தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Late Comedy Actor Nellai Siva Birthday Today

HBD Nellai Siva: நெல்லை தமிழை காமெடியால் உலகறிய செய்த தமிழ் சினிமாவின் 'அண்ணாச்சி'! நெல்லை சிவா பிறந்தநாள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 16, 2024 05:45 AM IST

"கிணத்த காணுமா?", "ஏ அது ஐயாவோட சின்ன வீடு பேரு", "அண்ணாச்சி! தமிழ்நாடு", "ஏ உங்க அக்காவ ஐயர் கூட அனுப்பிட்டுதான் பேக்கரியை வாங்குனயாமே" என சொல்லும்போதே சிரிப்பலையை வரவழைக்கும் விதமாக பல வசனங்களை நெல்லை ஸ்லாங்கில் பேசியுள்ளார் நெல்லை சிவா.

மறைந்த காமெடி நடிகர் நெல்லை சிவா
மறைந்த காமெடி நடிகர் நெல்லை சிவா

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சோலோ காமெடியனாக இல்லாவிட்டாலும், தனது தனித்துவ நெல்லை தமிழ் பேச்சால் கவனத்தை ஈர்த்தவர் நெல்லை சிவா.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், நடிப்பதற்காக சான்ஸ் தேடிக்கொண்டிருந்த மன்சூர் அலிகான், போண்டா மணி ஆகியோரின் அறிமுகம் அவர்களின் நண்பரானார். இயக்குநர் பாக்யராஜின் தொலைக்காட்சி தொடரில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய நெல்லை சிவா, நெல்லை தமிழில் இருக்கும் தனது தனித்துவ பேச்சால் சினிமாவில் தொடர் வாய்ப்புகளை பெற்றார்.

பாண்டியராஜன் முதல் படமான ஆண்பாவம் தான் நெல்லை சிவாவுக்கு அறிமுக படம். இதன் பின்னர் சுமார் 8 ஆண்டு காலம் இடைவெளிக்கு பின் நண்பர் மன்சூர் அலிகான் நடித்த படத்தில் நடித்தார்.

இந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அமையை, சிறு சிறு வேடங்களில் தோன்றினார். நெல்லை சிவாவின் நடிப்பு திறமை வெளிக்காட்டியது அவரது வசன உச்சரிப்பும், அழகு நெல்லை தமிழும் தான்.

பொதுவாக கதையின் களத்துக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் அந்த மண்வாசானை மாறாத விதமாக கெட்டப், லுக், நடை உடை பாவான, வசனங்கள் பேசுவது இயல்பு. ஆனால் நெல்லை சிவாவுக்கு அந்த பாராபட்சம் எதுவும் கிடையாது. சென்னையை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் சரி, கிராமத்தை பின்னணியாக கொண்ட கதையானாலும் சரி அவர் பேசுவது நெல்லை மண்ணின் பேச்சு மட்டும். இதுவே அவரை ஒவ்வொரு படத்திலும் தனித்துவமாக காட்டியது.

1990 இறுதி, 2000ஆவது ஆண்டு தொடக்க காலகட்டத்தில் காமெடி என்றால் விவேக் அல்லது வடிவேலு என இருந்தது. சில படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தார்கள். ஆனால் இவர்கள் இருவரிடமும் இணைந்து தனக்கை உரித்தான பாணியில் காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தார் நெல்லை சிவா.

குறிப்பாக வடிவேலுவின் கிணத்த காணும் காமெடியில் போலீசாக வரும் நெல்லை சிவா பேசும் வசனமும், அவர் கொடுக்கும் ஷாக் எக்ஸ்பிரஷனும் அந்த காட்சி பெரிய அளவில் ரீச் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்ற கூறலாம்.

அதேபோல் ரன் படத்தில் மாதவனை தேடி அலையும் விவேக்கை, அரசியல் ஊர்வலத்துக்காக அழைத்து செல்லும் நெல்லை சிவா, விவேக்கை மிரட்டுகிறேன் பேர்வழி என காமெடியில் லூட்டி செய்திருப்பார்.

மற்றொரு பிரபல வடிவேலு காமெடியாக இருந்து வரும் கிரி படத்தின் காட்சியாக, கணபதி ஐயர் காமெடியில், வேறொருவர் நடித்த காட்சிக்கு நெல்லை சிவா தனக்கை உரித்தான நெல்லை தமிழில் டப் செய்திருப்பது சிறந்த டார்க் காமெடி வகையறாவாக இருக்கும். டப்பிங் ஸ்டுடியோவில் வேறு படத்துக்காக பேசிவட்டு வந்த நெல்லை சிவாவை நிற்க வைத்து இந்த காட்சிக்கு டப் செய்ய வைத்த சுவாரஸ்ய கதையை கிரி பட இயக்குநர் சுந்தர் சி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

ஓரம் போ படத்திலும் டார்க் காமெடியில் கலக்கியிருக்கும் நெல்லை சிவாவுக்கு, தனியாக இண்ட்ரோ காட்சியே வைத்திருப்பார்கள். அதில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டும் மும்பையை சேர்ந்த தாதாவிடம், அண்ணாச்சி தமிழ்நாடு என கூறி அரிவாள் எடுத்து போட்டியாக வைத்து கலகலப்பூட்டியிருப்பார்.

நெல்லை தமிழில் சகோதரரை, வயதில் மூத்தவர்களை அண்ணாச்சி என்றே அழைப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் அண்ணாச்சியாகவே பல்வேறு மறக்க முடியாத காமெடிக்களாக் சிரிக்க வைத்த நெல்லை சிவாவுக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.