Naalai Namadhe: வரலாறாக மாறிய நாளை நமதே.. கொடிகட்டி பறந்த எம்ஜிஆர்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பவம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naalai Namadhe: வரலாறாக மாறிய நாளை நமதே.. கொடிகட்டி பறந்த எம்ஜிஆர்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பவம்

Naalai Namadhe: வரலாறாக மாறிய நாளை நமதே.. கொடிகட்டி பறந்த எம்ஜிஆர்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பவம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 05:40 AM IST

Naalai Namadhe: இன்று வரை அளிக்க முடியாத சரித்திர குறியீடாக எம்ஜிஆர் வாழ்ந்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அப்படி 100 நாட்கள் வரை திரையரங்குகளில் கூட்டம் குறையாத திரைப்படங்களில் ஒன்றுதான் நாளை நமதே.

வரலாறாக மாறிய நாளை நமதே.. கொடிகட்டி பறந்த எம்ஜிஆர்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பவம்
வரலாறாக மாறிய நாளை நமதே.. கொடிகட்டி பறந்த எம்ஜிஆர்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பவம்

இன்று வரை அளிக்க முடியாத சரித்திர குறியீடாக எம்ஜிஆர் வாழ்ந்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அப்படி 100 நாட்கள் வரை திரையரங்குகளில் கூட்டம் குறையாத திரைப்படங்களில் ஒன்றுதான் நாளை நமதே.

இது எம்ஜிஆரின் 125வது படமாகும். இந்த நாளை நமது திரைப்படம் 1973 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான யதோன் கி பாரத், என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஹிந்தியில் தர்மேந்திரா மற்றும் விஜய் அரோரா நடித்திருந்த கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கதை

அழகான தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள். திடீரென்று வீட்டிற்குக் கொள்ளையடிக்க வரும் கும்பல் அந்த தம்பதியைக் கொன்று விடுகின்றனர். அந்த மூன்று ஆண் பிள்ளைகளின் மூத்த மகன் கொலை செய்யும் நம்பியாரை பார்த்து விடுகிறார். அவர்களிடமிருந்து மூன்று ஆண் மகன்களும் தப்பிக்கும் போது, கடைசி மகனை வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி எடுத்துக்கொண்டு தப்பி விடுகிறார்.

முதல் இரண்டு பேரும் ரயிலில் தப்பிச் செல்லும் பொழுது இடையில் இருவரும் பிரிந்து விடுகின்றனர். முதல் எம்ஜிஆர் திருடனாக வளர்கிறார். இரண்டாவது எம்ஜிஆர் ஒரு பணக்கார குடும்பத்தில் வளர்கிறார். வேலைக்காரியோடு சென்ற கடைசி மகன் மேடைப் பாடகராக வளர்கிறார்.

மூன்று பேருமே வளர்ந்த பிறகு சகோதரர்களும் தேடுகின்றனர். இவர்கள் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது அவரது தாய் ஒரு பாடல் பாடுகிறார் அதுதான் நாளை நமதே என்ற பாடல். மேடை பாடகராக இருக்கும் கடைசி தம்பி மேடை பாடல்களைத் தொடங்கும் முன்பு, எனது சகோதரர்களைப் பிரிந்து விட்டேன் எங்களுக்கு குடும்ப பாடல் உண்டு என்று கூறி தனது தாயார் பாடிய பாடலை பாடி எப்போதும் இசைக் கச்சேரியைத் தொடங்குவார்.

அப்படி ஒரு நாள் இரண்டு அண்ணன்களும் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்த போதும் இந்த பாடலை பாடுகிறார் கடைசி தம்பி. அப்போது இரண்டாவது எம்ஜிஆர் தம்பியைக் கண்டு கொள்கிறார். திருடராகக் கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் மூத்த அண்ணனான முதல் எம்ஜிஆர் எதுவும் சொல்ல முடியாமல் இரண்டு தம்பிகளையும் ஓரமாக நின்று பார்த்து கண்ணீர் விடுகிறார்.

அதன் பின்னர் மூன்று பேரும் சேர்ந்து தனது தாயைக் கொலை செய்த கொள்ளைக்காரனை எப்படிப் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை. இன்று வரை குடும்பத்தில் ஒன்று சேர்க்கும் பாடலாகப் பலரும் பாடுவது இந்த நாளை நமதே பாடல் தான்.

அப்படி இந்த படத்தில் இடம் பெற்ற ஒன்பது பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்த திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர்களில் ஒருவரான எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.

100 நாட்கள் வரை இந்த திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்கவில்லை. மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. கலவையான கமர்சியல் ஹிட் கொடுத்த மிகப்பெரிய திரைப்படம் இந்த நாளை நமதே. இந்த திரைப்படத்திற்குத் தலைப்பு தேடிக் கொண்டிருக்கும் பொழுது பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் நாளை நமதே என்று பரிந்துரைத்தார் அந்த தலைப்பிலே எம்ஜிஆர் உறுதி செய்தார்.

இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகின்றன. காலத்தால் அழிக்க முடியாத சில காவியங்கள் மட்டுமே சரித்திரம் கடந்து வாழ்கின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்று நாளை நமதே என்று கூறினால் அது மிகையாகாது.

எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த சம்பவம்

நாளை நமதே திரைப்படத்தை கே.எஸ்.சேது மாதவன் இயக்கினார். இந்த படத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சி எடுக்கும் பொழுது ஒரு ஷாட் முடிந்தவுடன் திடீரென எஸ்.ஏ சந்திரசேகர் ஒன்ஸ்மோர் கேட்டுள்ளார். உடனே எம்ஜிஆர் எஸ்.ஏ. சந்திரசேகரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அதற்கு நடித்துள்ளார்.

அந்த காட்சி முடிந்தவுடன் எஸ்.ஏ சந்திரசேகரை எம்ஜிஆர் அழைத்து தோளின் மீது கை போட்டு நீ பெரிய இயக்குனராக வருவாய் என கூறியுள்ளார். அதற்கு அடுத்த நாள் எஸ்.ஏ. சந்திரசேகரை அழைப்பதற்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இப்போது அங்கே உள்ளே அவரை யாரும் அனுமதிக்கவில்லை.

இயக்குனர் சேது மாதவன் எஸ்.ஏ.சந்திரசேகரை அழைத்து நாம் அடுத்த படத்தில் பணியாற்றிக் கொள்ளலாம் நீ சென்று வா என அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இன்று வரை இந்த செயலுக்கு யார் காரணம் என தெரியாமல் இருந்து வருகிறேன் என கூறியுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner