47 Years of Annakili: மச்சான பார்த்தீங்களா! - இளையராஜா பாடலை வைத்து அன்னக்கிளி திரைக்கதை உருவாக்கிய பஞ்சு அருணாச்சலம்
உலகம் முழுவதும் இருக்கும் கோடானு கோடி தமழ் ரசிகர்களை தனது அற்புத இசையால் மகிழ்விக்கும் இசைஞானி இளையராஜா அறிமுகமான படம்தான் அன்னக்கிளி. தமிழ் சினிமா இசையில் புதுவித பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த படம்.

தமிழ் சினிமாவில் பட்ஜெட்டுக்கு ஏற்பட வண்ண சினிமா, பிளாக் அண்ட் ஒயிட் சினிமா என இரண்டு வகையாக வெளிவரும் காலமாக 1970கள் அமைந்திருந்தது. அந்த நேரத்தில் இரட்டை இயக்குநர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்தில், ஆர். செல்வராஜ் கதைக்கு, பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை அமைக்க வெளியான படம் அன்னக்கிளி.
இந்த படத்தில் மற்றொரு சிறப்பு அம்சமாக இன்று தமிழ் சினிமா இசையில் ராஜாவாக வலம் வரும் ராசய்யா என்பவர் இளையராஜா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம் தமிழ்- சினிமாவுக்கு மாறுபட்ட வண்ணத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
ரெமாண்டிக் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் பிளாக் அண்ட்் ஒய்ட் படமான அன்னக்கிளி, வெளியான இரண்டு நாள்கள் திரையரங்கில் பெரிதாக கூட்டம் இல்லாமல்தான் இருந்துள்ளது. அதன் பின்னர் படம் பார்த்தவர்களின் நேர்மறையான விமர்சனம், படத்தின் பாடல் குறித்த பேச்சு கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வெள்ளி விழா கண்டது.