Kohhra Review: ‘ஓரினச் சேர்க்கையும்.. ஒரு கொலையும்..’ கோஹ்ரா விமர்சனம் இதோ!
Netflix: நகர இரைச்சல் இல்லாமல், ஒரு க்ரைம் த்ரில்லரை பார்க்க விரும்புவோருக்கு ‘கோஹ்ரா’ வெப்சீரிஸ் பாப்கார்ன் உடன் சேர்ந்த பட்டராக இருக்கும்.
முழுமையாக பஞ்சாப் பின்னணியில் எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் வெப்சீரிஸ் தான் கோஹ்ரா. வயல்வெளியில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரோடு வந்த அவருடைய வெள்ளைக்கார நண்பனை காணவில்லை.
அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த அந்த இளைஞனின் கொலைக்கு என்ன காரணம்? யார் கொலை செய்தது? என்கிற கேள்வியோடு தொடங்குகிறது கோஹ்ரா. பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் இருவர், அந்த வழக்கை விசாரிக்கிறார்கள்.
தேர்ந்த இரு போலீஸ்காரர்கள் ஒரு வழக்கை விசாரித்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்சிகளாக்கி, அதை எதார்த்தமான விசாரணை களத்தில் நகர்த்தி, த்ரில்லருக்கு தேவையான அனைத்து மசாலாவையும் நிகராக தூவி, சுடச்சுட இறக்கி வைத்த சாம்பார் போல, கொதிக்கிறது திரைக்கதை.
ஒரு கொலை, அதைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்கள், அவற்றை கொலையோடு ஒப்பிட்டு பின் தொடரும் புலனாய்வு என எல்லாமே கச்சிதம். வெறுமனே கதையோடு போகாமல், உறவுகளையும் உள்ளே இழுத்திருக்கிறார்கள். முரண்டு பிடிக்கும் மகளுடன் உயர் போலீஸ் அதிகாரியின் மனக்குமுறல், ஆசைக்கு வரும் பெண்ணுக்கு தான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பமில்லை என்கிற உதவி போலீஸ்காரரின் பிரச்னை என, கலவையாக திரைக்கதையை நகர்த்துகிறது.
பஞ்சாப்பின் பகுதிகளை அழகிய களமாக்கி, சிங்குகளின் சினத்தையும், குணத்தையும், பணத்தையும் பல கதாபாத்திரங்களில் உலாவிட்டிருக்கிறார்கள். அங்கும் இங்குமாய் சஸ்பென்ஸ் போய்க் கொண்டிருக்க இறுதியில், யாருமே இல்லை, இப்படி தான் நடந்தது கொலை என முடிக்கும் அந்த சஸ்பென்ஸ் தான் உண்மையில் த்ரில்லர்.
ஓரினச்சேர்க்கையும், அதன் பின்னணியும் தான் கதையின் முழுக்கரு என்பதே க்ளைமாக்ஸில் தான் தெரியவருகிறது. தான் விசாரிக்கும் சம்பவங்களில், தன் மனதையும், எண்ணத்தையும் மாற்றிக் கொள்ளும் சூழலுக்கு இறுதியில் போலீஸ்காரர் மாறிவிடுவது தான் கதையின் தாக்கம்.
போலீஸ் அதிகாரிகளாக சவீந்தர்பால் விக்கி, பருன் சோப்டியின் நடிப்பு கச்சிதம். மூத்த அதிகாரியாக சவீந்தர், அப்படியே பொருந்திவிட்டார். பருன், இளம் அதிகாரியாக அதிரடி காட்டுகிறார். படத்தில் வரும் அனைத்து சிங்குகளும், சிங்குகளின் மனைவிகளும், மகள்களும், மகன்களும் என எல்லா கதாபாத்திரமும் கனகச்சிதம்.
குஞ்சித் சோப்ரா, சுதீப் சர்மா, டிக்கி சிசோடியா ஆகியோர் உருவாக்கியிருக்கும் இந்த வெப்சீரிஸ், நெட்ப்லிக்ஸ் ஓடிடி.,யில் வெளியாகியுள்ளது. நகர இரைச்சல் இல்லாமல், ஒரு க்ரைம் த்ரில்லரை பார்க்க விரும்புவோருக்கு ‘கோஹ்ரா’ வெப்சீரிஸ் பாப்கார்ன் உடன் சேர்ந்த பட்டராக இருக்கும்.
டாபிக்ஸ்