Sukumar: புஷ்பா இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!
புஷ்பா பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று திடீரென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்
சினிமா நிறுவனங்களிலும், சினிமா பிரபலங்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வருத்துறையினர் ரெய்டு நடத்துவது ஒன்றும் புதிதில்லை. அந்த வகையில் தெலுங்கில் மிகவும் பிரபல தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் அல்லு அர்ஜூன் நடித்து பான் இந்தியா அளவில் வெளியான புஷ்பா படத்தை இயக்கியவரான இயக்குநர் சுகுமார் அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இயக்குநர் சுகுமார் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இவரின் புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் சுகுமார் இருக்கிறார். இந்த திடீர் வருமான வரிசோதனையின் காரணமாக ஹைதராபாத்தின் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த புஷ்பா படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
ரங்கதஸ்தலம் மற்றும் ஆர்யா படங்களை இயக்கிய சுகுமார் சுகுமார் ரைட்டிங்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் வருவதாகவும், அந்த நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த திடீர் சோதனை என்று தகவல்கள் சொல்லுகின்றன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், உலக அளவில் படம் பெரும் கவனம் பெற்றது. வசூலிலும் இந்த திரைப்படம் 350 கோடியை தாண்டியதாகச் சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமும் ஆடியிருந்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. அண்மையில் வெளியான இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
டாபிக்ஸ்