மதச் சிக்கலை குறிவைத்த பாரதிராஜா.. புதுமுகங்களால் ஒரு வெற்றி படம்.. விருதுகளை அள்ளி குவித்த அலைகள் ஓய்வதில்லை
Alaigal Oivathillai: ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே… வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்’ என்ற பாடலில் விடலை பருவ கார்த்தியும், ராதாவும் கசிந்துருகி காதல் உலகில் சஞ்சரிப்பது இன்றும் நம் மனக்கண்ணில் தோன்றும். அந்தப்பாடல் இடம்பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை.
‘ஆயிரம் தாமரை மொட்டுகளே… வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்’ என்ற பாடலில் விடலை பருவ கார்த்தியும், ராதாவும் கசிந்துருகி காதல் உலகில் சஞ்சரிப்பது இன்றும் நம் மனக்கண்ணில் தோன்றும். அந்தப்பாடல் இடம்பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை. அந்தப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆகிறது. இந்தப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கினார். இந்தப்படத்தின் கதை மணிவண்ணன் எழுதியது.
கார்த்திக், ராதா இருவருக்குமே முதல் படம். இதேபோல், கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும், ராதாவின் மகள் துளசியும் கடல் என்ற மணிரத்தினத்தின் படத்தில் அறிமுகம் ஆனார்கள். இந்தப்படத்தில் தியாகராஜன், சில்க் ஸ்மித்தா, கமலா காமேஷ் ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பார்கள். வழக்கமாக தமிழ் சினிமாவின் ஐட்டம் நடிகையாக பார்க்கப்படுபவர் சில்க் ஸ்மித்தா, இவர் இந்தப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்திருப்பார்.
விச்சு என்ற இந்து மதத்தை சேர்ந்த பையன், மேரி என்ற கிறிஸ்தவ பெண்ணை காதலிப்பார். அவர்கள் காதலில் சந்திக்கும் எதிர்ப்புதான் கதை. தியாகராஜன் மேரியின் அண்ணனாகவும், சில்க் ஸ்மித்தா அண்ணியாகவும் நடித்திருப்பார். காதலை எதிர்க்கும் கணவன், காதலை ஆதரிக்கும் மனைவி என்று இருவருக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை படமும் கொடுத்திருக்கும்.
தமிழ் சினிமாவின் சிறந்த துணை நடிகரான முத்துராமனின் மகன் கார்த்திக் புதுமுகமாக இந்தப்படத்தை அவரது தந்தை கூறிய உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முதலில் தேர்வானவர் சுரேஷ்தான்.
ஆனால் அவர் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அந்த நேரத்தில் நடித்துக்கொண்டிருந்ததால், அவரால் இந்த படத்தை ஒப்புக்கொள்ள முடியாததால் அந்த வாய்ப்பு கார்த்திக்குக்கு போனது. அது கார்திக்குக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை சினிமாவில் உருவாக்கிக்கொடுத்தது.
இந்தப்படத்தில் வரும் ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பாடலும், காதல் ஓவியம் பாடலும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காத பாடல்கள். இவை தவிர மற்ற பாடல்களும் இளையராஜாவின் இசையில் நன்றாகவே அமைந்தது. இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து. இளையராஜா ஆகியோர் எழுதியிருதனர்.
இந்தப்படம் சிறந்த படம் என்ற விருதை ஆர்.டி.பாஸ்கருக்கு பெற்று தந்தது. மேலும், சிறந்த இயக்குனர் - பாரதிராஜா, சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா, சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து, சிறந்த ஒளிப்பதிவாளர் - கண்ணன், சிறந்த கதாசிரியர் - மணிவண்ணன், சிறந்த அறிமுக நடிகர் – காரத்திக், சிறந்த அறிமுக நடிகை – ராதா என இத்தனை மாநில விருதுகளை பெற்றுத்தந்த படம். இந்தப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மீண்டும் எடுக்கப்பட்டது.
இன்றளவும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் எட்டுத்திக்கும் ஒலிக்கின்றதற்கு காரணம் இளையராஜா தான். அப்படிப்பட்ட நேர்த்தியான விஷயங்களை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இந்த திரைப்படத்தில் கொடுத்திருப்பார். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஊன்று கோளாக இருந்தது இசை தான் என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்