தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd Kathadi Ramamurthy: Legendary Actor Kathadi Ramamurthy's Birthday!

HBD Kathadi Ramamurthy: பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி பிறந்தநாள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 02, 2024 05:15 AM IST

மெலிந்த தேகம் கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரர் "காத்தாடி" ராமமூர்த்தி என்று கேட்டால் சின்ன பிள்ளைகள் கூட தெரிந்து வைத்திருப்பார்கள். சாட்சாத் சுந்தரேச ராமமூர்த்தி தான் காத்தாடி ராமமூர்த்தி. அவரது பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்.

காத்தாடி ராம மூர்த்தி
காத்தாடி ராம மூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

1938ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டம் தஞ்சாவூர் கும்பகோணத்தில் பிப்ரவரி 2ம் தேதி சுந்தரேச ஐயரின் மகனாக பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளி கல்வி முடித்துவிட்டு சென்னையில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு சிறு வயதிலேயே நாடகங்கள் மீதான ஆர்வம் அதிகம். அந்த காலகட்டத்தில் நாடகங்கள் தான் பிரதான பொழுது போக்கு. திரைப்படம் அசூர வளர்ச்சி அடைய ஆரம்பித்த காலம். அப்போது கூட நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

கல்லூரி படிப்பு காலத்தில் தான் நாடகத்துறையில் ஆர்வத்தோடு ஈடுபட்டு பல நாடகங்களில் மேடை ஏறினார். விவேக் பைன் ஆர்ட்ஸ் தொடங்கி நடிக்கவும் இயக்கவும் செய்தார். அதில் கோமதியின் காதலன் என்ற நிகழ்வு மிக முக்கியமானது. ஆர்.ஆர்.சபாவின் செயலாளர் நடேசனுடன் இருக்கும் தொடர்பை வைத்து எழுத்தாளர் நடேசன், பகீரதன், கூத்தபிரான் என்று இலக்கிய வட்டத்தை பெரிதாக்கினார்.

நாடகங்களில் நடித்து கொண்டிருந்த காத்தாடி விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக நாடகத்துறையில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து சினிமாவை நோக்கி செல்வதையும் கவனித்து தானும் திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று தனது பாப்புலாரிட்டி தனது நாடகங்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் பாதையின் தடத்தை விரிவாக்கினார.

பள்ளி, கல்லூரியில் ஆர்வத்தோடு ஈடுபட்ட நாடகத்துறையில் படிப்பு முடிந்ததும் முழு நேர நாடக கலைஞர் ஆக மாறி விட்டார். அவர் தந்தையும் நாடக நடிகராக இருந்ததால் எளிதாக முடிந்தது. நாடகத்தில் மட்டும் தான் மேடையில் தனது படைப்புக்கும் நடிக்கும் திறனுக்குமான பாராட்டு உடனுக்குடன் உயிரோட்டம் ஆக மக்கள் கைதட்டல் மற்றும் கரகோசத்தில் உடனே அறிந்து மாற்றம் செய்ய முடியும். 

திரைப்பயணம்

திரைப்பட துறையில் அப்படி முடியாது. தொடர்ந்து நாடகங்களில் நடித்தாலும் அனைத்து வகையான இடங்களுக்கும் தனது பெயர் சென்று அடைவதற்காக சினிமாவில் எட்டி பார்த்தார். ஆனாலும் பின்னாளில் நாடகத்துறையில் சிறந்து விளங்கிய டெல்லி கணேஷ், சோ.ராமசாமி, விசு, கிரேஸிமோகன் ஆகியோர் எல்லாம் இவருடைய வார்ப்புகள் தான். 

இவரது தயாரிப்பில் உருவான பல நாடகங்கள் அதிக அளவில் நிகழ்ச்சி நடைபெற்றதோடு மட்டுமின்றி முக்கிய நகரங்களில் எல்லாம் பலமுறை மேடை ஏறியது. அந்த காலங்களில் அவ்வளவு பிரபலம். சினிமாவில் கிடைக்கும் புகழ் தனது நாடக வாழ்க்கை க்கு உதவும் என்று நம்பியவர்.

விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தவர் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து 1964 ல் ஸ்டேஜ் கிரியேசன்ஸ் என்ற ஒரு குழுவை அமைத்து இன்று வரை நடத்தி வருகிறார். இந்த குழுவினர் 32 க்கும் மேற்பட்ட நாடகங்கள் தயாரித்து 7500 மேடைகளுக்கும் மேலே நாடகங்களை இந்தியா மற்றும் பல நாடுகளில் நிகழ்த்தி உள்ளனர். 

காத்தாடி என்ற பெயர் கூட ஒரு நாடக கதாபாத்திரம் தான். கல்லூரியில் படிக்கும் இறுதி வருடவாக்கில் இயக்குனர் சோவின் "எனக்கு கிடைத்தால்" என்ற நாடகத்தில் வரும் பத்திரிகை நிறுவனத்தில் கார்ட்டூனிஸ்டாக '"காத்தாடி" என்ற பெயரில் நடித்திருக்கிறார். அந்த நாடகம் பிரபலமான போது ரசிகர்கள் இவரை காத்தாடி என்ற அடையாள பெயரில் அழைத்தது தனது பெயரோடு நிரந்தரமாக ஒட்டி கொண்டது. 

வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை விரசமில்லாமல் நகைச்சுவை உணர்வு கலந்து சமூக கருத்தை மக்களின் மனதில் பதிய வைப்பவர். விசுவை இயக்குனர் ஆக்கியது இவர் தான். டெல்லி கணேஷை நடிகராக அறிமுகம் செய்ததும் இவர் தான். ஜெய்சங்கர் கல்லூரியில் இவருடன் படித்தவர். அவரையும் இவர் தான் தனது நாடகம் மூலம் அறிமுகம் செய்தார். 

மாதவன் இயக்கிய "பெண்னே நீ வாழ்க" என்ற ஜெய்சங்கர் படம்தான் இவருக்கு முதல் சினிமா. இவருடைய நாடகங்கள் பட்டிணபிரவேசம், டௌரி கல்யாணம் வைபோகமே, சிரித்து கொண்டே இருக்கிறோம் ஆகியவை திரைப்படங்களாகவும் மாறியது உண்டு. இவருடைய நாடகங்களை பாலசந்தர் இயக்கியிருப்பது பலருக்கு தெரிவதில்லை. அதே போல் இவரது நாடகம் பட்டிணபிரவேசம் பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. சினிமாவில் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களோடு நடித்தாலும் இன்னும் விடாமல் நாடகத்துறையில் முழுஎமூச்சாக இயங்குபவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முதன்முதலில் நாடகம் கொண்டு வந்தவர்.

துப்பறியும் சாம்பு, ஆடுகிறான் கண்ணன், இளவரசி, பொம்மலாட்டம், மடிப்பாக்கம் மாதவன், சின்னபாப்பா பெரியபாப்பா, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, சத்யா பிள்ளைநிலா ஆகிய தொலைக்காட்சி தொடர்கள் இவரது நடிப்பில் மிகவும் முக்கியமானவை.

எதிர் நீச்சல், பட்டிக்காடா பட்டணமா, சூரிய காந்தி, நான் அவனில்லை, அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல், ஹிட்லர் உமாநாத் என்று இவர் நடித்த திரைப்பட பட்டியல் நீளமானது. திறமையை பாராட்டி இவருக்கு "அமிர்த புரஸ்கர் விருது'" துணை குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. சன்டிவி விருதும் பெற்றுள்ளார்.

இப்படி கலைத்துறையில் கோலோய்ச்சிய காத்தாடி ராமமூர்த்தி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது. 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.