HBD Jiiva: ‘வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் வாலிபன்.. வளர்ந்து கொண்டே இருக்கும் நாயகன்’ ஜீவா எனும் தேடல் ஹீரோ!
‘வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் வாலிபன்.. வளர்ந்து கொண்டே இருக்கும் நாயகன்’ ஜீவா எனும் தேடல் ஹீரோவின் திரைஉலக பயணம் நெடியதாய் அமைய வாழ்த்துவோம்.
இன்றைய தமிழ் உலகில் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்பது ஒரு பெரிய போராட்டம்... அந்த நிலையில் தனது நடிப்பு திறனாலும், கதைகளை தேர்வு செய்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தி தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி யில் மினிமம் கேரண்ட்டி ஹீரோவாக தொடர்ந்து பயணிக்கிறார் நடிகர் ஜீவா. அவரின் பிறந்த நாள் இன்று.
தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிற ராஜஸ்தானை சேர்ந்த ஆர்.பி.சௌத்ரி மற்றும் மெகஜாபீன் அவர்களின் கடைசி மகனாக சென்னை யில் 1984 ஜனவரி 4 அன்று பிறந்தார். அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷ் அவர்களும் நடிகராவார். மொத்தத்தில் திரைப்பட துறை பின்னனியில் உள்ள குடும்பம்.
தனது தந்தையின் தயாரிப்பில் தனது ஏழாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து விட்டார். எடுப்பான சிவப்பு முகம். எப்போதும் சின்ன சிரிப்போடு மீசை இல்லாத வழுவழு முகமாய் அப்பாவின் தயாரிப்பில் ரவிமரியாவின் இயக்கத்தில் இருபதுக்கும் குறைவான வயதிலேயே ஹீரோவாக "ஆசை ஆசையாய்" படத்தின் மூலம் 2003ல் அறிமுகம் செய்யப்பட்டார்.
2006 ல் அமீர் இயக்கத்தில் வெளிவந்த "ராம்" திரைப்படம் இவரது திறமையை வெளிப்படுத்த உதவியது. மனநலம் குறைந்த மகனுக்கும் தாய்க்கும் ஆன உறவுகளை மையப்படுத்தி வந்த கதையில் எல்லோருடைய மனதையும் அள்ளி கொண்டார்.. சிறந்த நடிகர் வகையில் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருதை பெற்றார். சிவாஜி கணேசனுக்கு அடுத்து இந்த விருதை பெற்றவர்.
தொடர்ச்சியாக கற்றது தமிழ், ஈ, ரௌத்திரம், டிஷ்யூம், கோ, முகமூடி, நண்பன் என்று வித விதமான வித்தியாசம் காட்டும் கதைகளை தேர்வு செய்து நடித்தார். இடை இடையே சிவா மனசுல சக்தி, கலகலப்பு, போக்கிரி ராஜா, கச்சேரி ஆரம்பம், திருநாள் என்று வணிக படங்களிலும் மக்களை கவர்ந்தார்.
2007 ல் கட்டிட உள் அலங்கார கலை நிபுணரான சுப்ரியாவை மணந்து கொண்டார்.
இவரின் நடிப்பில் யாத்ரா 2, பொன்குமரன் இயக்கத்தில் கோல்மால், முத்துக்குமார் இயக்கத்தில் ஜெமினி கணேசன் என்று வரிசை கட்டி பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் தவிர சில மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கம் சார்பில்ந நடத்தும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் உற்சாகமாக பங்கேற்பார்.
எப்போதும் தமிழ் பிலிம் இண்டஸ்ட்ரியில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் ஈட்டி தரும் நடிகர் ஜீவா இன்று நாற்பத்தி ஒன்று என்ற வாழ்க்கை படியில் கால்களை அழுத்தமாக எடுத்து வைக்கிறார்.
‘வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் வாலிபன்.. வளர்ந்து கொண்டே இருக்கும் நாயகன்’ ஜீவா எனும் தேடல் ஹீரோவின் திரைஉலக பயணம் நெடியதாய் அமைய வாழ்த்துவோம்.
டாபிக்ஸ்