Vijay Politics: காலச்சக்கரம் சுற்றிய விஜய்.. ‘எனக்கு பவர் வேணும்’ .. அரசியல் பிரவேசத்திற்கு விஜய் கொடுத்த பளார் பதில்!
காலம் என்னைக் கொண்டு வந்து அந்த இடத்தில் உட்கார வைத்தது. நான் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜயின் 49 ஆவது பிறந்தநாள் இன்று. பிறந்தநாள் பரிசாக அவர் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடலும் வெளியாக இருக்கிறது. லியோ ஒரு புறம் இப்படி பரபரப்பை ஏற்படுத்தியிருக்க, கூடவே விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தான் பேச்சுக்களும் பரபரத்துக்கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அவர் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்வு சமூகவலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது.
அரசியல் வருகைக்கான அடித்தளம் போடும் வேலைகளை விஜய் அமைதியாக செய்து வந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறவில்லை. இந்த நிலையில் முன்னதொரு பேட்டியில் அவரிடம் அரசியல் வருகைக்கான கேள்வி முன்வைக்கப்பட்ட போது அவர் கூறிய பதிலை ஒரு ரீவைண்டாக இங்கு பார்க்கலாம்
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு விஜய் அளித்த பதில்:-
“ நான் ஒரு நடிகனாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மக்கள் என்னை இவ்வளவு பெரிய இடத்தில் கொண்டு வந்து உட்காரவைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
காலம் என்னைக் கொண்டு வந்து அந்த இடத்தில் உட்கார வைத்தது. நான் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு பவர் வேண்டும். ஆனால் அதற்கு இப்போதைய நேரம் ( காவலன் பட வெளியீட்டின் போது) சரியானது கிடையாது. அதே காலம் என்னை ஒரு இடத்தில் என்னை கொண்டு போய் சேர்க்கும்; அப்போது நான் வருவேன்” என்று பேசினார்.
யார் இந்த விஜய்?
பிறப்பு
சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் விஜய் இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ஃபாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே படிப்பை கைவிட்டார்.
திருமணம்
விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் துறு துறுவென இருந்த விஜய் தனது சகோதரி மறைவையடுத்து மிகவும் அமைதியாகி விட்டதாக அவரது தாய் ஷோபா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
திரைத்துறை
விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.
90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .
இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். கடைசியாக அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்