HBD Kuladeivam Rajagopal : நகைச்சுவை நாயகர்.. சின்னக் கலைவாணர்.. வில்லுப்பாட்டு கலைஞர்.. மறக்க முடியுமா இவரை!
தமிழ்த் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட ஓர் அற்புதமான கலைஞர் குலதெய்வம் ராஜகோபால். திரைத்துறையில் இவர் விட்டுச்சென்ற வெற்றிடம் யாராலும் ஈடு செய்ய முடியாதது.
குலதெய்வம் ராஜகோபால் தமிழ் திரைத்துறையின் அரை நூற்றாண்டு கால அற்புத கலைஞன். தனது விடா முயற்சியால் தன் நாடக மேடை அனுபவத்தை முன்னிறுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர். 1960, 70 களில் அன்றைய வெற்றி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தவர் குலதெய்வம் ராஜகோபால். இவர் சுறு சுறுப்பு, உடல் மொழி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தேச பக்தி மிக்க நடிகர்.
குலதெய்வம் ராஜகோபால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டமாணிக்கம் என்ற சிற்றூரில் 1931 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். தந்தை வீராசாமி நாயுடு மற்றும் தாய் தெய்வானி அம்மாள். தந்தை கிராம பாகவதர் மற்றும் கட்டிடம் கட்டுபவர். சிறுவயதிலிருந்தே தெருக்கூத்து நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய அவர், 12 வயதில் திருச்சியில் உள்ள பாய்ஸ் தியேட்டர் கம்பெனியில் சேர்ந்தார்.
16 வயதில் மதுரையில் உள்ள கலாமணி தியேட்டர் கம்பெனியில் சேர்ந்தார். சேலத்துக்குச் சென்ற ராஜகோபால் , என்.எஸ்.கிருஷ்ணனைச் சந்தித்தார். அவருக்கு நெருக்கமான ராஜகோபால் பின்னர் கிருஷ்ணனின் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்து இயக்கிய புது வாழ்வு திரைப்படத்தில் ராஜகோபால் அறிமுகமானார்.
இவர் 1955 ஆம் ஆண்டு வெளியான காவேரி திரைப்படத்தில் நடித்தார்.1956ல் குலதெய்வம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக ராஜகோபால் நடித்தார் . குலதெய்வம் என்ற தலைப்பில் படத்தின் வெற்றிக்கு ராஜகோபால் பெயர் சூட்டப்பட்டது. குலதெய்வம் திரைப்படத்தில் நடித்த காரணமாக இவர் குலதெய்வம் ராஜகோபால் என்று அழைக்கப்படுகிறார்.
1950கள் மற்றும் 1960களில் பிரபலமாக இருந்தார் குலதெய்வம் ராஜகோபால். அவர் ஐந்து தசாப்தங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சுமார் 15 ஆண்டுகாலம் திரைப்படத் துறையிலிருந்து விலகியிருந்தவரை கே. பாக்கியராஜ் தனது படங்களில் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தார்.
இவர் நடிகர் பாக்யராஜின் மூன்று திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார். அவரை இன்றைய தலைமுறைகளுக்கு அதிகம் தெரியாது. ஆனால் 80, 90ஸ்களை கேட்டால் கண்டிப்பாக அவரை தெரியும். இவர் போட்டோவை பார்த்தால் இவர் பாக்யராஜ் படத்தில் நடித்திருப்பார் என்று சொல்லுவார்கள். ஆனால் அவர் பெயரை கேட்டால் மட்டும் பெரும்பாலானோருக்கு தெரியாது.
இவர் பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிராரோ, எங்க சின்ன ராசா, தாவணிக் கனவுகள்ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆராரோ ஆரிராரோ திரைப்படத்தில் பாக்யராஜ் மனநல மருத்துவமனையில் வேலை பார்ப்பவராக இருப்பார். அதில் மிலிட்டரி கேப்டன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவராக இவர் நடித்திருப்பார். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். 1961-ல் மதுரை ரசிகர்கள் அவருக்கு இந்தப்பட்டத்தை வழங்கினார்கள்.
ராஜகோபால் சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞராகவும் புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது சொந்த நாடகக் குழுவையும் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தி வந்தார்.
நல்ல பக்திமானாக விளங்கிய இவர், கலைவாணரைப் போலச் சிறந்த வில்லுப்பாட்டு கலைஞராகவும் பெயர்பெற்றார். ஐயப்பன் சரித்திரம், முருகன் பெருமை, ஐயனார் கதை, நல்லதங்காள், ஆணு அண்ணன்மார் அருக்காணி தங்கை போன்ற பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றினார். என். எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும் வில்லுப்பாட்டாகத் தயாரித்து வழங்கினார்
ராஜகோபால் 30 அக்டோபர் 1992 அன்று மாரடைப்பால் இறந்தார். இவரின் மரணத்திற்கு பின்னும் இவருடைய படங்கள் ரிலீஸ் ஆனது. அதன் பிறகும் கூட 1995 வரை இவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனது. திரைத்துறையில் அவர் விட்டுச்சென்ற வெற்றிடம் யாராலும் ஈடு செய்ய முடியாதது.
இன்று குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் பிறந்தநாள். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்