Thengai Srinivasan: ‘முருகா முருகா’, 'அதே அதே' - காமெடி, வில்லன், குணச்சித்திரம் என முத்திரை பதித்த தேங்காய் சீனிவாசன்
காமெடி, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தவர் தேங்காய் சீனிவாசன். சுருக்கமாக சொல்வதென்றால் இவர்தான் ப்ளாக் அண்ட் ஓயிட் காலகட்டத்தின் கவுண்டமணியும், வடிவேலும் கலந்த கலவை எனலாம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஒருவரும் 16 அடி உயரத்தில் கட்அவுட் வைத்த பெருமையை பெற்ற நடிகராக இருப்பவர் தேங்காய் சீனிவாசன். 1960களின் இறுதியில் இருந்து அவர் இறந்த 1980 இறுதி வரையிலும் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவே வலம் வந்துள்ளார்.
ஹீரோ, ஹீரோயின் தேர்வுக்கு அடுத்தபடியாக தேங்காய் சீனிவாசன் அந்தப் படத்தில் இருந்தால் படம் ஹிட் என்ற நம்பிக்கையை விதைத்த நடிகராக தேங்காய் சீனிவாசன் இருந்துள்ளார். மற்ற நடிகர்களை போல் தேங்காய் சீனிவாசன் நடிப்பு பயணமும் மேடை நாடகங்களில் தான் தொடங்கியது. ரயில்வேதுறையில் ஊழியராக இருந்த இவர் தனது தந்தையும், நடிகருமான ராஜவேலு போல் இயல்பிலேயே நடிப்பாற்றல் கொண்டவராக இருந்துள்ளார். ஐசிஎஃப் ஊழியரான தேங்காய் சீனிவாசன் அங்குள்ள நாடகக் குழுவில் இணைந்த பல்வேறு நாடகங்களை அரகேற்றினார். நடிப்பின் மீதான அவரது இந்த ஆரவம்தான் சினிமாத்துறைக்கு அழைத்து வந்தது.
கல்மணம் என்ற மேடை நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார். இவரின் நடிப்பை மிரண்டு போன இவருக்கு முந்தைய காலத்துக்கு காமெடி நடிகரான கே.ஏ. தங்கவேலு, இவரது பெயரை 'தேங்காய்' சீனிவாசன் என்று அடைமொழியுடன் மாற்றி அமைத்தார்.
காமெடி, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்த தேங்காய் சீனிவாசன், ஹீரோவாகவும் நடித்துள்ளார். உயரமான தோற்றம், சுருல் முடி, சேமியா போன்ற மீசை, பல படங்களில் மீசை இல்லாமலும் தோற்றத்திலேயே பார்ப்போரை மயக்கும் விதமாக இருக்கும் தேங்காய் சீனிவாசன், தனது கம்பீரமான குரல் மூலம் வெளிப்படுத்தும் டயலாக் டெலிவரி ரசிகர்களை வயிறு குலுங்க பல படங்களில் சிரிக்க வைத்துள்ளன.
தேங்காய் சீனிவாசன் என்றதும் பலருக்கு நினைவுக்கு வரும் காட்சியாக இருப்பது தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்தை இண்டர்வியூ செய்யும் காட்சிதான். 2013ஆம் ஆண்டில் போபர்ஸ் இதழில் இந்திய சினிமாவின் சிறந்த 25 நடிப்புக்கான படங்களில் தேங்காய் சீனிவாசனுக்காக இந்த படம் இடம்பெற்றது. இந்தப் படத்தை ரஜினிக்காக என்பதை காட்டிலும் தேங்காய் சீனிவாசன் நடிப்புக்காகவே பலரும் இன்று வரையிலும் ரசித்து பார்த்து வருகிறார்கள்.
ப்ளாக் காமெடி என்று இன்று நாம் கொண்டாடும் வகையறா காமெடியை அந்த காலகட்டத்தில் அசால்டாக பல படங்கலில் செய்தவர் தேங்காய் சீனிவாசன். பாடி லாங்குவேஜ், முகபாவனை, டயலாக் டெலிவரி அல்லது மாடுலேஷன் என பன்முகத்தன்மை இவரது காமெடிக்களில் நிறைந்திருக்கும். இயக்குநர் சிகரம் பாலசந்தரால் போற்றப்படும் நடிகராகவும், மற்ற நடிகர்களை போல் நடிப்பு சொல்லிக்கொடுக்காமல் அவரது போக்கிலே விடப்பட்ட நடிகர் என்ற பெருமையும் பெற்றவர் தேங்காய் சீனிவாசன்.
அதேபோல், காமெடி வேடங்களை கடந்து வில்லத்தனத்திலும் மிரட்டலான இவரது நடிப்பும், குணச்சித்திர வேடங்களில் கணிவான நடிப்பும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. எம்ஜிஆர், சிவாஜி கணேசனுடன் தொடங்கிய தேங்காய் சீனிவாசன் பயணம் அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை தொடர்ந்தது. காமெடி, குணச்சித்திரம், வில்லன் என நடிப்பில் ஆல்ரவுண்டராக மிரட்டிய தேங்காய் சீனிவாசன் தனது 20 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 900க்கும் மேற்பட்ட படங்கலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினி பேசும் "சிவாஜியும் நான் தான், எம்ஜிஆரும் நான் தான்" வசனம் மிகப் பிரபலம். அதேபோல் இன்றைய தலைமுறையினருக்கு புரியும்படி சொல்வதென்றால் நடிப்பில் கவுண்டமணியும், வடிவேலும் லேட்டஸ்ட் காமெடியன்கள் அனைவரும் கலந்த கலவை தான் தேங்காய் சீனிவாசன் என்று கூறலாம்.
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட சிகிச்சை பெற்று வந்த தேங்காய் சீனிவாசன், சிகிச்சை பலனின்றி நவம்பர் 9ஆம் தேதி உயிரிழந்தார். இன்று அவரது 36ஆம் ஆண்டு நினைவு நாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்