28 Years of Indian: ரஜினியின் பாட்ஷா வசூலை பின்னுக்கு தள்ளிய கமலின் இந்தியன்! தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் திரைப்படம்
ரஜினியின் பாட்ஷா வசூலை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம், அப்போதைய பான் இந்தியா ஹிட் படமாக இருந்தது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் என்ட்ரியாகயுவும் பரிந்துரை செய்யப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் திரைப்படமாக இன்றளவும் இருந்து வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் - பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி பான் இந்தியா ஹிட் படமாக மாறிய படம்தான் இந்தியன். மனிஷா கெய்ராலா, ஊர்மிளா மடோன்கர் என இரண்டு ஹீரோயின்கள், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, கஸ்தூரி, சுகன்யா உள்பட பலரும் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தில் வில்லன் என்று தனியொரு காதபாத்திரம் இல்லாவிட்டாலும், படம் முழுவதிலும் திரில் அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாக்கியிருப்பார்கள்.
லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுத்த இந்தியன்
சுதந்திர போராட்ட தியாகியான கமல்ஹாசன், லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பது, கடமையை மீறும் அரசு அதிகாரிகளை களையறுப்பதும் தான் படத்தின் ஒன்லைன். இதில் ஹைலைட்டாக லஞ்சத்துக்கு துணைபோகும் தனது மகனையும் கொலை செய்வது போல் படத்தை முடித்திருப்பார்கள்.
சுதந்திர போராட்ட வீரராகவும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் அங்கம் வகித்தவராக இருக்கும் கமலுக்கு ஒரு பிளாஷ் பேக், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கொலை செய்வதற்கு பின்னணி காரணமாக அமைந்த கோர சம்பவத்துக்கு ஒரு பிளாஷ் பேக் என இரண்டு பிளாஷ் பேக்குகளை கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
இதனுடன் இளம் கமல்ஹாசனின் காதல், கவுண்டமணியின் காமெடி, அரசு அலுவலகங்களில் லஞ்சம் எப்படியெல்லாம் செயல்படுகிறது போன்ற காட்சிகளால் திரைக்கதை அமைந்திருக்கும்.
படத்துக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியிருப்பார். "கடமையை செய்யுறதுக்கே லஞ்சம்", போன்ற அதிகார தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாகம், கேள்வி எழுப்பும் விதமாக இருந்ததுடன் இன்று கைதட்டல்கள் பெறுகிறது.
பட்டைய கிளப்பிய ஏ.ஆர். ரஹ்மான் இசை
வாலி, வைரமுத்து பாடல் வரிகள் எழுத ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டடித்தன. எல்லா பாடல்களும் ரிப்பீட் மோடில் ஒலித்தன. பின்னணி இசை அதிர வைக்கும் விதமாக இருந்ததோடு, படத்தின் திரைக்கதையுடன் இணைந்து விறுவிறுப்பை கூட்டும் விதமாக இருக்கும். ஒவ்வொரு பாடலையும் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் ஷங்கர் பெரிய அளவில் மெனக்கெட்டிருப்பார்.
தொழில்நுட்பத்தில் மிரட்டல்
ஜீவாவின் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், ஸ்பெஷன் எபெக்ட்ஸ் என தொழில்நுட்ப குழுவினரும் படத்தை சிறப்பாக செதுக்கியிருப்பார்கள். நேதாஜியுடனான பிளாஷ் பேக் காட்சிகள், பாடல்களில் வரும் கிராபிக்ஸ் என நம்பகத்தன்மை மிக்கதாக படமாக்கியிருப்பார்கள். 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடக்கூடிய இந்த படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லாதபடி மேக்கிங் செய்திருப்பார்கள்.
விருதுகளை அள்ளிய இந்தியன்
அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இந்தியன் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்கம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஆகிய தேசிய விருதுகளை வென்றது. தமிழ்நாடு அரசின் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த நடிகர் பிலிம்பேர் விருதுகளையும் வென்றது.
இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஆஸ்கரில் விருதில் பரிந்துரை செய்யப்படவில்லை
பாட்ஷாவை பின்னுக்கு தள்ளிய வசூல்
அந்த காலகட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா 250 நாள்களுக்கு மேல் ஓடியதுடன், வசூலிலும் பட்டையை கிளப்பியது. இதையடுத்து பாட்ஷாவின் வசூலை முறியடித்த இந்தியன். பான் இந்தியா அளவில் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை புரிந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் சிறந்த மாஸ் படமாக இருந்து வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில் இந்த ஆண்டில் திரைக்கு வர இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்