HT Cinema Spl: SRK-ன் சென்னை எக்ஸ்பிரஸ் தெரியும், அது என்ன ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Cinema Spl: Srk-ன் சென்னை எக்ஸ்பிரஸ் தெரியும், அது என்ன ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்!

HT Cinema Spl: SRK-ன் சென்னை எக்ஸ்பிரஸ் தெரியும், அது என்ன ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்!

Manigandan K T HT Tamil
Jan 30, 2023 06:00 AM IST

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் (SRK) நடிப்பில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படம் 2013இல் வெளியானது. ரயிலில் நடப்பது போன்ற கதை சில திரைப்படங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் வரும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்
படத்தில் வரும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் (20th century fox)

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்பது 1883 ஆம் ஆண்டு பெல்ஜிய நிறுவனமான Compagnie Internationale des Wagons-Lits (CIWL) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நீண்ட தூர பயணிகள் சொகுசு ரயில் சேவையாகும். இது 2009 வரை இயக்கப்பட்டது.

அதன் பிறகு தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இந்த ரயிலை மையப்படுத்தி பல நாவல்களும், வீடியோ கேம்களும் வெளிவந்திருக்கின்றன.

Murder on the Orient Express நாவலை 1934ஆம் ஆண்டு அகதா கிறிஸ்டி என்ற பிரபல பெண் எழுத்தாளர் எழுதினார்.

இந்த நாவலை மையப்படுத்தி 2017ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் படம் வெளியானது. இந்தப் படத்தை புகழ்பெற்ற இயக்குநரான கென்னத் பிரனா இயக்கினார். 20th century fox நிறுவனம் தயாரித்தது.

இயக்குநரே ஹெர்குல் பய்ரோட் என்ற டிடெக்டிவ் கதாபாத்திரத்திலும் அசத்தலாக நடித்துள்ளார்.

Death on the Nile படத்திற்கு முன்பே இந்தப் படம் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரு கதைகளும் ஒரே மாதிரிதான். டெத் ஆன் த நைல் படத்தில் கப்பலில் கொலை நிகழும். ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் படத்தில் ஓடும் ரயிலில் கொலை நடக்கும்.

கிட்டத்தட்ட கதையும் சில காட்சிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் வசனங்களிலும் நடிப்பிலும் காட்சி அமைப்பிலும் வித்தியாசத்தைக் காணலாம்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த டிடெக்டிவாக ஹெர்குல் பய்ரோட் அகதா கிறிஸ்டியால் எழுதப்பட்ட கற்பனை கதாபாத்திரம் ஆகும். அந்த கதாபாத்திரத்திற்கு கென்னத் உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு டிடெக்டிவ் எப்படி இருப்பார் என்பதை மிக அழகாக தனது உடல்மொழி மூலம் கடத்துகிறார்.

அவர் அணிந்திருக்கும் பேண்ட்-கோட், முறுக்கு மீசை, கையில் ஸ்டிக், பூட் ஷூ என டிடெக்டிவ் கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறார் கென்னத்.

படத்தில் ஒரு காட்சி
படத்தில் ஒரு காட்சி (20th century fox)

ஜெருசலேமில் உள்ள மிகப் பெரிய தேவாலயம் ஒன்றில் விலை உயர்ந்த பொருள் திருடு போகிறது. அதை திருடியது யார் என்று சாதுரியமாக கண்டுபிடிக்கிறார் ஹெர்குல். இதுதான் படத்தின் முதல் காட்சி!

இந்தக் காட்சியின் மூலம் படத்தை தொடங்கி ஹெர்குல் கதாபாத்திரம் துப்பறிவதில் எத்தனை திறமை வாய்ந்தது என்பதை இயக்குநர் பார்வையாளர்களுக்கு சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

அதன்பிறகு, தனது நண்பர் Bouc பொறுப்பாளராக இருக்கும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கிறார் ஹெர்குல்.

ரயில் பயணத்தில் Ratchett என்ற தொழிலதிபர் கொல்லப்படுகிறார். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதே ரயிலில் பயணிக்கிறார்கள். நண்பர் Bouc வேண்டுகோளுக்கு இணங்க, அந்தத் தொழிலதிபரை கொலை செய்தது யார் என்பதை துப்பறிந்து கண்டறியும் பணியில் இறங்குகிறார் ஹெர்குல்.

ஹெர்குல் ஒவ்வொரு பயணியையும் விசாரித்து யார் கொலை செய்திருப்பார் என்று குழம்பும் நேரத்திலும், அவரை திசைதிருப்ப சில பயணிகள் முயற்சி செய்யும் காட்சிகளில் அவர்களை எதிர்கொள்வதுமாக துணிச்சலான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார் ஹெர்குல்.

பனிமலைகளை குடைந்து போடப்பட்டிருக்கும் தண்டவாளத்தில் புகை விட்டுக் கொண்டே பயணிக்கும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அழகோ அழகு!

படத்தில் ஒரு காட்சி
படத்தில் ஒரு காட்சி (20th century fox)

கேமராமேன் Haris Zambarloukos (Death on the Nile படத்திற்கு இவரே ஒளிப்பதிவாளர்) ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். பனிமலையில் சரிவு ஏற்பட்டு ரயில் பாதியில் நிற்கும் காட்சி, ரயில் டாப் ஆங்கில் காட்சிகள் என படம் முழுக்க ஒளிப்பதிவாளரின் பங்கு அளப்பரியது.

Patrick Doyle பின்னணி இசை ரயிலின் வேகத்திற்கு ஏற்ப தடதடக்கிறது. சில காட்சிகளில் பதற்றத்தை கூட்டுகிறது.

படத்தின் இறுதி காட்சி வரை யார் கொலையாளி என்பது தெரியாமல் நாவல் போன்றே விறுவிறுப்புடன் நகர்வது இயக்கநரின் திறமைக்கு சாட்சி.

நல்லது, கெட்டது, நியாயம், தர்மம் என அனைத்தையும் இந்த கதை பேசுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.