45 Years of Sattam En Kaiyil: முதல் படத்திலேயே வில்லத்தனத்தில் மிரட்டிய சத்யராஜ் - டபுள் ஆக்டில் திருப்புமுனை தந்த கமல்
நான்கு முதல் ஐந்து காட்சிகளில் தோன்றி வில்லத்தனம் செய்திருந்தாலும் மனதில் நன்கு பதியும் விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சத்யராஜ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெள்ளிவிழா கண்ட பான் இந்தியா படமாக திகழ்ந்தது சட்டம் என் கையில்.
மக்கள் திலகம் எம்ஜிஆர், மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரை வைத்து சில ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரான டிஎன் பாலு இயக்கத்தில் ஒரு பொழுதுபோக்கு சினிமாவுக்கு தேவையான அத்துனை அம்சங்களும் நிறைந்த படமாக சட்டம் என் கையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தின் ஹீரோ கமல்ஹாசன் டபுள் ஆக்டிங்கில் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோவான பிறகு அவர் டபுள் ஆக்டிங் செய்த படம் இதுதான் என கூறப்படுகிறது. அண்ணன், தம்பி என இரட்டையர்களாக வரும் கமல்ஹாசன் ஒருவர் வெளிநாட்டில் படித்து, காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாக மாறுபவராகவும், இன்னொருவர் திருடனாக இருந்து பின் காதலால் மாறுவது போன்றும் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
வெளிநாட்டில் படித்த கமல் ஸ்டைலிஷ் லுக்கி, நுனி நாக்கு ஆங்கிலத்துடன் பேசுவார் என்றால், திருட்டு தொழில் செய்யும் கமல் மெட்ராஸ் பாஷையில் அதகளம் பண்ணியிருப்பார். கமல் மெட்ராஸ் பாஷையில் பேசியது முதன்முதலில் இந்த படத்தில்தான் என்கிற பேச்சும் உள்ளது.
பொதுவாக இரட்டை ஹீரோ படங்களில் வரும் காட்சியமைப்புகள், திருப்பங்கள் தவறாமல் அப்படியே இந்த படத்திலும் இடம்பிடிந்தாலும், சுவாரஸ்யம் மிக்க திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1960, 70 கால சினிமாக்களில் படத்தின் டைட்டிலை ஏதாவது ஒரு தருணத்தில், பெரும்பாலான நேரங்களில் கிளைமாக்ஸில் ஏதாவது ஒரு காதபாத்திரம் வலிந்து சொல்லும் விதமாக அமைந்திருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஆரம்பத்திலேயே சட்டம் என் கையலி என டைட்டிலை சொல்லும் முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தேங்காய் சீனிவாசன்.
இவர் படத்தில் எந்தவொரு இடத்திலும் காமெடி செய்யாமல் மிகவும் சீரியஸாகவே தோன்றுவதுடன், படத்தின் முக்கிய டுவிஸ்டுக்கு காரணமாக இருப்பார். ஆரம்பத்தில் கமல் பிரிவதற்கும் காரணமாக இருக்கும் தேங்காய் சீனிவாசன், பின்னர் இறுதிகட்டத்தில் அவர்களை சேருவதற்கான பின்னணியிலும் இருப்பார்.
சத்யராஜ் நடித்த முதல் படமான இதில் அவர் நான்கு முதல் ஐந்து காட்சிகள் தோன்றியிருப்பார். மிக சிறிய வேடம்தான் என்றாலும் தனது உயரமான தோற்றம், வில்லத்தனம் மூலம் மக்கள் மனதில் எளிதில் பதிந்தார்.
இந்த படத்தின் நாயகியாக ஸ்ரீபிரியா, இரண்டு கமல்களோடும் வெவ்வேறு சூழ்நிலைகளால் நெருக்கமாக பழகும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருப்பார். மற்றொரு ஹீரோயினாக கமலின் காதலியாக வரும் மிஸ் எலிசபெத் குறைவான காட்சிகளில் தோன்றி கவர்ந்திருப்பார். ஸ்ரீகாந்த், சுருளிராஜன், புஷ்பலதா, காந்திமதி, வி கோபாலகிருஷ்ணன், லூஸ்மோகன் உள்பட பலரும் தங்களது கதாபாத்திரத்துக்கான நடிப்பை வெளிப்படுத்தயிருப்பார்கள்.
படத்தில் இடம்பிடித்த 5 பாடல்களில் 4 கண்ணதாசனும், ஒரு பாடலை திருப்பத்தூரானும் எழுத இளையராஜா இசையமைத்திருப்பார். பார்டிகளில் இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் கிளாசிக் வெஸ்டர்ன் பாடலாக இருந்து வரும் சொர்க்கம் மதுவிலே பாடல் இடம்பிடித்திருப்பது இந்த படத்தில்தான். படத்தின் கிளைமாக்ஸில் வரும் மேரா நாம் அப்துல்லா மற்றொரு ஹிட் பாடலாக உள்ளது.
தமிழில் 175 நாள்கள் ஓடிய இந்த படத்தில் இந்தியில் யே டூ கமல் கோ ஹயா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். இந்தியிலும் கமல்ஹாசனே நடிக்க அங்கும் 175 நாள்கள் ஓடியது. அந்த வகையில் தமிழ், இந்தி என ஒரே படத்தில் ஒரே ஹீரோ நடித்த படம் 175 நாள்கள் ஓடியது பெரும் சாதனையாகவே அமைந்தது. அத்துடன் தெலுங்கிலும் டப் செய்யப்பட்ட இந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஹிட்டடித்தது.
இளம் ஹீரோவாக கோலிவுட் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பிற மொழிகளில் கமல்ஹாசன் நடித்து வந்த காலகட்டத்தில் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்து, வசூலையும் வாரி குவித்த சட்டம் என் கையில் படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்