HT Cinema Special: "திவ்யாவை கீழே தள்ளிவிட்டது யார்?"- மர்ம இணையத் தொடர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Cinema Special: "திவ்யாவை கீழே தள்ளிவிட்டது யார்?"- மர்ம இணையத் தொடர்!

HT Cinema Special: "திவ்யாவை கீழே தள்ளிவிட்டது யார்?"- மர்ம இணையத் தொடர்!

Manigandan K T HT Tamil
Jan 26, 2023 06:23 AM IST

Actress Anjali: 2007ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் "நிஜமாதான் சொல்றியா" என பிரபாகரிடம் (நடிகர் ஜீவா) வெகுளித்தனமாக கேட்ட நடிகை அஞ்சலியையும் அந்தப் பத்தில் அவரது ஆனந்தி கதாபாத்திரத்தையும் தமிழ் சினிமாவை நேசிக்கும் எந்தவொரு ரசிகரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

ஃபால் படத்தில் இடம்பெற்ற காட்சி
ஃபால் படத்தில் இடம்பெற்ற காட்சி

தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா தான் நடிகை அஞ்சலியின் திறமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது என்றால் அது மிகையல்ல.

நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிக்கின்றனர் என்று கிசுகிசு வெளியானது. “எனது சித்தி என்னை கொடுமைப்படுத்துகிறார்” என்று கண்ணீர் மல்க அஞ்சலி சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி கொடுத்ததும் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

பல தடைகளைத் தாண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் அஞ்சலி.

கற்றது தமிழ் படத்தில் நடிகை அஞ்சலி
கற்றது தமிழ் படத்தில் நடிகை அஞ்சலி

பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் ஓடிடி நோக்கி வரும் வேளையில் நடிகை அஞ்சலியும் ஓடிடி பக்கம் ஒதுங்கினார்.

ஜான்சி (Jhansi), ஃபால் (Fall) ஆகிய இணையத் தொடர்களில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். இந்த இணையத் தொடர்கள் டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

ஜான்சி தொடர் 2 சீசன்களாக வந்து வெற்றி பெற்றுள்ளது. 2வது சீசன் இந்த மாதம் தான் வெளியாகியுள்ளது.

இதில் ஃபால் இணையத் தொடரின் கதை பாக்கெட் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் நாவலை போல் மர்ம முடிச்சுகள் நிறைந்த திரைக்கதையைக் கொண்டுள்ளது.

இந்த இணையத் தொடர் கனடாவில் எடுக்கப்பட்டு வெற்றி அடைந்த Vertige தொடரின் ரீமேக் ஆகும்.

மொத்தம் 7 எபிசோட்களைக் கொண்டுள்ள இந்த இணையத் தொடரில் திவ்யா எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் நடிகை அஞ்சலி. உடல் மெலிந்து பழைய அஞ்சலியாக கம்பேக் கொடுத்துள்ளார்.

ஃபால் இணையத் தொடரில் நடிகை அஞ்சலி
ஃபால் இணையத் தொடரில் நடிகை அஞ்சலி

ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் ஸ்போர்ட்ஸ் சென்டரை நடத்தி வரும் திவ்யா, முதல் எபிசோடில் மாடியிலிருந்து கீழே விழுந்து விடுகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். ஆனால், கோமா நிலைக்குப் போய்விடுகிறார். 6 மாதங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து சுயநினைவு திரும்பினாலும் குறிப்பிட்ட சில சம்பவங்கள் அவருக்கு நினைவில் இல்லாமல் போகிறது. குறிப்பாக அவர் கீழே விழுந்த அன்று நடந்ததும் மறந்து போய்விடுகிறது.

அவரே தற்கொலைக்கு முயன்றாரா?,வேறு யாராவது அவரை கொலை செய்ய முயற்சி செய்தனரா? அல்லது தவறி விழுந்தாரா? என பல கேள்விகள் நமக்கும் எழுகிறது.

பல சந்தேக கதாபாத்திரங்களை உலவ விட்டு எல்லோர் மீதும் சந்தேகம் கொள்ளும்படியாக நகர்கிறது திரைக்கதை. மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ இறுதியில் நமக்கான கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடுகிறது.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரண் நடித்துள்ளார்.

ஒரு காட்சியில் நடிகை அஞ்சலி, நடிகர் எஸ்.பி.சரண்
ஒரு காட்சியில் நடிகை அஞ்சலி, நடிகர் எஸ்.பி.சரண்

பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய், சோனியா அகர்வால், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அசத்திய நடிகர் சந்தோஷ் பிரதாப், குளு குளு படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்த நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரை பொறுத்தவரை கதாபாத்திர தேர்வு கச்சிதமாக உள்ளது.

திவ்யாவின் தோழியாக மலர் கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். எஸ்.பி.சரணுக்குள் இத்தனை நடிப்பு திறமை ஒளிந்துள்ளதா என்பதை இத்தொடரை பார்க்கும்போது நமக்கு தெரியும். அவருக்கு தமிழ் திரையுலகம் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அக்காவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளும் சகோதரியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாசமுள்ள தாயாக பூர்ணிமா பாக்யராஜ், பொறுப்புள்ள தந்தையாக தலைவாசல் விஜய் என அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கின்றனர்.

ஃபால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்
ஃபால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்

ஜீவாவுக்கும், திவ்யாவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சந்தேகம் நமக்கு தீரும் தருணம் மெய்சிலிர்க்கிறது.  இயக்குநரின் சமார்த்தியமும் பளிச்சிடுகிறது.

நெகட்டிவ் ரோலில் சஸ்டிகா ராஜேந்திரன் பிரமாதப்படுத்தியிருக்கிறார். டேனியல் கதாபாத்திரத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்த்து இருக்கலாம்.

அதேபோல், முதல் சில எபிசோட்கள் நாடகம் போன்று நகர்வது அலுப்பைத் தருகிறது. சில காட்சிகளுக்கு இன்னும்கூட கத்திரி போட்டிருக்கலாம்!

இயக்கத்துடன் ஒளிப்பதிவையும் தன் தோள் மீது சுமந்துள்ளார் சித்தார்த் ராமசுவாமி. பின்னணி இசையும் அருமை!

மொத்தத்தில் திவ்யா மாடியிலிருந்து கீழே விழுந்தது எப்படி என்ற ஒன்லைனை எடுத்துக் கொண்டு போலீஸ் விசாரணை, குடும்பம், தொழில், பாசம், பொறாமை, ஏமாற்றம், கோபம், பிள்ளை வளர்ப்பு, காதல் என அனைத்தும் கலந்த கதாபாத்திரங்களுடன் கதையை நகர்த்தியுள்ளது Fall படக்குழு. த்ரில்லிங்கான அனுபவத்துக்காக Fall தொடரை கண்டு ரசிக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.