தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காமராஜர் பாராட்டிய படம்.. 175 நாட்கள் ஓடி வசூல் சாதனை.. 52ஆம் ஆண்டில் பட்டிக்காடா பட்டணமா

காமராஜர் பாராட்டிய படம்.. 175 நாட்கள் ஓடி வசூல் சாதனை.. 52ஆம் ஆண்டில் பட்டிக்காடா பட்டணமா

Suriyakumar Jayabalan HT Tamil
May 06, 2024 06:30 AM IST

Pattikada Pattanama movie: ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக வெளிவந்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் குடிபுகுந்த பட்டிக்காடா பட்டணமா படம் வெளியாகி இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது.

பட்டிக்காடா பட்டணமா
பட்டிக்காடா பட்டணமா

ட்ரெண்டிங் செய்திகள்

80ஸ் கிட்களுக்கு கமல்ஹாசனின் சகலகலா வல்லவன், 90ஸ் கிட்களுக்கு அஜித்தின் திருப்பதி, 2K கிட்களுக்கு விஜய் சேதுபதியின் றெக்க போல், 1960-70 காலகட்டத்தில் சிவாஜி கணேசனுக்கு பட்டிக்காடா பட்டணமா சில்வர் ஜூப்ளி படமாக அமைந்தது. சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருது, சிறந்த படம், சிறந்த நடிகை என இரண்டு பிலிம்பேர் விருதுகளை அள்ளிய இந்தப் படம் கருப்பு வெள்ளை திரைப்படங்களில் ரூ. 1 கோடி வசூலித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்ற படமாக உள்ளது.

175 நாள்கள் ஓடிய இந்தப் படம் 1972ஆம் ஆண்டில் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான காமராஜர் இந்தப் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியது தனியொரு அங்கீகாரத்தை பெற்று தந்தது.

ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம், பிரபல ஆங்கில கவிஞர் தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ என்ற மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக அமைந்திருந்தது. கிராம வாழ்க்கைக்கும், நகர வாழ்க்கை இடையேயான வாழ்வியலை தத்ரூபமாக பேசும் விதமாக இருக்கும் இந்தப் படத்துக்கு பாலமுருகன் கதை, வசனம் எழுத, பி. மாதவன் இயக்கியிருப்பார்.

படத்தில் பிரதான கதாபாத்திரங்களான சிவாஜி கணேசன், ஜெயலலிதா தவிர மனோரமா, வி.கே. ராமசாமி, சுகுமாரி எம்.ஆர்.ஆர்.வாசு, சுபா, எஸ்.என். லட்சுமி உள்பட பலரும் ரசிக்கும் விதமாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். கண்ணதாசன் வரிகளில் புகழ் பெற்ற கிளாசிக் பாடலான அடி என்னாடி ராக்கம்மா என்ற பாடல் இடம்பெற்றது இந்த திரைப்படத்தில்தான். சண்முகப்பிரியா கர்நாடக ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலின் பெப்பியான வெர்ஷன், சோக வெர்ஷன் என இரண்டையும் டி.எம்.செளந்தரராஜன் தான் பாடியிருப்பார். இரண்டு வெர்ஷன்களுக்கு மாறுபட்ட குரல் வளத்தில் வித்தியாசப்படுத்தி பாடி அதகளப்படுத்தியிருப்பார்.

இதுதவிர அம்பிகையே ஈஸ்வரியே, கேட்டுக்கோடி உருமி போன்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. இந்த படத்தில் இடம்பெறும் என்னாடி ராக்கம்மா பாடலை, வாடா என்ற படத்தில் இசைமைப்பாளர் டி.இமான் ரீமிக்ஸ் செய்ய அந்தப் புதிய வெர்ஷனும் பிரபலமானது. இன்றும் மதுரை பகுதிகளில் நடைபெறும் எந்த திருவிழாக்களிலும், சுப நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஒலிக்கும் பாடலாக இந்த என்னாடி ராக்கம்மா பாடல் இருந்து வருகிறது. அதேபோல் கேட்டுக்கோடி உருமி பாடலும் பாண்டியன் ஒலிப்பெருக்கி நிலையம் படத்தில் ரீமேக்ஸ் செய்யப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, படம் வெளியீட்டு விழா, பொன்விழா நிகழ்ச்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான சிவாஜியின் ரசிகர்களும் பங்கேற்றனர்.

படம் திரையிட தொடங்குவதற்கு முன்னர் 1972இல் வெளியானபோது இருந்த கிரேஸ் குறையாத அளிவில் பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க நடனமாடி ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஆயிரக்கணக்கான ரசிகர்களால் அரங்கம் நிரம்பிய காட்சியாக படம் திரையிடப்பட்டது.

ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக வெளிவந்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் குடிபுகுந்த பட்டிக்காடா பட்டணமா படம் வெளியாகி இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்