Sathya Priya: ‘எனக்கு ஒரு நடிகர் கடிதம் அனுப்பினார்’ சத்யப்ரியா ப்ளாஷ்பேக்!
‘நான் யாருக்கும் கடிதம் எழுதியதில்லை, ஆனால், எனக்கு ஒரு நடிகரிடம் இருந்து கடிதம் வந்தது’ -சத்யப்ரியா பேட்டி!
80களில் தொடங்கி கமல், ரஜினி என இவர் நடிக்காத கதாபாத்திரம் இல்லை. அம்மா, அக்கா, பாட்டி என அனைத்து உறவுகளுக்கும் உயிர் கொடுத்தவர். இன்றும் டிவி சீரியல்களில் இல்லத்தரசிகளை மகிழ்வித்துக் கொண்டிருப்பவர் நடிகை சத்யப்ரியா. ப்ளாக்அண்ட்ஒயிட் காலத்திலிருந்து பார்த்த அதே இளமையோடு இன்றும் பயணித்துக் கொண்டிருக்கும் சத்யப்ரியா, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நிறைய விசயங்களை பகிர்ந்திருக்கிறார். இதோ அந்த பேட்டி:
என்னுடைய சினிமா பயணம் சிறப்பாக உள்ளது. கடவுளாக கொடுத்த பணி இது, அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். 80கள், 90களில் ரஜினி சாருக்கு யாராவது வில்லனாக இருந்தால், அவர்களுக்கு ஹேட்டர்கள் நிறைய இருப்பார்கள்.
அது மாதிரி எனக்கும் நிறைய நிறைய ஹேட்டர்கள் இருந்தார்கள். பயந்துட்டே இருப்பேன். ரஜினிமேனியா எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். பணக்காரன் படத்தில், ஆரம்பம் முதலில் ரஜினிக்கு எதிரா இருப்பேன், கடைசியில், ‘பெத்தா உன்னை மாதிரி ஒரு பிள்ளையை பெத்துக்கனும்’ என்று டயலாக் வரும், அந்த ஒரு டயலாக்கில் நான் தப்பித்துவிட்டேன்.
நான் எப்போதும் என் கதாபாத்திரமாக தான் இருப்பேன். சத்ய ப்ரியாவாக இருக்க மாட்டேன். அன்று முதல் இன்று வரை நான் அதை தான் ஃபாலோ பன்றேன். எதிர்நீச்சல் சீரியலில் எனக்கு ஒரே ஒரு சவால் தான் இருந்தது. மதுரை ஸ்லாங் தான் எனக்கு பிரச்னை. ‘அதெல்லாம் நீங்க பண்ணிடுவீங்க’ என்று திருச்செல்வம் சார் நம்பிக்கையா இருந்தார். ‘ஆனால் என்னால் பேச முடியவில்லை, டப்பிங் போட்டுக்கோங்க’ என்று கூறிவிட்டேன். டப்பிங் போட்டாங்க.
முதல் எபிசோடு பார்த்தேன், டப்பிங் குரல் எனக்கு செட் ஆகவில்லை. உடனே நானே டப்பிங் செய்கிறேன் என்று கூறி, மதுரை ஸ்லாங் கற்று, நானே இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன். சீரியலில் என் கதாபாத்திரங்கள் விமர்சிக்கப்பட்டால், என்னை அவர்கள் ரசிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
இன்று வரை என்னை பாட்ஷா அம்மா என்று தான் அழைக்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் இப்போது பார்த்தாலும் அப்படி தான் கூறுகிறார்கள். ரோஜா படத்தில் வரும் மாமியார், துர்கா படத்தில் வரும் தாய், சின்னகவுண்டர் படத்தில் வரும் கதாபாத்திரம் எல்லாம் எனக்கு பேர் வாங்கிக் கொடுத்த கதாபாத்திரங்கள்.
சூர்யவம்சம் படம் ரொம்ப முக்கியமானது. இட்லி உப்மா, தமிழ்நாடு முழுக்க போய்விட்டது. அதில் நான் வில்லியா, காமெடியனா என்பது மாதிரி கதாபாத்திரம் இருக்கும்.
நான் யாருக்கும் கடிதம் எழுதியதில்லை, ஆனால், எனக்கு ஒரு நடிகரிடம் இருந்து கடிதம் வந்தது. சின்னக்கவுண்டர் படம் பார்த்துவிட்டு கமல் சார் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். ‘உங்க நடிப்பு நல்லா இருக்கு’ என்று கூறியிருந்தார். கமல் கூட 3 படம் பண்ணிருக்கேன், டான்ஸ் பண்ணிருக்கேன். ஆனால், ஒரு போட்டோ கூட என்னிடம் இல்லை,’’
என்று அந்த பேட்டியில் சத்யப்ரியா கூறியிருந்தார்.
டாபிக்ஸ்