Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா? - தாய் மேனகா விளக்கம்!
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளிக்கால நண்பரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அவரது அம்மா விளக்கமொன்றை அளித்துள்ளார்
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர், தமிழில் விக்ரம்பிரபு நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து தனுஷூடன் ‘தொடரி’ மீண்டும் சிவாவுடன் ‘ரெமோ’, விஜயுடன் ‘பைரவா’ சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் நடித்த பெரும்பான்மையான தோல்வி படங்களாக அமைந்ததால், இவர் மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. அத்துடன் அவர் நடிப்பும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பழம் பெரும் நடிகையான சாவித்ரி வாழ்கை வரலாற்று படத்தில் சாவித்ரியாக நடித்தார்.
இந்தப்படத்தில் ஏகோபித்த பாரட்டைப்பெற்ற அவருக்கு அந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீமராஜா, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக்கு, இறுதியாக ‘சாணி காயிதம்’ படம் வெளியானது. அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘தசரா’ ‘ மாமன்னன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ரகு தாத்தா’, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளிகால நண்பர் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பிய இருவரும் அடுத்த நான்கு வருடத்தில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தகவலுக்கு தற்போது கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா விளக்கம் அளித்திருக்கிறார்.
அந்த விளக்கத்தில், “ அந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. அது வெறும் பரபரப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள செய்தி. இந்த மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்க கூட நாங்கள் விரும்புவதில்லை.
கீர்த்தியின் திருமணம் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளுக்கு இதுதான் எங்களுடைய பதில். மேற்கொண்டு இது தொடர்பாக நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை.” என்று பேசியுள்ளார்.
டாபிக்ஸ்