HBD Vivek: ஜனங்களின் கலைஞனாக மக்களின் மனங்களில் குடியிருக்கும் விவேக் பிறந்தநாள் இன்று
காமெடி நடிகனால் என்ன மற்றவர்கள் துன்பங்களை மறந்து சிரிக்க வைக்க முடியும் என்பதையும் கடந்து சிந்திக்க வைக்கவும் முடியும் என்பதை தனது நகைச்சுவைகளின் மூலம் புரிய வைத்ததோடு, செய்தும் காட்டியவராக மறைந்த நடிகர் விவேக் இருந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைஞன் விவேக். முகபாவனை, உடல்மொழி, வேடிக்கையான பேச்சு என பல்வேறு வகைகளில் ஒருவரை நாம் சிரிக்க வைக்கலாம். ஆனால் இதையும் கடந்து சரி, தவறு பற்றி தெளிவாக மக்களை சிந்திக்க வைத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார் நடிகர் விவேக்.
விவேக்கை பழம்பெரும் காமெடி நடிகர் என்.எஸ். கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, அவரை கலைவாணர் என அழைத்தது போல் நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். தனக்கு மக்களால் கொடுக்கப்பட்ட இந்த அடைமொழிக்கு ஏற்ப சிரக்காமலேயே மற்றவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகராக இருந்து வந்தார்.
இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் மறைந்த இயக்குநர் பாலசந்தர் அறிமுகப்படுத்திய பொக்கிஷங்களில் ஒன்றாக தமிழ் திரையுலகில் நுழைந்தார் விவேக். பாலசந்தரின் ஹீரோயின் செண்ட்ரிக் படமான மனதில் உறுதி வேண்டும் படம் தான் விவேக்கின் முதல் படம். அந்த படத்தில் விவேக் என்ற கேரக்டரிலேயே தோன்றிய அவர் மறுபடியும் பாலசந்தர் இயக்கத்தில் புதுபுது அர்த்தங்கள் படத்தில் நடித்தார்.
இந்த படத்துக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைய, தான் பார்த்து வந்த வங்கி வேலையை விடுத்து முழு நேர நடிகரானார். அப்போது காமெடியின் உச்சத்தில் இருந்த கவுண்டமணி, செந்தில் இல்லாத படங்களில் விவேக் தான் காமெடியனாக தோன்றும் அளவுக்கு முன்னேறினார். அதன் பிறகு வருடத்துக்கு குறைந்தது 5 படங்களாவது கமிட்டாகி நடித்து வந்த விவேக், சுமார் 225க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வென்றுள்ள ஐந்து முறை, விவேக் கலைவாணர் விருது வென்றவராகவும் உள்ளார். மூன்று முறை பிலிம்பேர் விருது, மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் இவர் வசம் உள்ளன.விவேக்குக்கு நடிப்பை விட இயக்கத்தில் தான் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் எழுத்து பணிகளையும் இவர் கவனித்துள்ளார்.
மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவராக இருந்து வந்த விவேக், கலாமின் வலியுறுத்தலின்படி தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.
தமிழ் தவிர மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த காமெடியனாக விவேக் இருந்துள்ளார். பாடகராகவும், பாடலாசிரியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இவர் ஹீரோவாகவும் சொல்லி அடிப்பேன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் திரைக்கு வராமல் பெட்டிக்குள் முடங்கியது.
தமிழ் சினிமாவில் 90ஸ்களில் மூத்த ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை இணைந்து நடித்த காமெடியன் என்ற பெருமையை பெற்ற விவேக், உலகநாயகன் கமலுடன் மட்டும் நீண்ட காலமாக இணையாமல் இருந்து வந்தார். அதுவும் கமலின் புதிய படமான இந்தியன் 2 படத்தில் நடந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் தனது காட்சிகள் முழுமையாக முடிவதற்குள் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு விவேக் மறைந்தார். இருப்பினும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விவேக்கின் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், விவேக் - கமல் காம்பினேஷனை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
பிறர் மனதை புண்படுத்தாமல் சிரிக்க வைத்து ஜனங்களின் கலைஞன் என்று போற்றப்பட்ட விவேக், மக்களின் மனங்களை விட்டு நீங்காமல் குடியிருந்து வருகிறார். நகைச்சுவை மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்குக்கு இன்று 62வது பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்