HBD Silk Smitha: 'தானே செதுக்கி எழுந்த சிலை' விஜயலட்சுமி சில்க் ஆக மாறிய கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Silk Smitha: 'தானே செதுக்கி எழுந்த சிலை' விஜயலட்சுமி சில்க் ஆக மாறிய கதை!

HBD Silk Smitha: 'தானே செதுக்கி எழுந்த சிலை' விஜயலட்சுமி சில்க் ஆக மாறிய கதை!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 02, 2023 04:45 AM IST

சில்க் சுமிதாவின் கால்ஹீட்டுக்காக காத்திருந்தது திரை உலகம். யார் இந்த பெண் என்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியே கேட்டார் என்பது அதற்கு சான்று.

சில்க் சுமிதா பிறந்தநாள்
சில்க் சுமிதா பிறந்தநாள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்தார் விஜயலட்சுமி என்ற சில்க் சுமிதா. ஆந்திராவில் பிறந்தாலும் தமிழகத்தின் கரூர் தான் அவரது பூர்வீகம். வறுமையின் தாக்கத்தால் 4ம் வயதோடு பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டனர் குடும்பத்தினர். சிறுவயதிலேயே திருமணமும் செய்து வைத்தனர். ஆனால் கணவன் மற்றும் மாமியாரின் கொடுமையால் கணவரை பிரிந்து விட்டார்.

பின்னர் இளம் வயதில் வறுமையில் இருந்து விடுபடவும், தனது சிறு வயது ஆசையான சினிமா கனவை நிறைவேற்றவும் சென்னைக்கு வந்தார் விஜயலட்சுமி. சென்னையில் பணிப்பெண் வேலை உள்ளிட்ட கிடைத்த வேலையை செய்து கொண்டு சினிமா கனவை நனவாக்க முனைந்தார்.

அப்படி 1980ல் நடிகரும், இயக்குநருமான வினு சக்கரவர்த்தியின் உதவியால் வண்டிச்சக்கரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு மட்டும் இறுதி வரை பெரிதாக நிறைவேறவில்லை என்பதே உண்மை. முதல் படத்திலேயே சாராயம் விற்கும் பெண்ணாக சில்க் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜயலட்சுமி சுமிதா என தனது பெயரை மாற்றினாலும் முதல் படத்தில் அவருக்கு வைக்கப்பட்ட சில்க் என்ற பெயரும் அவருடன் ஒட்டிக் கொண்டது.

தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி நடிகைதானே என மலினமான விமர்சனங்களுக்கு மத்தியில் திரையுலகையும் ஒட்டு மொத்த ரசிகர் கூட்டத்தையும் கொண்டாட வைத்ததோடு நல்ல அபிமானமும் பெற்று நின்றார் சில்க் ஸ்மிதா என்று சொன்னால் மிகையல்ல. 80, 90 களில் திரை உலகில் அசைக்க முடியாத ஆளுமையாக மாறினார் சில்க் சுமிதா. ரஜினி, கமல் என உச்ச நடிகர்கள் பலருடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் படங்களின் ஒரு பாதி வசூலுக்கு காரணம் சில்க் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார்.

சில்க் சுமிதாவின் கால்ஹீட்டுக்காக காத்திருந்தது திரை உலகம். யார் இந்த பெண் என்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியே கேட்டார் என்பது அதற்கு சான்று.

கவர்ச்சி நடிகை என்பதால் அவரை பாலியல் ரீதியாக சுரண்ட ஒரு கூட்டம் இருந்த பின் தொடர்ந்தது. அதனால் எப்போதும் தனக்கென ஒரு வட்டமிட்டு அதற்குள்ளாகவே இருந்தார். அதனாலேயே பல சர்ச்சைகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, அன்று பெய்த மழையில், ரகசியபோலீஸ், நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குதம்மா என எந்த பாத்திரம் கொடுத்தாலும் தன்னால் கச்சிதமாக செய்து முடிக்க முடியும் என்பதை உணர்த்தினார். பாரதிராஜா, பாலுமகேந்திராவின் இயக்கம் கண்டு மெய்சிலித்தார் சில்க். உன்னை விட பெரிய கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்து என்று சொன்ன தந்தையிடம் சில்க்கை கமல் அழைத்துச்சென்றதாக ஒரு தகவல் உண்டு.

ஆனால் என்னதான் தான் திரையில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இது வரை ஒரு நல்ல ஆணைக்கூட நான் பார்த்ததில்லை என்ற சில்க்கின் வார்த்தைகள் அவரது வலியை உணர வைக்கும். ஒரு சமயம் பத்திரிகையாளர் ஒருவர் உங்களுக்கு நிறைவேறாத ஆசை என ஏதேனும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தான் ஒரு நக்சலைட் ஆக வேண்டும் என்று ஆசை வளர்த்தேன். ஆனால் பிரச்சனைகள் காரணமாக முடியாமல் போனது. ஆனால் அந்த நெருப்பு என் உள் எரிந்து கொண்டிருக்கிறது என்றார்.

அதிர்ந்த பத்திரிகையாளர் நக்சலைட் என்றால் தேடப்படும் குற்றவாளி என்றார். அதற்கு சில்க் அரசாங்கத்தால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மை விட தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார் சில்க்.

மாநிறம், துள்ளல் நடனம், கொஞ்சும் சிரிப்பு, சுண்டி இழுக்கும் கண்கள், வனப்பான தேகம் என திரையில் ரசிகர்களின் கண்களுக்கு கிலுகிலுப்பூட்டிய சில்க்கின் சொந்த வாழ்க்கை அத்தனை சுகமாக அமையவில்லை. திரையில் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள தெரிந்த சில்க் தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றங்களை எதிர்கொண்டார். தான் ஒரு போக பொம்மையாக பார்க்கப்படுகிறேன் என்ற வருத்தத்தை பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் சில்க். இதன் விளைவால் ஒரு கட்டத்தில் செப்டம்பர் 23ம் தேதி சில்க் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அது கொலை என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இன்று வரை சில்க் சுமிதா மரணம் மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. எது எப்படியோ ஒரு மாபெரும் திரை ஆளுமையை தமிழ் திரை உலகம் இழந்தது என்பதில் ஐயமில்லை.

அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஒவ்வோர் ஆண்டும் சில்க் சுமிதாவின் பிறந்தநாள், நினைவு நாட்களில் அவர் குறித்து எழுதப்படும் சமூக வலை தள பதிவுகள் சில்க் என்ற ஆளுமையை ரசிகர்கள் இன்றும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் சில்க்!

மறைந்து 27 வருடங்கள் கடந்த பிறகு கூட சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சில்க்கு சாயலில் இருக்கும் விஷ்ணு பிரியா தோன்றும் காட்சிகளின் போது ரசிகர்கள் மத்தியில் எழுந்த உற்சாகத்தை பார்க்கும் போது அந்த நடிகை எந்த அளவுக்கு பல தலைமுறை களையும் கடந்து மக்கள் மனதில் இன்னும் நிலைத்து நிற்பதை உணர முடிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.