந்தைக்கு சிலரால் ஆபத்து நேரிட, எதிரில் நிற்கும் அத்தனை பேரையும் நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்துகிறார்.
இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் கூட்டாளிகள் பார்த்திபனையும், அவனின் குடும்பத்தையும் கொல்ல முற்பட, அவர்களுடன் பெரும் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார் பார்த்தி.
இதனிடையே பார்த்தியின் வாழ்க்கைக்குள் வரும் ஆண்டனி தாஸ் அங்கு இருப்பது பார்த்தி அல்ல லியோ என புது குழப்பத்தை உருவாக்குகிறார். அப்படியென்றால் உண்மையில் அங்கு இருப்பது பார்த்தியா, லியோவா என்ற கேள்விக்கான பதிலை கண்டு பிடித்தால் அதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் முற்றிலும் வேறு விதமான விஜயை பார்க்க முடிகிறது. ஆம், அன்பு பொழியும் அப்பாவாக, பொறுப்புள்ள கணவனாக, குடும்பத்துக்காக பொங்கி எழும் பார்த்தியாக, கில்லாடி லியோவாக என நடிப்பில் வேரியேஷன் புகுத்தி வியப்பு காட்டுகிறார்.
குறிப்பாக லோகேஷின் ஃபிரேமில் விஜய் வரும் சில இடங்கள் கிளாஸ் ரகத்தை சேர்ந்தவையாக வந்து இருக்கின்றன. விஜய், திரிஷா காதலில் அவ்வளவு ஆழம் இருந்தது.
ஆனால் அந்த காதலை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்து இருக்கலாம். அர்ஜுனின் தர லோக்கல் ஆக்ஷன் ரசிக்கும் படியாக இருந்தது. ஆண்டனியாக வரும் சஞ்சய் தத் வழக்கமான வில்லனிசத்தில் மிரட்டுகிறார். கவுதம் மேனன் அவருக்கே உரித்தான கிளாஸ் பாணியில் கலக்கி இருக்கிறார். இதர கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன.
முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார். ஆம், லியோவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு அவர் வைத்த காரணம் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், அதை கொஞ்சம் மறக்கடித்து திரையை நோக்கி நம்மை இழுத்து செல்வது விஜயின் நடிப்பும், ஆக்ஷனும் தான். பின்னணி இசையில் அனிருத் முழு பலம் கொடுத்து தாங்கி இருக்கிறார். எல்.சி. யூ கனெக்ட் சுவாரசியம் கூட்டியது. இதற்கு முன்னதாக லோகேஷ் படங்களில் இரண்டாம் பாதி எப்போதுமே தாண்டவமாக அமைந்து இருக்கும்.
ஆனால் அது இதில் மிஸ்ஸானது சற்று ஏமாற்றம் தான். இருப்பினும் ஆக்ஷனில் லோகேஷ் மற்றும் அன்பறிவு மாஸ்டர்ஸ் மேற்கொண்ட மெனக்கெடல் பாராட்டுக்கு உரியது. ஹைனா தொடர்பான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் ஓகே என்றாலும், அதன் தாக்கம் பெரிதாக இல்லாமல் போனது லியோவிற்கு ஏற்பட்ட சறுக்கல்தான்.
மனோஜ் ஒளிப்பதிவு அபாரம். கதையின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால், லியோவை கொண்டாடி இருக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்