HT Cinema Special: நைல் நதியில் அடுத்தடுத்து மரணம்... களமிறங்கும் டிடெக்டிவ்!
இங்கிலாந்தைச் சேர்ந்த காலமாகிவிட்ட பிரபல எழுத்தாளர் அகதா கிறிஸ்டி. இவர் எழுதிய நாவல் தான் Death on the Nile. இதே பெயரில் இந்த நாவலைத் தழுவி கடந்த ஆண்டு வெளியாகியது ஹாலிவுட் படம்.
இந்தப் படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குநருமான கென்னத் பிரானா (Kenneth Branagh) இயக்கியுள்ளார். அவரே டிடெக்டிவாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
Murder on the Orient Express என்ற படத்தின் தொடர்ச்சி (Sequal) தான் இந்தப் படம். மர்டர் ஆன் த ஓரியன்ட் எக்ஸ்பிரஸும் அகதா கிறிஸ்டி எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தையும் கென்னத்தே இயக்கியிருந்தார். மர்டர் ஆன் த ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் மிகப் பெரிய வசூலை வாரி குவித்தது. டெ்த் ஆன் த நைல் படத்தை தயாரித்த புகழ்பெற்ற 20th Century Fox நிறுவனம் தான் அந்தப் படத்தையும் தயாரித்திருந்தது.
சரி, டெஸ் ஆன் த நைல் படத்தின் கதைக்கு வருவோம்.
முதல் உலகப் போர் நடந்தபோது ஹெர்குல் பய்ரோட் தனது நாட்டு ராணுவமான பெல்ஜியம் வீரர்களை தொடர்ந்து முன்னேறச் செய்வதற்காக சில உத்திகளை கையாள்கிறார். அப்போது அவரது அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டன் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழக்கிறார்.
முகத்தில் சேதத்துடன் மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் ஹெர்குல். அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் வந்து பார்க்க, ஹெர்குலுக்கு முகத்தில் அடிபட்டிருக்கிறதே என்று கவலை. ஆனால், அந்தப் பெண் அதை பெரிதுபடுத்தாமல் நீங்கள்தான் எனக்கு எல்லாம் என கூறுகிறார். காதலுக்கு அழகு முக்கியமல்ல என்பது போன்று தொடங்குகிறது இந்தப் படம்.
அவரது காதலி இறந்துவிட துப்பறிவாளனாக (Detective) மாறுகிறார் ஹெர்குல். சரி இந்த முன் கதைக்கும் படத்துக்கு என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. காதலுக்காக எதையும் ஒருவர் செய்யத் துணிவார் என்பதுதான் படக் கதையின் மையக் கரு.
வருடங்கள் உருண்டோடுகின்றன. கதை 1937ஆம் ஆண்டுக்கு வருகிறது.மிகப் பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த லின்னட்டுக்கு திருமணம் நடக்கிறது.
புதுமண ஜோடி ஹனிமூன் செல்ல முடிவு செய்கிறது. அப்போது அவர்களுடன் ஹெர்குல் இணைகிறார். எகிப்தில் உள்ள புகழ்பெற்ற Abu Simbel ஐ சுற்றிப் பார்க்க லின்னட் உள்ளிட்டோர் கப்பலில் நைல் நதி வழியாக பயணிக்கின்றனர்.
அந்த இடத்தை பார்த்துவிட்டு கப்பலில் திரும்பும்போது லின்னட் ஓர் இரவில் கொல்லப்பட்டு இறக்கிறார்.
கப்பலில் இருக்கும் அனைவரிடமும் விசாரணையைத் தொடங்குகிறார் ஹெர்குல். கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பது தான் ஒட்டுமொத்த படமும்.
புகழ்பெற்ற டிடெக்டிவான ஹெர்குல், கப்பலில் பயணிக்கும் அனைவரையும் சந்தேகிக்கிறார். அந்த சமயத்தில் அவரது விசாரணை வளையத்தில் இருப்பவர்களில் சிலரும் கொலை செய்யப்படுகின்றனர்.
இப்படி சிக்கலாகிக் கொண்டே போகும் பயணத்தில் ஹெர்குல் என்ன செய்தார்? இறுதியில் குற்றவாளியை கண்டுபிடித்தாரா? எதற்காக அந்தக் கொலை நடந்தது? என காட்சிக்கு காட்சி பதற்றத்துடன் நகர்கிறது படம்.
ஏற்கனவே, நாவலில் பலரும் படித்திருப்பார்கள் என்பதால் காட்சிப்படுத்துவதிலும் இயக்குநர் கென்னத்துக்கும் மிகப் பெரிய சவால் இருந்திருக்கும்.
ஆனால், திறமையான தனது இயக்கத்தால் அருமையான த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் கென்னத். படத்தின் கதை என்னவோ கப்பலில் தான் நடக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.
டிடெக்டிவாக கென்னத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அவரது மீசையும், டிடெக்டிவ் இப்படிதான் இருப்பார் என்பதை நம்ப வைக்கிறது.
குறிப்பாக படத்தின் இறுதி நிமிடங்களில் மனுஷன் நடிப்பில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக கொலை செய்தது யாராக இருக்கக் கூடும் என அவர் கணித்து கூறும்போது நம்மை மறந்து கைதட்டி விடுவோம்.
பீரியட் படமாக எடுக்கப்பட்டிருப்பதால் பார்க்கவே வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் கொடுக்கிறது. காட்சிக்கு காட்சி ஒத்திக் கொள்ளலாம் என்பது போன்று ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கி இருக்கிறார் கேமராமேன் Haris Zambarloukos.
படம் பார்க்கும்போது மியூசிக் யாருப்பா என்று கூகுலில் தேட வைத்து விடுகிறது. அத்தனை சிறப்பாக பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் Patrick Doyle.
லின்னட்டாக வரும் Gal Gadot அத்தனை அழகு! Wonder Woman படத்தில் அசத்தினாரே அவரேதான்.
Emma Mackey கதாபாத்திரத்துடன் ஒன்றி, லின்னட் கதாபாத்திரத்தை அவர்தான் கொலை செய்திருப்பாரோ எனவும் சந்தேகிக்க வைக்கிறார்.
கதை, திரைக்கதை, இயக்கம், இசை, கேமரா, நடிப்பு என அனைத்தும் சிறப்பாக இருக்கும்போது ஒரு படம் பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தியை கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு த்ரில்லர் காவியம் தான் இந்த Death on the Nile படம்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது. முடிந்தால் தவறவிடாமல் ஒரு முறை பார்த்து விடுங்கள்.
டாபிக்ஸ்