HBD BaluMahendra : பல்துறை வித்தகர் பாலுமகேந்திரா பிறந்த தினம் இன்று
HBD BaluMahendra : தமிழ் திரையுலகில் ஒளியை வைத்து கவிதை படைத்தவர், ஓவியம் வரைந்தவர், கண்களால் காண்பவற்றையெல்லாம் அதிசய பிம்பங்களாக மாற்றக்கூடியவர் என்றெல்லாம் கலை ரசிகர்களால் வர்ணிக்கப்படக்கூடியவர் பாலு மகேந்திரா.

ஈழத்தில் மட்டகளப்பு அருகேயுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்து, மலையாள திரையுலகில் வாழ்ந்து, தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த திரைப்படங்களை உருவாக்கிய வித்தக இயக்குனரான இவர், மொழிகளுக்கு அப்பாற்பட்டு நாடெங்கும் திரைக்கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள் கொண்டாடினர்.
தான், ஆறாம் வகுப்பு படிக்கும்போது இலங்கையில் ஒரு ஆங்கில சினிமா படப்பிடிப்பில் இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த டேவிட் லீனின் ஆளுமையை பார்த்து, தானும் இயக்குனராக வேண்டும் ஆசைப்பட்டவர் பாலுமகேந்திரா.
அந்த உந்துதலில் 1966 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா வந்து இணைந்த இடம் புனேவில் உள்ள Film and Television Institute of India. ஆனால் அங்கு தனக்கு பிடித்தமான இயக்குனர் துறையை செய்ய முடியாமல், வேறு வழியின்றி ஒளிப்பதிவு துறையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.